இந்திய அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் மிதந்து வருகிறது. அதேநேரத்தில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் டி20 போட்டி ஓய்வு குறித்து விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், அவர்களுடைய ஜெர்சிக்கும் ஓய்வளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு வருவதுதான் தற்போது பேசுபொருளாகி உள்ளது. இந்திய அணிக்காக ரோகித் சர்மா 45 என்ற எண் கொண்ட ஜெர்சியையும், விராட் கோலி 18 என்ற எண் கொண்ட ஜெர்சியையும் அணிந்து விளையாடி வருகின்றனர்.
இந்தச் சூழலில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பையை இந்திய அணி, மீண்டும் கைப்பற்றியதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தனர். என்றாலும் அவர்கள் இருவரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளனர்.
ஆனால், அதற்குள் அவர்களுடைய ஜெர்சி நம்பருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் எனப் பலரும் குரல் எழுப்பி வருவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, “இப்படியே ஒவ்வொரு ஜெர்சி நம்பருக்கும் ஓய்வு கொடுத்துவிட்டால், எதிர்காலத்தில் இளம் வீரர்களால் அவர்களுக்கு பிடித்த நம்பரைக்கூட ஜெர்சியில் எழுத முடியாது. ஏற்கெனவே நம்பர் 10 (சச்சின் தெண்டுல்கர்) மற்றும் நம்பர் 7 (தோனி) ஆகிய ஜெர்சி எண்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுவிட்டது. ஓர் இளம் வீரர் நம்பர் 10 அல்லது நம்பர் 7 ஆகியவற்றை ஜெர்சியில் வேண்டுமென்று நினைத்தால்கூட, இனி கிடைக்காது.
என்னைப் பொறுத்தவரை இது சரியான அணுகுமுறை கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.