வெல்லப்போகும் கடைசி நொடியில் `ரெண்டு' வடிவேலுவுக்கு நடப்பது போல், ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் யாராவது வந்து சரசம் பண்ணிவிட்டு சென்றுவிடுகிறார்கள். டெல்லி கேபிடல்ஸ் அணியோ, `சத்ரபதி' வடிவேலுவைப் போல செல்லும் இடங்களில் எல்லாம் அடி வாங்கி பஞ்சர் ஆகிறார்கள். `சிங்கம் களம் இறங்கிடுச்சு' என டெல்லி ரசிகர்கள் உற்சாகம் கொடுத்தாலும், `சிங்கமா? எங்கே?' என டெல்லி அணியினரே தேடி அடி வாங்குகிறார்கள். ஜோக்கர்கள் ஹீரோ ஆகும் முயற்சியில், இரு அணிகளும் சின்னசாமி மைதானத்தில் மதியம் பலபரீட்சை நடத்தினார்கள். டாஸ் வென்ற டெல்லி அணி, பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது.
கோலியும், டூப்ளெஸ்ஸியும் ஓபனிங் இறங்க, முதல் ஓவரை வீசினார் நோர்க்யா. ஓவரின் 2வது பந்தில் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி, 3வது பந்தில், கவர் திசையில் ஒரு பவுண்டரி என பரபரப்பாக ஆரம்பித்தார் கோலி. அக்ஸர் வீசிய 2வது ஓவரில் அடக்கி வாசிக்க, 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 3வது ஓவரை வீசினார் முஸ்தஃபிசூர். இம்முறை டூப்ளெஸ்ஸி இரண்டு பவுண்டரிகளை வெளுத்துவிட்டார். அக்ஸர் வீசிய 4வது ஓவரில் டூப்ளெஸ்ஸி ஒரு சிக்ஸர் அடித்தும், ஓவரில் 7 ரன்களே மட்டுமே கிட்டின. 5வது ஒவரை வீசிய புதுமாப்பிள்ளை மிட்செல் மார்ஷுக்கு, முதல் பந்திலேயே பவுண்டரியை மொய் எழுதினார் கோலி. 3வது பந்தில், டூப்ளெஸ்ஸியும் தன் பங்கும் பவுண்டரியை மொய் செய்தார். பதிலுக்கு, டூப்ளெஸ்ஸியின் விக்கெட்டைக் கழட்டி டெல்லி அணிக்கு விருந்து வைத்தார் மார்ஷ்.
அந்த ஓவரில், லோம்ரோரின் கேட்சை விட்டார் மார்ஷ். பிடித்திருந்தால், ஐஸ்க்ரீமோடு மாஸாக விருந்தை முடித்திருக்கலாம். 6வது ஓவரை வீசிய லலித் யாதவ், 4 ரன்கள் மட்டுமே வழங்கினார். பவர்ப்ளேயின் முடிவில், 47/1 என வேலையைக் காட்டியது ஆர்.சி.பி!
குல்தீப் வீசிய 7வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்தார் கோலி. ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே. லலித் வீசிய 8வது ஓவரில் பவுண்டரிகள் ஏதுமின்றி 7 ரன்கள் மட்டுமே. மீண்டும் வந்தார் குல்தீப். முதல் பந்தில் லாங் ஆஃபில் ஒரு பவுண்டரி அடித்தார் கோலி. 4வது பந்தில், கோலியின் கேட்சையும் விட்டார் குல்தீப். கனுக்கால் உயரத்தில் வந்த கேட்ச்! முஸ்தஃபிசூரின் 10வது ஓவரில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை வெளுத்தார் கோலி. 33வது பந்தில், தனது 47வது ஐ.பி.எல் அரைசதத்தை கடந்தார் கிங் கோலி. அதே ஓவரில், லோம்ரோரும் வெறியாகி ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார். 10 ஓவர் முடிவில் 89/1 என மெல்ல மீண்டிருந்தது பெங்களூர் அணி.
லலித் வீசிய 11வது ஓவரின் முதல் பந்திலேயே, யாஷ் தல்லிடம் பவுண்டரி லைனில் கேட்சாகி பெவிலியனுக்கு திரும்பினார் கோலி. அடுத்து வந்த மேக்ஸ்வெல், அதே ஓவரில் 2 சிக்ஸர்களை வெளுத்துவிட்டு, அழுத்தத்தை குறைத்தார். நோர்க்யாவின் 12வது ஓவரில், 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது. மார்ஷின் 13வது ஓவரில், 62 மீட்டருக்கு ஒரு சிக்ஸரை அடித்த லோம்ரோர், அடுத்த பந்திலேயே கீப்பரிடம் கேட்சாகி கிளம்பினார். 14வது ஓவரை வீசவந்தார் நட்சத்திர ஆட்டக்காரர் அக்ஸர் படேல். மேக்ஸ்வேல் ஒரு சிக்ஸர் அடித்தார். ஹர்ஷல் படேலை இறக்கிவிட்டிருந்தார்கள் பெங்களூர் அணியினர். அவரும் அவர் பங்குக்கு ஒரு சிக்ஸரை அடித்தார். கடுப்பான அக்ஸர், ஹர்ஷலின் விக்கெட்டைக் கழட்டினார். ஸ்டெம்பிங் செய்யபட்டதற்காக கேட்கபட்ட ரிவ்யூவில், பேட்ஸ்மேன் பேட்டில் பந்து பட்டது தெரியவர, ஒற்றை விரலைத் தூக்கினார் அம்பயர். 15வது ஓவரின் முதல் பந்திலேயே மேக்ஸ்வெல்லின் விக்கெட்டைக் கழட்டினார் குல்தீப்.
தினேஷ் கார்த்திக் உள்ளே வந்தார். `கலக்குங்க தினேஷ் கார்த்...' என சொல்லி முடிப்பதற்குள், லலித் யாதவிடம் கேட்ச் கொடுத்து முதல் பந்திலேயே அவுட் ஆனார் டி.கே. டீம் ஹாட்ரிக்! 15 ஓவர் முடிவில் 134/6 என ஓரளவுக்கு நல்ல ஸ்கோரில் இருந்தார்கள்.
அனுஜ் ராவத்தும், சபாஷ் அகமதும் ஜோடி சேர்ந்தார்கள். 16வது ஓவரை கட்டையைப் போட்டு உருட்டி 5 ரன்கள் மட்டுமே எடுத்தனர். குல்தீப் வீசிய 17வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தும், மொத்தம் 7 ரன்கள் மட்டுமே எடுத்தனர். நோர்க்யாவின் 18வது ஒவரில், 8 ரன்கள் மட்டுமே. நல்லவேளையாக, 19வது ஓவரை முஸ்தஃபிசூர் வீசினார். அதில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார் சபாஷ் அகமது. நோர்க்யா வீசிய கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து, 174/6 என சுமாரான ஸ்கோரை இலக்காக நிர்ணயித்தனர். ஹசரங்கா இலங்கையிலிருந்து வந்துவிட்டார், அவர் ஆடும் லெவனில் இருக்கிறார். அவர் பேட்டிங்கும் ஆடுவார் என்பதையே மறந்து விட்டார் டூப்ளெஸ்ஸி.
175 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கோடு களமிறங்கியது வார்னர் - ப்ருத்வி ஷா ஜோடி. இந்த ஐ.பி.எல் சீசனில் சோபிக்காத ஒரே ஓபனிங் ஜோடி இவர்கள்தாம். முஸ்தஃபிசூருக்கு பதிலாக இம்பாக்ட் வீரராக களமிறங்கினார் ஷா. கே.ஜி.எஃப் கண்டெடுத்த தங்கம், சிராஜ் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரின் 4வது பந்திலேயே ரன் அவுட் ஆனார் ஷா. எக்ஸ்ட்ரா கவரில் அடித்துவிட்டு ஓடிய ஷாவை, பந்தைப் பிடிக்கச் சென்று விழுந்தும் சட்டென எழுந்து ஸ்டெம்ப்பில் எறிந்தார் ராவத். அற்புதமான ரன் அவுட்! முதல் ஓவரில் 1 ரன் மட்டுமே. பார்னெல் வீசிய 2வது ஓவரில், மார்ஷின் விக்கெட்டைத் தூக்கினர். அவரும் முட்டையைப் பெற்றுக்கொண்டு கிளம்பினார். சிராஜ் வீசிய 3வது ஓவரில், யாஷ் தல்லும் அவுட். எல்.பி.டபிள்யு! 3 ஓவர்களுக்கு 4 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்களை இழந்திருந்தது டெல்லி அணி. `நாங்க ஸ்ட்ராங்க, இல்ல இவிய்ங்க இவ்ளோ வீக்கா?' என ஆர்.சி.பி ரசிகர்களே குழப்பமானார்கள். பார்னெல் வீசிய 4வது ஓவரில், முதல் பவுண்டரியை அடித்தார் மணீஷ் பாண்டே. சிராஜின் 5வது ஓவரில், மிட் விக்கெட்டில் ஒன்று, ஃபைன் லெக்கில் ஒன்று, எக்ஸ்ட்ரா கவரின் ஒன்று என ஹாட் ட்ரிக் பவுண்டரி அடித்தார் வார்னர். அறிமுக வீரர் விஜய்குமார் வைசாக், 6வது ஓவரை வீசவந்தார். ஸ்கொயர் லெக்கில் ஒரு பவுண்டரி அடித்த வார்னர், அடுத்த பந்திலேயே கோலியிடம் கேட்சாகி நடையைக் கட்டினார். இந்த முறை வார்னரின் ஸ்டிரைக் ரேட் கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. ஆனால், அணியின் நிலைமை தான் படுபரிதாபமாக இருக்கிறது. சபாஷ் அகமது வீசிய 7வது ஓவரில், மணீஷ் பாண்டே ஒரு பவுண்டரி அடித்தார்.
ஹசரங்காவிடம் 8வது ஓவரை கொடுத்தார் டூப்ளெஸ்ஸி. மீண்டும் மணீஷ் பாண்டேதான் ஒரு பவுண்டரி அடித்தார். ஆனாலும், ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ஹர்ஷல் படேலின் 9வது ஓவரில், அபிஷேக் போரெல் `நான் போறேன்' என பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். விஜய்குமார் வீசிய 10வது ஓவரில், 4 ரன்கள் மட்டுமே. 10 ஓவர் முடிவில் 57/5 என தத்தளித்தது டெல்லி.
ஹசரங்காவின் 11வது ஓவரில், 2 பவுண்டரிகளை விளாசினார் அக்ஸர். 12வது ஓவரை வீசிய ஹர்ஷல், 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மீண்டும் வந்தார் விஜய்குமார். 13வது ஓவரில், அக்ஸருக்கு ஒரு பவுண்டரியைக் கொடுத்து ஆசையைத் தூண்டி, அடுத்த பந்திலேயே அவுட் ஆக்கினார். நம்பிக்கை நட்சத்திரமும் மங்கியது. 14வது ஓவரை வீசிய ஹசரங்காவை, இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என அடித்து துவைத்தார் மனீஷ் பாண்டே. `வேணாம் விட்ருங்க தம்பி. தனியா எதுக்கு தண்ணி குடம் தூக்கிட்டு இருக்கீங்க' என டெல்லி ரசிகர்களே பரிதாபமடைந்தார்கள். தனது அரைசதத்தை நிறைவு செய்துவிட்டு, அடுத்த பந்திலேயே எல்.பி.டபிள்யு ஆகி மனீஷும் கிளம்பினார். 36 பந்துகளில் 77 ரன்கள் தேவை. கைவசம் 3 விக்கெட்கள் மட்டுமே.
பார்னெலின் 15வது ஓவரில், ஒரு சிக்ஸரை அடித்தார் அமான் ஹகீம் கான். 16வது ஓவரில், லலித் யாதவ்வின் விக்கெட்டைத் தூக்கினார் விஜய்குமார். 17வது ஓவரில், அமான் கான் ஒரு பவுண்டரியை விரட்ட, 12 ரன்கள் கொடுத்தார் ஹர்ஷல். 18 ஒவரில் நோர்க்யா ஒரு பவுண்டரி அடித்தார். 3வது பந்தில், அமான் கானின் விக்கெட்டைத் தூக்கினார் சிராஜ். பார்னெலின் 19வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார் நோர்க்யா. 6 பந்துகளில் 36 ரன்கள். நோர்க்யாவும் குல்தீப்பும் களத்தில், தங்களால் முடிந்தளவுக்கு போராடி 12 ரன்கள் எடுத்தனர். 23 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது பெங்களூர் அணி. கிங் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. `சத்ரபதி' வடிவேலுவாக இருந்த டெல்லி அணி, கடைசியில், `இவன் போற இடத்துல எல்லாம் ஆள் போடுங்கடா. இரண்டு இரண்டு பாயின்ட்டா அள்ளிடலாம்' என `கருப்பசாமி குத்தகைதாரர்' சாம்ஸ் போல ஆகிவிட்டது.