rinku - rohit x
T20

ரிங்கு மனம் உடைந்துவிட்டார்.. இனிப்பு, வெடி உடன் தயாராக இருந்தோம்! -எமோசனலாக பேசிய ரிங்கு சிங் தந்தை

Rishan Vengai

பரபரப்பாக நடந்துவரும் 2024 ஐபிஎல் தொடர் வரும் மே 26-ம் தேதி முடிவடையும் நிலையில், 2024 டி20 உலகக்கோப்பை தொடரானது ஜூன் 2-ம் தேதி முதல் நடைபெறவிருக்கிறது.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கபட்ட நிலையில், ”ரிஷப் பண்ட், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான், கலீல் அகமது” போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு பிரதான பினிசராக இருந்த ரிங்கு சிங்கின் பெயர், இந்திய அணியின் 15 வீரர்கள் பட்டியலில் இல்லாமல் போனது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ரிங்கு சிங் மற்றும் நடராஜன் இரண்டு வீரர்களுக்கும் 15 வீரர்கள் பட்டியலில் இடம் கொடுத்திருக்க வேண்டும் என ரசிகர்களுடன் பல முன்னாள் வீரர்களும் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்திரா சிங் தனது மகன் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு என்ன நடந்தது என்பதை வேதனையுடன் தெரிவித்தார்.

ரிங்கு மிகவும் மனம் உடைந்துவிட்டார்..

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் இடம்பெறாதது குறித்து பேசிய ரிங்கு சிங் தந்தை, “எங்களுக்கு எப்படியும் ரிங்கு சிங் உலகக்கோப்பைக்கான 11 வீரர்கள் கொண்ட அணியில் இருப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால்தான் தற்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ரிங்கு சிங் உலகக்கோப்பை அணியில் இருக்கப்போகிறார் என்பதை கொண்டாட இனிப்புகள், பட்டாசுகள் எல்லாம் வாங்கி தயாராக இருந்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை” என்று வேதனையுடன் கூறினார்.

Rinku Singh

ரிங்கு சிங் எப்படி அதை எதிர்கொண்டார் என்பது குறித்து பேசிய அவர், “ரிங்கு சிங் மிகவும் மனம் உடைந்துவிட்டார். முதலில் தன்னுடைய அம்மாவிடம்தான் ஃபோன் செய்து பேசினார், நான் இந்திய அணியின் 15 வீரர்கள் கொண்ட அணியில் இடம்பெறவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார். ஆனாலும் நான் இந்திய அணியுடன் பயணிக்க போகிறேன்” என்று தெரிவித்ததாக அவருடைய தந்தை வெளிப்படுத்தினார்.

rinku singh

ரிங்கு சிங் நீக்கம் குறித்து பேசியிருந்த முன்னாள் டீம் செலக்டர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ரிங்கு சிங் இல்லாத டி20 உலகக்கோப்பை தேர்வை குப்பை எனத் தெரிவித்தார். ரிங்கு சிங் எப்போதும் இந்திய அணிக்கு தேவையான அனைத்தையும் செய்துள்ளார், தென்னாப்பிரிக்காவில் மேட்ச் வின்னிங் நாக் விளையாடியதை மறந்துவிட்டீர்களா? என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.