தோனி - பாண்டிங் web
T20

”14 ஆண்டுகளாக யாரும் அதை செய்யவில்லை..” | CSK-ல் தோனியின் முக்கியத்துவம் குறித்து ரிக்கி பாண்டிங்!

மகேந்திர சிங் தோனி குறித்து பேசியிருக்கும் ரிக்கி பாண்டிங், அவர் ஆடும் அணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர் இருக்கிறார் என்பதே போதுமானது என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

Rishan Vengai

2025 ஐபிஎல் தொடர் குறித்து மிகப்பெரிய பேசுபொருளாக இருந்தது இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி விளையாடுவாரா? அல்லது நிரந்தரமாக ஓய்வு என்ற அறிவிப்பை வெளியிடுவாரா? என்பது தான்.

ஆனால், 2025 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு பட்டியலில் எம் எஸ் தோனியின் பெயரையும் இணைத்திருக்கும் சிஎஸ்கே நிர்வாகம், மகேந்திர சிங் தோனி எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

தோனி

தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிப்படியில் இருந்துவரும் மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட்டில் தன்னுடைய ஒவ்வொரு நிகழ்வையும் ரசித்துவருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தோனியின் எதிர்காலம் குறித்து பேசியிருக்கும் 2 உலகக்கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங், தோனியின் இருப்பு என்ன செய்யும் என்று பேசியுள்ளார்.

சிறந்த வீரர்களால் மட்டுமே இதை செய்யமுடியும்..

ஐசிசி ரிவ்யூ உரையாடலில் பேசியிருக்கும் ரிக்கி பாண்டிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் எதிர்காலம் என்ன என்பது குறித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “இரண்டு சீசன்களுக்கு முன்பு அவர் தனது மோசமான ஐபிஎல் தொடரை கொண்டிருந்தார். ஆனால் கடந்த ஆண்டு மீண்டும், தன்னுடைய பழைய எம்.எஸ். தோனி போன்ற அதிரடியான ஆட்டத்தால் உண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

20 பந்துகள் பேட்டிங் செய்தாலும் மிகப்பெரிய தாக்கத்தை போட்டியில் ஏற்படுத்துகிறார். சிறந்த வீரர்களால் மட்டுமே 14 ஆண்டுகள் இப்படியான தாக்கத்தை கொடுக்க முடியும்” என்று பாராட்டினார்.

தோனி

மேலும், “தற்போது அணிக்குள் வந்திருக்கும் அவருக்கு இது சரியான ஐபிஎல் தொடராக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.. அவர்கள் சீசன் முழுவதும் அணிக்குள் அவரைப் பெறாமல் போகலாம். அவரை ஆலோசனைக்காக வெளியேவிட்டுவிட்டு சிறந்ததைப் பெறுவதற்காக ஓய்வெடுக்க அனுமதிக்கலாம்.

அவர் ஆடும் அணியில் இருந்தாலும், கேப்டனாக இல்லாவிட்டாலும் கூட எப்போதும் ஒரு வழிகாட்டியாகவும் தலைவராகவும் இருப்பார். அவர் விளையாடாமல் ஓரத்தில் அமர்ந்தாலும் அவரை விளையாட்டிலிருந்து வெளியே வைக்கமுடியாது அதுதான் அவர்... சென்னை, அந்தத் தலைமைக்காக அவரை களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கொண்டு வருவார்கள்” என்று பாண்டிங் மேலும் கூறினார்.