தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதை அடுத்து, 2024 டி20 உலகக்கோப்பையை மீண்டும் கைப்பற்றியுள்ளது. அதேநேரத்தில், தென்னாப்பிரிக்கா அணிக்கு ஒவ்வொரு முறையும் சோகம் தொடர்கிறது.
நேற்றைய போட்டியில்கூட, 16 ஓவர்கள் வரை அவர்களது வசம் இருந்த போட்டி, அதன்பிறகு பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவின் சிறந்த பந்துவீச்சு காரணமாக இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது. இப்படி, கைக்கு வந்த லட்டை விட்ட கவலையில் அவர்கள் மைதானத்தில் சோகமாய் அமர்ந்திருந்தனர்.
அந்த வேளையில் இந்திய அணியோ ஒருபுறம் மகிழ்ச்சியிலும் மறுபுறம் ஆனந்தக் கண்ணீரிலும் நனைந்தது. என்றாலும், தென்னாப்பிரிக்கா வீரர்களின் இந்த நிலையைக் கண்ட இந்திய வீரர் ரிஷப் பண்ட் தென்னாப்பிரிக்க வீரர்கள் அருகில் சென்று அவர்களை தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறினார். மூத்த வீரர் க்விண்டன் டி காக் அவரது மகளுடன் சோகமாக அமர்ந்திருந்தார்.
அப்போது ரிஷப் பண்ட் அவருடன் சில வார்த்தைகள் பேசி அவரை புன்னகைக்க வைத்தார். மேலும், சில தென்னாப்பிரிக்க வீரர்களுடன் அவர் ஆறுதலாகப் பேசினார். ரிஷப் பண்டின் இந்த செயல் நெகிழ வைக்கும் வகையில் இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: T20WC 2024 | உலகக்கோப்பையுடன் ஓய்வு... சத்தமின்றி 7 சாதனைகளைப் படைத்த ரோகித் சர்மா!