ரோகித் - சூர்யகுமார் - பண்ட் - தோனி web
T20

தோனிக்கு மாற்றுவீரராக CSK-விற்கு செல்லும் பண்ட்? MI-ஐ விட்டு வெளியேறும் Rohit-SKY? வெளியான தகவல்கள்!

2025 ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வை அறிவிப்பார் என்ற நிலையில், ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து வெளியேறி சிஎஸ்கே அணிக்கு செல்வார் எனத் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Rishan Vengai

கிரிக்கெட்டில் 2024 வருடமானது பல ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக மாறியுள்ளது. டேவிட் வார்னர், டிரெண்ட் போல்ட், ரோகித் சர்மா, விராட் கோலி என 10 ஆண்டுகளாக தங்களுடைய கிரிக்கெட் உலகை ஆட்டிப்படைத்த ஹீரோக்கள் ஓய்வு அறிவிப்பை அறிவித்துவிட்டனர்.

அந்தவகையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், மகேந்திர சிங் தோனி என்ற மாபெரும் பெயர் இன்னும் ஐபிஎல் தொடர்களில் வானை அதிரச்செய்துவருகிறது. கடந்தாண்டே ஓய்வு பெற்றுவிடலாம் என முடிவுசெய்த மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியை துறந்து ரசிகர்களுக்காக ஒரு வீரராக மட்டும் சிஎஸ்கே அணியில் பங்கேற்று விளையாடினார்.

தோனி

கடந்தாண்டே தோனி ஓய்வுபெற்றுவிடுவார் என கண்ணீரோடு அவரை பின்தொடர்ந்த ரசிகர்கள், 2025-ம் ஆண்டு மிகப்பெரிய மொமண்ட்டுக்காக காத்திருக்கின்றனர். அடுத்தாண்டு தோனி அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றுவிடுவார் என்ற கவலை இருந்தாலும், சிஎஸ்கே அணி மீது தொடர்ந்து தங்களுடைய விஸ்வாசத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய சூழலில் தோனி சென்றுவிட்டால் அவருக்கு மாற்றுவீரர் மற்றும் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்விக்கு தற்போது ரிஷப் பண்ட் என்ற பெயர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

CSK-விற்கு செல்லும் பண்ட்.. MI விட்டு வெளியேறும் Rohit-SKY..

வெளியாகியிருக்கும் தகவல்களின் படி, “மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்பட்ட கேப்டன்சி மாற்றத்திற்கு பிறகு ரோகித் சர்மா MI-லிருந்து வெளியேறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த அணி 5 கோப்பை வென்ற ரோகித் சர்மாவை விடுத்து ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. ஆனால் இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பையை வென்ற ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். ரோகித் சர்மா வெளியேறும் நிலையில், அவருக்கு நெருக்கமாக இருக்கும் சூர்யகுமார் யாதவும் மும்பை நிர்வாகத்தை விட்டு வெளியேறுவார் என்றும், அவரை கொல்கத்தா அணி பின்தொடரும் என்றும்” ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

rishabh pant

அதேபோல, டெல்லி கேபிடல்ஸ் அணி ரிஷப் பண்ட்டிடம் மகிழ்ச்சியடையவில்லை என்பதால் டெல்லியை விட்டு அவர் வெளியேறிவிடுவார் என்றும், அதேவேளையில் தோனி ஓய்விற்கு பிறகு அவருக்கு மாற்றான சரியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை எதிர்நோக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரிஷப் பண்டிடம் செல்லும் வாய்ப்பு அதிகம் என்றும் தெரிவிக்கிறது.

rohit sharma, sky

அத்துடன் 2024 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஓனர் சஞ்சீவ் கோயங்காவிற்கும், கேஎல் ராகுலுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ராகுல் லக்னோ அணியிலிருந்து வெளியேறுவார் என்றும், அவரை ஆர்சிபி அணி தக்கவைத்து கேப்டன்சியை ஒப்படைக்கும் என்றும் மற்றொரு அறிக்கை தெரிவிக்கிறது. பேஃப் டூப்ளெசியை வெளியேற்றிவிட்டு கேஎல்ராகுலை கைப்பற்றும் முயற்சியில் ஆர்சிபி அணி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

kl rahul

ஆனால் யார்யார் எந்தெந்த அணிகளுக்கு செல்வார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்..