ரிங்கு சிங் web
T20

”சிறுவயதில் 10ரூ கிடைக்காதா என்று இருந்தேன்..” - குறைவான சம்பளம் குறித்து துறவியை போல் பேசிய ரிங்கு!

தன்னுடைய அணியில் இருக்கும் மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடி வாங்கும் போது, 7 வருடமாக ஒரே அணியில் இருந்துவரும் ரிங்கு சிங் 55 லட்சத்தை தான் சம்பளமாக பெற்றுவருகிறார்.

Rishan Vengai

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஃபினிசிங் வீரராக ஜொலித்துவரும் ரிங்கு சிங், அந்த அணியில் 7 வருடங்களாக இருந்தாலும் அவருக்கான சம்பளம் வெறும் 55 லட்சமாகவே இருந்துவருகிறது. சில ஐபிஎல் சீசன்களுக்கு முன்பு வெல்லவே முடியாத இடத்தில் இருந்த ஒரு போட்டியை, யாஷ் தயாள் வீசிய 20வது ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை பறக்கவிட்டு முடித்துவைத்த ரிங்கு சிங் KKR அணியின் சூப்பர் ஹீரோவாக மாறினார்.

அதற்குபிறகு அவருடைய திறமையை மதித்த இந்திய அணி அவருக்கு சர்வதேச போட்டியில் அறிமுகம் கொடுத்தது. இந்திய அணிக்காக விளையாடிய போதிலும் சில அபாரமான ஃபினிசிங் மூலம் இந்திய கிரிக்கெட்டிலும் தன்னுடைய முத்திரையை பதித்தார். இந்திய டி20 உலகக்கோப்பை அணியிலும் ஒரு அங்கமாக இருக்கப்போகிறார்.

RInku SIngh

இந்நிலையில் ரிங்கு சிங் தன்னுடைய திறமைக்கான சம்பளத்தை வாங்குகிறாரா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால் ரிங்கு சிங் 5 சிக்சர்களை விளாசிய யாஷ் தயாள் 5 கோடி சம்பளம் பெறும் அதேநேரத்தில் ரிங்கு சிங் வெறும் 55 லட்சம் மட்டுமே சம்பளமாக பெற்றுவருகிறார்.

Rinku Singh

ஒருவேளை அவர் கேகேஆர் அணியிலிருந்து வெளியேறி ஏலத்திற்கு சென்றால், ரிங்கு சிங் 8-10 கோடி வரையிலான சம்பளத்தை பெறவாய்ப்பு இருக்கிறது. ஆனால் சம்பளம் குறித்து பேசியிருக்கும் ரிங்கு சிங், ஒரு துறவியை போல என்ன எடுத்துவந்தோம் எடுத்துச்செல்ல போகிறோம், நான் தற்போது வாங்கும் சம்பளத்திலேயே நிறைவாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

போகும்போது எதையும் கொண்டுசெல்ல போவதில்லை!

உங்கள் அணியில் மிட்செல் ஸ்டார்க் 24 கோடி வாங்கும் நிலையில், நீங்கள் மட்டும் குறைவான சம்பளம் வாங்குகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ரிங்கு சிங், “50-55 லட்சமே எனக்கு அதிகம் தான்.. ஆரம்பிக்கும் போது இவ்வளவு சம்பாதிப்பேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. முன்பு சிறுபிள்ளையாக இருந்தபோது 5 அல்லது 10 ரூபாய் கிடைத்துவிடாதா என்று இருந்தேன். எப்படியோ தற்போது எனக்கு 55 லட்சம் ரூபாய் கிடைக்கிறது, அதனால் கடவுள் கொடுத்திருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 55 லட்சம் ரூபாயில் நான் மிகவும் நிறைவாக இருக்கிறேன், பணம் என்னிடம் இல்லாதகாலத்தில், ​​​​பணத்தின் மதிப்பை நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன்” என்று டைனிக் ஜாகரனுக்கு அளித்த பேட்டியில் ரிங்கு கூறியுள்ளார்.

rohit - rinku

மேலும் பணத்தை தேடிசெல்வதில் எதுவும் கிடைத்துவிடாது என்று துறவியை போல பேசிய ரிங்கு சிங், “இன்றைய சூழலில் உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் இதெல்லாம் ஒரு மாயை, நீங்கள் வரும்போது எதையும் கொண்டு வரவில்லை, எதையும் கொண்டு செல்லவும் போவதில்லை. காலம் எப்போது மாறும் என்று உங்களுக்குத் தெரியாது. அதனால் நீங்கள் எந்த வழியில் வந்தீர்களோ அதேவழியில் போக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என ரிங்கு சிங் பேசியிருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.