Rohit - Hardik PT
T20

BCCI அழுத்தத்தால் தான் ஹர்திக் தேர்வு.. டி20-லிருந்து ஓய்வுபெற ரோகித் முடிவு! அதிர்ச்சி தகவல்!

ஹர்திக் பாண்டியா இருப்பின் காரணமாக டி20 உலகக்கோப்பையோடு ரோகித் சர்மா குறுகிய வடிவத்தில் ஓய்வுபெற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Rishan Vengai

ஹர்திக் பாண்டியா மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் இடையேயான கருத்து மோதல், மும்பை இந்தியன்ஸ் அணியை தாண்டி தற்போது இந்திய அணிவரை நீண்டுள்ளது. மும்பை அணியை 5 முறை ஐபிஎல் கோப்பைக்கு அழைத்துச்சென்ற ரோகித் சர்மாவை ஓரங்கட்டிய மும்பை அணி, கேப்டன்சி பொறுப்பை தூக்கி ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைத்தது.

மும்பை அணியின் இந்த செயலால் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக சில வீரர்களும், ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக சில வீரர்களும் என அணிக்குள் இரண்டு குழுக்களாக பிரிந்ததாக தகவல்கள் வெளியாகின. வீரர்களுக்குள் இருந்த இந்த பிளவால் மும்பை அணி வெற்றிபெறுவதிலும் சொதப்பி முதல் அணியாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது.

hardik pandya

இதற்கிடையே ரோகித் சர்மா உடனான கருத்துவேறுபாடு காரணமாகவும், ஐபிஎல் தொடரில் மோசமாக செயல்பட்டதாலும் ஹர்திக் பாண்டியா டி20 உலகக்கோப்பை அணியில் இருக்க மாட்டார் என்று கூறப்பட்டது. அதற்கேற்றார்போல் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் ரிஷப் பண்ட் தான் துணை கேப்டனாக செயல்படபோகிறார் என்ற தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா!

துணை கேப்டனாக இருக்க மாட்டார், அணியிலேயே இருக்க மாட்டார் என்ற சர்ச்சை தகவல்கள் எல்லாவற்றையும் மீறி, ஹர்திக் பாண்டியா இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்ததோடு மட்டுமில்லாமல் துணை கேப்டனாகவும் பெயரிடப்பட்டார்.

Rohit Sharma

செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் தலைமையில் விளையாடுவது சாதாரணம் தான் என கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதேநேரம் துணை கேப்டன் பதவி குறித்து பேசிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், ”துணை கேப்டனாக நியமிக்கலாமா வேண்டாமா என்ற இடத்தில் ஹர்திக் பாண்டியா இல்லை, ஃபார்மில் இருந்தால் அவரை விட சிறந்த ஆல்ரவுண்டர் வேறு யாருமில்லை” என்று பேசினார்.

இந்திய கிரிக்கெட் அணி

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (வி.கீ), சஞ்சு சாம்சன் (வி.கீ), ஹர்திக் பாண்டியா (து.கே), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

மாற்று வீரர்கள்

ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹமது, ஆவேஷ் கான்

டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் ரோகித்! ஹர்திக் தான் காரணம்?

எல்லா சர்ச்சைகளும் முடிவுக்கு வந்துவிட்டது என நினைத்தால், தற்போது ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாகவும், அதற்கு காரணம் ஹர்திக் பாண்டியா தான் எனவும் தகவல்கள் வெளியாகி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஹர்திக் பாண்டியா

டைனிக் ஜாக்ரன் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி, ”டி20 உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்டியா இடம்பிடித்ததில் ரோகித் சர்மாவிற்கு மகிழ்ச்சியில்லை. பிசிசிஐ நிர்வாகிகள் கொடுத்த அழுத்தத்தால் தான் ஹர்திக் பாண்டியா இடம்பிடித்துள்ளார். அவர் டி20 கிரிக்கெட் வடிவத்தின் நிரந்தர கேப்டனாக பார்க்கப்படுவதால், அவரை அணியில் இருந்து நீக்க முடியாது என்று பிசிசிஐ கூறிவிட்டது. இந்த முடிவில் ரோகித் சர்மா மகிழ்ச்சியடைவில்லை என்றும், அதனால் டி20 உலகக்கோப்பைக்கு பிறகு ஒட்டுமொத்தமாக குறுகிய வடிவ கிரிக்கெட்டிலிருந்து ரோகித் சர்மா ஓய்வுபெற முடிவெடுத்திருப்பதாகவும்” தகவல் வெளியாகியுள்ளது.