csk vs rcb pt web
T20

DCயை வீழ்த்திய பெங்களூரு.. இதெல்லாம் நடந்தா CSK வெளியே RCB உள்ளே! கால்குலேட்டர எடுத்து வைங்க மக்களே!

டெல்லி கேபிடல்ஸ் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

Rishan Vengai

ஒரு கட்டத்தில் 8 போட்டிகளில் விளையாடி வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த ஆர்சிபி அணி, தங்களுடைய சொந்த ரசிகர்களாலேயே விமர்சனம் செய்யப்பட்டது. இதெல்லாம் ஒரு அணியா, கேப்டன்-கோச் எல்லாரையும் வெளில அனுப்பிட்டு புது அணிய உருவாக்குங்க என்றும், ‘எல்லாத்துக்கும் மேல இந்த ஆர்சிபி ஓனர மாத்துங்க அப்போதான் டீம் உருப்படும்’ என்ற பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது ஆர்சிபி அணி.

ஆனால் கடுமையான ஏச்சுபேச்சையெல்லாம் வாங்கிய ஆர்சிபி அணி நிர்வாகம், மீதமிருக்கும் போட்டிகளில் வாழ்வா சாவா யுத்தத்தை நடத்த ஆயத்தமானது. “இனி ஆடப்போகும் அனைத்து போட்டிகளும் எங்களுக்கு செமிபைனல் போட்டிதான்” என ஆர்சிபி பயிற்சியாளர் கூற, “நாங்க 2 போட்டியில் வெற்றிபெற்றா போதும், அதுக்கு பிறகு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது” என ஆர்சிபி வீரர் வில் ஜாக்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

7 தோல்விக்கு பிறகு பலம்வாய்ந்த சன்ரைசர்ஸ் அணியை அவர்களின் சொந்த மண்ணிலேயே வைத்து வீழ்த்திய ஆர்சிபி அணி, அதற்கு பிறகான 4 போட்டிகளில் வரிசையாக வென்று எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற ஃபையர்-பவரோடு (fire-power) கம்பேக் கொடுத்து மிரட்டி வருகிறது.

இந்நிலையில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. கேப்டன் ரிஷப் பண்ட்டுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டதால், அணியின் முக்கியமான வீரர் இல்லாமல் டெல்லி அணி எப்படி வெற்றிபெறப்போகிறது என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தது.

அதிரடியில் மிரட்டிய கோலி-பட்டிதார்!

முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் பட்டேல் பந்துவீச்சை தேர்ந்தெடுக்க ஆர்சிபி அணி பேட்டிங் செய்தது. ஆர்சிபி அணி எப்படியும் 230 ரன்கள் டோட்டலை எடுத்துவர போகிறது என்ற ரசிகர்களின் எதிர்ப்பார்ப்போடு தொடங்கிய போட்டியில், ஓவருக்கு ஒரு சிக்சர் என பறக்கவிட்டு தன்னுடைய பிரைம் ஃபார்மை மீண்டும் வெளிப்படுத்திய விராட் கோலி டெல்லி பவுலர்களை சிதறடித்தார். ஆனால் போட்டியின் மூன்றாவது ஓவரிலேயே டூபிளெசி அவுட்டாகி வெளியேற, 4வது ஓவரை வீசிய இஷாந்த் சர்மா விராட் கோலியை அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

‘உன்னுடைய பந்துல சிக்சர் அடிக்குறேன் பாரு, உன் விக்கெட்ட எடுக்குறேன் பாரு’ என்ற ரகளையில் நண்பர்களான விராட் கோலி மற்றும் இஷாந்த் சர்மா இருவரும் ஈடுபட்டனர். முதலிரண்டு பந்துகளில் பவுண்டரி சிக்சர் என கோலி அடித்தாலும், 4வது பந்தில் விராட்டின் விக்கெட்டை வீழ்த்திய இஷாந்த் சர்மா, அவுட்டாகி செல்லும்போது கோலியை சென்று ஜாலியாக வம்பிழுத்தார். அதற்கு விராட் கோலியும் சிரித்துக்கொண்டே வெளியேறியது பார்ப்பவர்களுக்கு நெகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தியது.

என்னதான் இரண்டு விக்கெட்டுகளை விரைவாகவே இழந்தாலும், 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ரஜத் பட்டிதார் மற்றும் வில் ஜாக்ஸ் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை எடுத்துவந்தனர். போட்டிப்போட்டுக்கொண்டு 5 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்டிய இந்த ஜோடி, 10 ஓவருக்கே 110 ரன்களை எடுத்துவந்து மிரட்டிவிட்டது. உடன் கைக்கு வந்த கேட்ச்சையெல்லாம் கோட்டைவிட்ட டெல்லி அணி ஃபீல்டர்கள், ஆர்சிபி அணிக்கு ரன்களை வாரிவழங்கினர்.

கம்பேக் கொடுத்த டெல்லி பவுலர்கள்!

இப்படியே போனா 240 ரன்கள் வரும்போலயே என்ற பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் டெல்லி அணி தவிக்க, முக்கியமான நேரத்தில் கம்பேக் கொடுத்த ரசிக் சலாம், ரஜத் பட்டிதாரை 52 ரன்னில் வெளியேற்றி விக்கெட்டை எடுத்துவந்தார். உடன் வில் ஜாக்ஸும் 41 ரன்னில் வெளியேற, இரண்டாம் பாதியில் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய டெல்லி பவுலர்கள் லாம்ராரை 13 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் மற்றும் Swapnil Singh இருவரையும் 0 ரன்னிலும் வெளியேற்றி கலக்கிப்போட்டது.

அடுத்தடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொதப்பி வெளியேற, இறுதியில் 1 பவுண்டரி 2 சிக்சர்கள் என விளாசிய காம்ரான் க்ரீன் 32 ரன்கள் அடித்து 187 ரன்களுக்கு ஆர்சிபி அணியை எடுத்துச்சென்றார்.

அதிர்ஷ்டமில்லாத டெல்லி கேபிடல்ஸ் அணி!

188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணியில், வழக்கம் போல அதிரடியில் மிரட்டிய ஜேக் பிரேசர் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார். ஆனால் அவரை தவிர எதிர்பக்கம் இருந்த டேவிட் வார்னர் மற்றும் அபிஷேக் போரல் இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றிய ஆர்சிபி அணி 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்துவந்து அசத்தியது. ஆனால் ஆர்சிபி அணியே எதிர்பார்க்காத வகையில், ஜேக் பிரேசர் 21 ரன்னில் ரன்அவுட்டாகி வெளியேற டெல்லி அணியின் தலைமேல் இடியே விழுந்தது. இந்த போட்டியில் அதிர்ஷ்டம் மொத்தமும் ஆர்சிபி அணி பக்கமே இருந்தது.

அடுத்துவந்த குஷாக்ரா 2 ரன்னில் வெளியேற, நிலைத்து நின்று ஆடிய சாய் ஹோப்பின் விக்கெட்டை லாக்கி பெர்குசன் எடுத்துவந்தார். மளமளவென விக்கெட்டுகள் சரிய, அணியை மீட்டுஎடுத்துவரும் பொறுப்பு களத்திலிருந்த கேப்டன் அக்சர் பட்டேல் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸின் தோள்களில் இருந்தது. ஆனால் ஒரு மோசமான ரன் அவுட் மூலம் ஸ்டப்ஸும் வெளியேற, அணியின் நம்பிக்கை உடைந்தது.

இறுதிவரை களத்தில் நின்று தனியொரு ஆளாக போராடிய அக்சர் பட்டேல் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசி 57 ரன்கள் அடித்து வெளியேற, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த டெல்லி அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

இதெல்லாம் நடந்தா சிஎஸ்கே வெளியே.. ஆர்சிபி உள்ளே!

இந்த அபாரமான வெற்றியின் மூலம் நல்ல ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியிருக்கும் ஆர்சிபி அணி, பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது. LSG அணி மீதமிருக்கும் 2 போட்டிகளில் ஒன்றில் தோற்றாலே, 4வது இடத்திற்கான போட்டி சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே வாழ்வா-சாவா போட்டியாக மாறும்.

ஒருவேளை ஆர்சிபி அல்லது சிஎஸ்கே இரண்டு அணிகளில் ஒன்று மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டால், ஆர்சிபி அணி சென்னை அணிக்கு எதிராக 200 ரன்கள் அடித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறவேண்டும். அல்லது 201 ரன்களை எதிர்த்து 10 பந்துகள் மீதம் வைத்து வெற்றிபெற வேண்டும். அப்படி ஆர்சிபி அணி வெற்றிபெறாவிட்டால் சிஎஸ்கே அணி கடைசி போட்டியில் தோற்றாலும் பிளே ஆஃப்க்கு நேரடியாக செல்லும்.

சென்னைக்கு வில்லனாக மாறியுள்ள RCB

எங்கோ வெளியேறும் இடத்திலிருந்த ஆர்சிபி அணி, 5 தொடர்ச்சியான வெற்றிகளுக்கு பிறகு சென்னை அணிக்கு வில்லனாக மாறியுள்ளது. எந்த அணி அரையிறுதிக்கு போகப்போகிறது, எந்த அணி வெளியேறப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், அனைத்து ரசிகர்களும் பாய்ண்ட்ஸ் டேபிள் குளறுபடிகளை கணக்கெடுக்க, கால்குலேட்டரை கையில் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இனி வரும் ஒவ்வொரு போட்டியும் அனல்பறக்கும் போட்டியாகவே அமையவிருக்கின்றன.