இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா கடந்த காலங்களில் ஹோட்டல், டிரஸ்ஸிங் ரூம் மற்றும் அணி பேருந்து முதலிய இடங்களில் தனது அணிகலன்கள், உடைமைகள், முக்கிய ஆவணங்கள், உபகரணங்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் போன்றவற்றை கவனக்குறைவாக விட்டுச் சென்ற பல சந்தர்ப்பங்கள் நடந்துள்ளன.
ரோகித் சர்மாவின் மறதி குறித்து விராட் கோலி முதலிய அவருடைய அணியினர் மற்றும் நண்பர்கள், இந்திய அணி கேப்டனின் வித்தியாசமான பழக்கம் குறித்து பலமுறை வெளிப்படுத்தியுள்ளனர். பலமுறை நாம் களத்திலேயே பவுலிங்கா? பேட்டிங்கா? எதை தேர்ந்தெடுக்க நினைத்தோம் என ரோகித் சர்மா குழம்பியதை பார்த்திருக்கிறோம்.
இந்நிலையில் இன்றைய அயர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் தன்னுடைய மறதியான சம்பவத்தால் அனைவரையும் சிரிப்புக்குள் தள்ளியுள்ளார் இந்திய கேப்டன் ரோகித் சர்மா.
2024 டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக மோதிய இந்திய அணி, டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.
டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்த இந்திய கேப்டனிடம் அணியின் காம்பினேசன் குறித்து கேட்கப்பட்டது. அப்போது எந்தெந்த வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை என கூறிய ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிடும் போது, லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலின் பெயரை நினைவுபடுத்துவதில் சிரமத்தை அனுபவித்தார். அது காண்போரை நகைப்புக்குள் தள்ளியது.
டாஸ் வென்ற பிறகு பேசிய ரோகித் சர்மா, ”நாங்கள் பந்து வீசப் போகிறோம். இந்த புதிய நிலைமைகளின் சவால்களை எதிர்கொள்ளும் விதமாக எங்களை நாங்களே தயார் செய்துவருகிறோம். இது சவாலானது தான் என்றாலும், அனைத்திற்கும் தயாராகவே இருக்கிறோம். பயிற்சி ஆட்டத்தில் இதேபோன்ற ஆடுகளத்தில் விளையாடியதால், என்ன எதிர்பார்க்கவேண்டும் என்ற புரிதல் இருக்கிறது. நிலைமைகளைப் பற்றி அதிகம் உறுதியாக தெரியவில்லை, எனவே எங்களுக்கு முன்னால் ஒரு இலக்கை வைத்திருப்பது நல்லது என்று நினைக்கிறேன். அணியில் குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் மற்றும் இன்னும் ஒருவர் இடம்பெற மாட்டார் (சாஹலின் பெயரை மறந்துவிட்டு சிரித்துக்கொண்டே கூறினார்)” என்று டாஸின் போது ரோகித் சர்மா கூறினார்.
இந்திய அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, இந்திய பவுலர்களை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்து 96 ரன்னில் பரிதாபமாக ஆட்டமிழந்தது.
அபாரமாக பந்துவீசிய ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள், அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகள், சிராஜ், அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட் என வீழ்த்தினர்.
97 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வரும் இந்திய அணியில் விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும் ரோகித் சர்மா, ரிஷ்ப் பண்ட் சிறப்பாக விளையாடினர். ரோகித் 36 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். இந்திய அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.