Royal Challengers Bangalore batters Virat Kohli and Glenn Maxwell Shailendra Bhojak
T20

RCBvMI | ஆமா விளையாடறது ரோஹித் ஷர்மா தானா..? மும்பை டோட்டல் டேமேஜ்..!

பந்து பேட்ல பட்டு பவுண்டரிக்கு போனால் மகிழ்ச்சி. இல்லையெனில் பயிற்சி என ஆட்டத்துக்கு நடுவே நெட் ப்ராக்டீஸ் செய்வது போல பந்துகளைத் தட்டிக்கொண்டிருந்தார் ரோஹித் ஷர்மா.

ப.சூரியராஜ்

இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் அனைவருமே எதிர்பார்த்திருந்தது நேற்றிரவு அரங்கேறியது. 16 சீசன்களில் ஐந்து முறை கோப்பையை வென்றிருக்கும் மும்பை அணியும், 16 சீசன்களாக இதயங்களை மட்டுமே வென்றிருக்கும் பெங்களூர் அணியும் சின்னசாமி மைதானத்தில் சிக்ஸர் மழையை பொழிய தயாராகி வந்திருந்தார்கள். `நான் பழத்தை காயாக்கி, காயை பிஞ்சாக்கி, பிஞ்சை பூவாக்கி, பூவை விதையாக்கி அந்த விதையை மண்ணா ஆக்குறவன்டா' என மும்பை ரசிகர்கள் முஷ்டியை முறுக்க, பதிலுக்கு பெங்களூர் ரசிகர்களோ `நான் மண்ண விதையாக்கி, விதையை பூவாக்கி, பூவை பிஞ்சாக்கி, பிஞ்ச காயாக்கி, காயை பழமாக்கி, அந்த பழத்துல கொட்டை எடுத்து, அந்த கொட்டையில பருப்பு எடுத்து, அந்த பருப்பை வறுத்து தின்றுவேன்' என பெங்களூர் ரசிகர்களும் கத்திக் கொண்டிருந்தார்கள். டாஸ் வென்ற ஆர்.சி.பி, மும்பையை பேட்டிங் ஆட அழைத்தது.

கோலியிடம் பல சீசன்களாக ஊமைக்குத்துகள் வாங்கியே பட்டை தீட்டபட்ட வைரம், முகமது சிராஜ். முதல் ஓவரை வீச வந்தார். 15.25 கோடி சம்பளம் வாங்கும் இஷான் கிஷனும், 16 கோடி சம்பளம் வாங்கும் ரோஹித்தும் மும்பை அணியின் இன்னிங்ஸை துவங்கினார்கள். முதல் ஓவரை அட்டகாசமாக வீசிய சிராஜ், 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார். `பல்சர் விட்டது பஜாஜ். பஞ்சர் போடுவான் சிராஜ்' என ஆர்.சி.பி ரசிகர்கள் ஆரவாரமானர்கள். 2வது ஓவரை வீச டாப்லி வந்தார். முதல் பந்தை கவர் திசையில் பவுண்டரிக்கு விரட்டிய இஷான், கொஞ்சம் பொறுத்து நான்காவது பந்தையும் அதே போல் கவர் திசையில் பவுண்டரிக்கு விரட்டிவிட்டார்.

3வது ஓவரை வீசவந்தார் சிராஜ். ஓவரின் மூன்றாவது பந்தை ஸ்கொயர் லெக் திசையில் இஷான் தூக்கிவிட, அது ஹர்ஷல் படேலின் கைகளுக்குள் தஞ்சமடைந்தது. 15.25 கோடி ஊ...ஊ..! அடுத்து கேப்டனை விட அதிக சம்பளம், அதாவது 17.50 கோடி சம்பளம் வாங்கும் கேமருன் க்ரீன் களமிறங்கினார். 4வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அழகாக தட்டிவிட்டார் க்ரீன். `இனி க்ரீன் டீதான் குடிப்பேன்' என சபதம் போட்டான் ஓர் அப்பாவி மும்பை ரசிகன். மூன்றாவது பந்து, க்ளீன் போல்டானார் க்ரீன். 17.50 கோடி ஊ...ஊ..!

Cameron Green gets clean-bowled by Royal Challengers Bangalore bowler Reece Topley
Reece Topley

சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். முதல் பந்துல மட்டும் அவுட்டாகிடாத ராசா என பெங்களூர் ரசிகர்களே வேண்டினார்கள். எப்படியோ, முதல் பந்தில் அவுட் ஆகாமல் தப்பித்துவிட்டார். இன்னொரு பக்கம், உண்மையிலேயே ரோகித்தான் பேட்டிங் ஆடுகிறாரா, இல்லை மும்பை நிர்வாகம் மிர்ச்சி சிவாவை அனுப்பி வைத்திருக்கிறதா என சந்தேகம் வரும் அளவிற்கு ஆடிக்கொண்டிருந்தார் ரோகித் சர்மா. பந்து பேட்ல பட்டு பவுண்டரிக்கு போனால் மகிழ்ச்சி. இல்லையெனில் பயிற்சி என ஆட்டத்துக்கு நடுவே நெட் ப்ராக்டீஸ் செய்வது போல பந்துகளைத் தட்டிக்கொண்டிருந்தார். அவர் பயந்து பயந்து அடித்த ஒன்றிரண்டு பந்துகளையும், ஆர்சிபி வீரர்கள் பாய்ந்து பாய்ந்து தடுத்துக் கொண்டிருந்தார்கள். 6வது ஓவர் வீசவந்தார் ஆகாஷ்தீப். 2வது பந்தில், கீப்பரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார் ரோகித். மும்பை ரசிகர்களே அவர் அவுட்டானதற்கு பெருமூச்சு விட்டார்கள். 16 கோடி ஊ...உ..!

பிறகுதான் வந்தார் திலக் வர்மா. ஓவரின் 4வது பந்தில் மும்பை அணியின் முதல் சிக்ஸரை அடித்தார் அவர். பவர் ப்ளேயின் முடிவில் 29/3 என தவழ்ந்துக் கொண்டிருந்தது மும்பை. 7வது ஒவரை வீசவந்தார் ஹர்ஷல் படேல். திலக் வர்மா ஒரு பவுண்டரி அடித்தார். கபில்தேவ் காலத்தில் இருந்து ஆடிக்கொண்டிருக்கும் கரண் சர்மா வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இப்போது, நியூசிலாந்து ஆல்ரவுண்டரான ப்ரேஸ்வெல்லிடம் பந்தைக் கொடுத்தார் டு ப்ளெஸ்ஸிஸ். 4வது பந்தில் சூர்யகுமார் ஒரு பவுண்டரியை தட்டிவிட்டார். `ஸ்கை விடிஞ்சுடுச்சு. காய்ச்சுடா மோளத்த மாமேய்' என மும்பை ரசிகர்கள் குதூகலமாக, அடுத்த பந்தே அவுட்டானார் சூர்யகுமார். காய்ச்சிய மேளத்தை, தீயில் போட்டு கருக்கிவிட்டார்கள். அடுத்ததாக, களமிறங்கிய வதேரா, வந்ததும் வராததுமாக ஒரு பவுண்டரியை விளாசினார். இதுதான் அவர் விளையாடும் முதல் டி20 போட்டி!

Suryakumar Yadav

கரண் சர்மா வீசிய 10வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 10 ஓவர் முடிவில் 55/4 என மூழ்கியிருந்தது மும்பை அணி. மீண்டும் ப்ரேஸ்வெல் வந்தார். திலக் வர்மா, ரிவர்ஸ் ஹிட்டில் ஒரு பவுண்டரியை வெளுத்தார். களத்தில் இரண்டு இடதுகை ஆட்டக்காரர்கள் இருக்கும் காரணத்தினால், ப்ரேஸ்வெல்லிடம் பந்தைப் பிடுங்கி மேக்ஸ்வெல்லிடம் கொடுத்தார் டூப்ளெஸ்ஸிஸ். ஆஃப் ஸ்பின் போட்டு பேட்ஸ்மேன்களை ஆஃப் செய்வார் என எதிர்பார்த்தால், முதல் இரண்டு பந்தில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி கொடுத்து மேக்ஸ்வெல்தான் ஆஃப் ஆனார். திலக் வர்மா மட்டும் தனியாக வேறொரு கிரவுண்டில் விளையாடுவதைப் போல விளையாடிக்கொண்டிருந்தார்.

ஆகாஷ் தீப் வீசிய 13வது ஓவரின் முதல் பந்தில் மற்றொரு பவுண்டரி திலக் வர்மாவுக்கு. 14வது ஓவரை வீச கரண் சர்மாவை மீண்டும் எடுத்துவந்தார் டூப்ளெஸ்ஸிஸ். ஒவரின் 3வது பந்தை டீப் மிட் விக்கெட்டில் சிக்ஸருக்கு விளாசினார் வதேரா. 4வது பந்தோ, லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு பறந்தது. அதுவும் 101 மீட்டர் சிக்ஸர். ஒருத்தனை ஏமாத்தணும்னா அவன் ஆசையைத் தூண்டனும் என்பதைப் போல, முதலில் இரண்டு சிக்ஸர்களை அடிக்கவிட்டு வெறியாக்கி, மூன்றாவது பந்தை உடலுக்குள் போட, கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் வதேரா. டிம் டேவிட் உள்ளே வந்தார்.

Tilak Varma

15வது ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார் ஹர்ஷல். `பொல்லார்டு இடத்தை நிரப்புவாரா டிம் டேவிட்? பொறுத்திருந்து பார்ப்போம்' என மும்பை ரசிகர்கள் பொறுத்திருந்தார்கள். ஆனால், டேவிட் பொறுக்கவில்லை. 16வது ஓவரில், கரண் சர்மா வீசிய பந்தில் க்ளீன் பவுல்டானார். ஹ்ரித்திக் ஷொகீன் களமிறங்கி, ஒரு பவுண்டரியை அடித்தார். ஆகாஷ் தீப் வீசிய 17வது ஓவரில் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடித்து கலக்கினார் திலக் வர்மா. அடுத்து ஓவரிலேயே, ஷொகீன் அவுட். 19வது ஓவரை வீசவந்தார் சிராஜ். இன்னைக்கு அருமையா போட்ருக்காப்ல என ஆர்.சி.பி ரசிகர்கள் காலரைத் தூக்கிவிட்டார்கள். ஆனால், சிராஜோ தொடர்ந்து 4 அகலபந்துகள் என 5 அகலபந்துகளை வீசினார். போதாக்குறைக்கு இரண்டு பவுண்டரிகளையும் கொடுத்தார். ஐ.பி.எல் வரலாற்றிலேயே ஒரு ஓவருக்கு 11 பந்துகள் வீசிய ஒரே வீரர் சிராஜ்தான் என மீண்டும் காலரைத் தூக்கினார் ஆர்.சி.பி. ரசிகர்கள். ஹர்ஷல் வீசிய கடைசி ஓவரில் அர்ஷத் கான் ஒரு சிக்ஸர் அடித்தார். திலக் வர்மா, ஹெலிகாப்டர் ஷாட்டில் ஒரு சிக்ஸர் அடித்து இன்னிங்ஸை முடித்தார். 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் எடுத்திருந்தது மும்பை அணி. மும்பை ரசிகர்களே இந்த ஸ்கோரை நம்பவில்லை. இஷான், ரோகித், க்ரீன் மூவரும் ஆளுக்கு 5 கோடி போட்டு, திலக் வர்மாவிற்கு 15 கோடி கொடுத்துவிட வேண்டுமென தீர்மான அறிக்கை எழுதத் துவங்கினார்கள் மும்பை ரசிகர்கள்.

மேட்சுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், `ஈ சாலா கப் நஹி' என தெரியாமல் சொல்லிவிட்டார் டூப்ளெஸ்ஸிஸ். அதைக் கேட்டதும் சிரித்துவிட்ட கோலி, `அது நஹி இல்ல. நமதே' என திருத்தினார். ஆமாம் மக்களே, வரலாறு திருத்தி எழுதப்பட போகிறது என்பதை குறியீடாக நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். கேப்டன் ரோகித் தனது வைஸ் கேப்டன் சூர்யகுமாரையே, பெவிலியனுக்கு அனுப்பிவிட்டு பெஹ்ரன்டார்ஃபை இம்பாக்ட் வீரராக உள்ளே கொண்டுவந்தார். முதல் ஓவரை வீசியதும் அவர்தான். கோலியும் டூப்ளெஸ்ஸியும் பெங்களூர் அணியின் இன்னிங்ஸை ஓபன் செய்தார்கள். முதல் ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே. அர்ஷத் கான் வீசிய 2வது ஓவரில், முதல் பவுண்டரியை அடித்தார் விராட். பெஹ்ரான் வீசிய 3வது ஓவரின் முதல் பந்து, பவுண்டரிக்கு விரட்டிவிட்டார் டூப்ளெஸ்ஸிஸ். 3வது பந்தும் 4வது பந்தும், சிக்ஸருக்கு பறந்துப்போனது. இந்த சீசன் துவக்கத்தில் இருந்தே இம்பாக்ட் வீரர்கள் எனில் எதிரணிக்காக ஆடுபவர்களாக எனும் சந்தேகம் வீரர்களையும் ரசிகர்களையும் கடுமையாக பீடித்துவருகிறது. அதன் சிறந்த உதாரனம் துஷார் தேஷ்பாண்டே எனில், சமீபத்திய உதாரனம் இந்த பெஹ்ரன்டார்ஃப்.

Virat Kohli

`ஆர்ச்சர் வந்துட்டான் டோய்' என அலறினார்கள் மும்பை ரசிகர்கள். `மண்ட பத்ரம்' என ஆங்காங்கே கூக்குரல்கள். ஆனால், கோலியோ ஜாலியா ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் விளாசினார். மும்பை ரசிகர்கள் அந்த நொடியே மேட்சுக்கு குட்பை சொன்னார்கள். கரண் சர்மாவின் நேரடி போட்டியாளரான பியூஷ் சாவ்லா பந்து வீச வந்தார். ஒரு பவுண்டரியை கொடுத்தனுப்பினார் பாஃப். மீண்டும் ஆர்ச்சர் வந்தார், மீண்டும் ஒரு பவுண்டரியை விளாசினார் கோலி. பவர் ப்ளேயின் முடிவில் 53/0 என அசத்தலாக ஆடியிருந்தது ஆர்.சி.பி!

17.50 கோடி க்ரீன் பந்து வீச வந்தார். இரன்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர். பாக்கெட்டில் போட்டு கொடுத்தணுப்பினார் பாஃப். ஊ...ஊ..! இடையிடையே சாவ்லாவும் வந்து அடிவாங்கிவிட்டுப் போனார். ஷொகீனை அழைத்து பத்தாவது ஓவரை வீச சொன்னார் ரோகித். தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள். ஐ.பி.எல் தொடர்களில் தனது 26-வது அரை சதத்தை நிறைவு செய்தார் டூப்ளெஸ்ஸிஸ். `நமக்கும் மொத மேட்சுக்கும் ராசியே இல்லடா' என சில மும்பை ரசிகர்கள் டி.வியை அணைத்துப்போட்டு படுத்தார்கள். கோலி ஒரு சிங்கிளைத் தட்டி, ஐ.பி.எல் தொடரில் தனது 50-வது அரைசதத்தை நிறைவு செய்தார். அடுத்ததாக, மும்பை ஜெர்ஸி அணிந்து விளையாடும் ஆர்.சி.பி வீரர் பெஹ்ரன்டார்ஃப் பந்து வீச வந்தார். கோலிக்கு ஒரு பவுண்டரி, பாஃபுக்கு ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என பிரித்துக் கொடுத்தார். இந்தப் பக்கம் ஆர்ச்சரை டார்ச்சர் செய்துகொண்டிருந்தார் கோலி. 14வது ஓவரில் ஒரு சிக்ஸர் பறந்தது. 15வது ஓவரை வீசிய அர்ஷத் கான், கோலிக்கு ஒரு சிக்ஸரைக் கொடுத்தாலும் டூப்ளெஸ்ஸியின் விக்கெட்டைத் தூக்கினார். மும்பை ரசிகர்களின் முகத்தில் சிறுபுன்னகை.

Faf du Plessis and Virat Kohli

இடையில் தினேஷ் கார்த்திக் வேறு பேட்டிங் ஆடியிருக்கிறார். பெங்களூர் ரசிகர்களுக்கே, அவர் எப்போது வந்தார். எப்போது அவுட் ஆகிப்போனார் என எதுவும் தெரிந்திருக்காது. கேமரூன் க்ரீனை வெச்சி செய்தார் மேக்ஸ்வெல். தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள். 24 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி. அர்ஷாத் கானை அனுப்பிவைத்தார் ரோகித். ஒரு பவுண்டரி, ஒரு எக்ஸ்ட்ரா, ஒரு சிக்ஸர். மேட்சை முடித்தார் கோலி. பவர்ப்ளேயில் மும்பை பவுலர்களை புரட்டியெடுத்த டூப்ளெஸ்ஸிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. திலக் வர்மாவை கேப்டனாகப் போட்டு, அர்ஜூன் டெண்டுல்கரை முதல் ஒவர் வீச சொல்லலாமா என சிந்தனையில் மூழ்கினர் மும்பை ரசிகர்கள்.