“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
127 ரன்களை எடுக்கவிடாமல் சூப்பர் ஜெயன்ட்ஸை சுழற்றிய ராயல் சேலஞ்சர்ஸும், 130 ரன்களை எடுக்கவிடாமல் டைட்டன்ஸை டைட்டாக பிடித்த கேபிடல்ஸும், நேற்றிரவு டெல்லி மைதானத்தில் நேருக்கு நேர் மோதின. `இன்னைக்கு கோலி சதம் அடிச்சு, சட்டையைக் கழட்டி சுத்தப் போறார். கங்குலி பார்த்து டென்ஷன் ஆவார். சக்ஸஸ்!' என ஜாலியாக இருந்தனர் ஆர்.சி.பி ரசிகர்கள். முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் வேறு, கோலி சதம் அடித்து கங்குலிக்கு டெடிகேட் செய்தால் சிறப்பாக இருக்கும் என கொளுத்திப் போட்டிருந்தார். டாஸ் வென்ற ஆர்.சி.பியின் கேப்டன் டூப்ளெஸ்ஸி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். கோலியும், டூப்ளெஸ்ஸியும் ஆர்.சி.பியின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசினார் கலீல் அகமது.
முதல் ஓவரின் இரண்டாவது பந்து, பவுண்டரி விளாசினார் கோலி. அக்ஸர் படேல் வீசிய 2வது ஓவரில், கோலி இன்னொரு பவுண்டரி அடித்தார். இஷாந்திடம் 3வது ஓவரைக் கொடுத்தார் வார்னர். கோலிக்கு மீண்டுமொரு பவுண்டரி. அக்ஸரின் 4வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே. முகேஷ் குமார் வீசிய 5வது ஓவரில் 3 பவுண்டரிகளை வெளுத்தார் டூப்ளெஸ்ஸி. கலீலின் அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என்றும் பறக்கவிட்டார் அவர். பவர்ப்ளேயின் முடிவில் 51/0 என சிறப்பாக தொடங்கியிருந்தது ஆர்.சி.பி.
மார்ஷ் வீசிய 7வது ஓவரில், 6 ரன்கள் மட்டுமே. 8வது ஓவர் வீசிய குல்தீப்பை பவுண்டரியுடன் வரவேற்றார் கோலி. இன்னொரு முனையிலிருந்து அக்ஸர் வீசிய 9வது ஓவரில், டூப்ளெஸ்ஸி ஒரு பவுண்டரி விளாசினார். குல்தீப்பின் 10வது ஓவரில், 7 ரன்கள் மட்டுமே. 10 ஓவர் முடிவில் 79/0 என லேசாக சுணங்கியது ஆர்.சி.பி. காரணம், குட்டிப்புலியைப் போல ஆட வேண்டிய கோலி, குட்டி கோலி கே.எல்.ராகுல் போல் ஆடியதுதான். 30 பந்துகள் ஆடி, 35 ரன்களே அடித்திருந்தார்.
அடுத்த ஓவரை வீசவந்தார் மார்ஷ். கோலி போட்ட அழுத்தம், டூப்ளெஸ்ஸியின் விக்கெட்டைக் காவு வாங்கியது. 32 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதற்கடுத்த பந்தே, மேக்ஸ்வெல்லும் அவுட்! கே மட்டும் களத்தில் இருக்க, ஜி.எஃப் இரண்டும் நடையைக் கட்டியது. அடுத்து களமிறங்கினார் லோம்ரோர். குல்தீப்பின் 12வது ஓவரில், லோம்ரோர் ஒரு சிக்ஸரை வெளுத்தார். இஷாந்தின் 13வது ஓவரில் கோலியிடமிருந்து ஒரு பவுண்டரி. 14வது ஓவரை வீசிய குல்தீப்பை, ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என நொறுக்கினார் லோம்ரோர். மார்ஷ் வீசிய 15வது ஓவரில், லோம்ரோர் இன்னொரு சிக்ஸர் அடித்தார்.
அந்த ஓவரில் 42 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார் கோலி. `அண்ணன், ஒன்டே வேர்ல்டு கப்புக்கு ரெடியாகிட்டார்டா' என கோலி ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள்.
முகேஷின் 16வது ஓவரில், லோம்ரோர் ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால், அதே ஓவரில் கோலி அவுட்டும் ஆனார். ஷார்ட் ஃபைன் லெக்கில் நின்று பராக் பார்த்துக்கொண்டிருந்த கலீலிடம் திடீரென கேட்ச் வந்து விழுக, பந்தை தடவு தடவென தடவி ஒருவழியாய் பிடித்தார்.
இஷாந்தின் 17வது ஓவரில் லோம்ரோருக்கு இரண்டு பவுண்டரிகள் கிடைத்தது. கலீலின் 18வது ஓவரில் லோம்ரோரின் பேட்டிலிருந்து மற்றொரு பவுண்டரி. அந்த ஓவரின் கடைசிப்பந்தை, சிக்ஸருக்கு பறக்கவிட்டார் டி.கே! முகேஷின் 19வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து, தனது அரைசதத்தை கடந்தார் லோம்ரோர். இஷாந்த் சர்மாவுக்கு பதில் ரிப்பல் படேலை இம்பாக்ட் வீரராக களமிறக்கினார் டேவிட் வார்னர். கலீல் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்து, தினேஷ் கார்த்திக் அவுட். அடுத்து களமிறங்கிய அனுஜ் ராவத், முதல் பந்திலேயே சிக்ஸரைப் பறக்கவிட்டார். 20 ஓவர் முடிவில் 181/4 என இன்னிங்ஸை முடித்தது ஆர்.சி.பி!
இம்பாக்ட் வீரரை முதல் இன்னிங்ஸிலேயே மாற்றிவிட்டதால், ப்ரித்வி ஷா சோகத்தில் மூழ்கினார். வார்னரும் சால்ட்டும் 182 எனும் இலக்கை எட்டிப்பிடிக்க களமிறங்க, முதல் ஓவரை வீசினார் முகமது சிராஜ். முதல் பந்தே, கவர் திசையில் பவுண்டரிக்கு பறக்கவிட்டார் வார்னர். 3வது பந்தும், மிட் விக்கெட் திசையில் பவுண்டரிக்கு தெறித்து ஓடியது. மேக்ஸ்வெல் வீசிய 2வது ஓவரில், சால்ட் ஒரு பவுண்டரி அடித்தார். ஹேசல்வுட்டின் 3வது ஓவரை பவுண்டரியுடன் வரவேற்றார் சால்ட். அதே ஓவரின் கடைசிப்பந்தில் ஒரு சிக்ஸரும் பறந்தது. ஹசரங்காவின் 4வது ஓவரை, சிக்ஸருடன் துவங்கினார் வார்னர். அதே ஓவரில் ஒரு பவுண்டரியும் தட்டினார் அவர்.
சிராஜ் வீசிய 5வது ஓவரின் முதல் மூன்று பந்து, சிக்ஸர், சிக்ஸர், பவுண்டரி என விளாசிவிட்டார் சால்ட். அடித்துவிட்டு சால்ட் ஏதோ பேச, சிராஜுக்கு மீண்டும் கோவம் தலைக்கேற, உள்ளே புகுந்து சமாதனம் செய்தார் டூப்ளெஸ்ஸிஸ். ஹேசல்வுட் வீசிய அடுத்த ஓவரில், வார்னர் அவுட்! அடுத்து களமிறங்கிய மார்ஷ், அதே ஓவரில் ஒரு சிக்ஸரையும், பவுண்டரியும் விளாசினார். பவர்ப்ளே முடிவில் 70/1 என ஆர்.சி.பியை சுக்குநூறாக உடைத்திருந்தது டி.சி.
கர்ண் சர்மாவின் 7வது ஓவரில், சால்ட் ஒரு பவுண்டரி தட்டினார். ஹசரங்காவின் ஓவரை மீண்டும் பவுண்டரியுடன் தொடங்கினார் மார்ஷ். கேதர் ஜாதவுக்கு பதில் ஹர்ஷல் படேலை இம்பாக்ட் வீரராக களமிறக்கினார் டூப்ளெஸ்ஸிஸ். மீண்டும் 9வது ஓவரை வீசினார் கர்ன். முதல் பந்து, பைஸில் பவுண்டரி. பந்த தவறவிட்டார் டி.கே! இரண்டாவது பந்து சால்ட்டிடமிருந்து ஒரு பவுண்டரி. அதே ஓவரின் கடைசிப்பந்தில், மீண்டும் ஒரு பவுண்டரி அடித்து அரைசதத்தை கடந்தார் சால்ட். அசால்ட்! லோம்ரோரிடம் பந்தையும் கொடுத்தார் டூப்ளெஸ்ஸிஸ். ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என அதையும் அடித்து நொறுக்கினார் சால்ட். 10 ஓவர் முடிவில் 115/1 என பாதி மேட்சை முடித்திருந்தது டெல்லி கேபிடல்ஸ். `கடைசியில, கங்குலிதான் சட்டையைக் கழட்டி சுத்தப்போறார்' என ஆர்.சி.பி ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
ஹர்ஷலின் 11வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்துவிட்டு, அடுத்த பந்திலேயே அவுட் ஆனார் மார்ஷ். ஹசரங்காவின் 12வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ஹர்ஷலின் 13வது ஓவரில், சால்ட் ஒரு சிக்ஸர் அடித்து துவங்க, இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என கடாசினார் ரூஸோ! ஹசரங்காவின் 14வது ஓவரில், சால்ட் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார். ஹேசல்வுட்டின் 15வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது. இன்னும் 30 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி! கர்ன் சர்மாவின் 16வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்த சால்ட், அடுத்த பந்திலேயே க்ளீன் போல்டானார். 45 பந்துகளில், 87 ரன்கள் எனும் அற்புதமான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
அடுத்து களமிறங்கிய சிக்ஸர் படேல், முதல் பந்திலேயே சிக்ஸரை விளாசினார். மேக்ஸ்வெல் வீசிய 17வது ஓவரில், ரூஸோ ஒரு சிக்ஸ் அடிக்க, 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.சி.பியை வென்றது டெல்லி கேபிடல்ஸ். அதிரடியாக விளையாடிய சால்ட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆர்.சி.பி ரசிகர்கள் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. அவர்கள் இதற்கெல்லாம் பழகி, 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. நாளை கால்குலேட்டர் வாங்க வேண்டுமென நினைத்துக்கொண்டு உறங்கச் சென்றுவிட்டரகள். ஞாயிற்றுக்கிழமை கால்குலேட்டர் கடை விடுமுறையாக கூட இருக்கலாம். மூடியிருக்கும் ஷட்டரைப் பார்த்தாலும் அவர்கள் வருத்தம் கொள்ளமாட்டார்கள். ஏனெனில், அவர்கள் இதற்கெல்லாம் பழகி, 13 ஆண்டுகள் ஆகிவிட்டது.