ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ்  முகநூல்
T20

PBKS vs RCB | இதனாலதான் இவரு ‘கிங் கோலி’! 10வது வருடமாக Playoff செல்லாமல் வெளியேறிய PBKS!

ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையேயான போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவுசெய்தது ஆர்சிபி அணி.

Rishan Vengai

ஒரு சில மாதத்திற்கு முன்புவரை ‘விராட் கோலி எதற்கு டி20 அணியில்?’ என்றும்

10 நாட்களுக்கு முன்புவரை ‘கோலி-லாம் எதுக்கு டி20 உலகக்கோப்பையில்? ரன் அடிச்சாலும் அவருடைய ஸ்டிரைக்ரேட் மோசமாக இருக்கிறது, அவர பேசாம வெளில உட்கார சொல்லலாம்’ என்றும்

பல்வேறு கேள்விகளும், விமர்சனங்களும் விராட் கோலி மீது வைக்கப்பட்டன.

செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கேப்டன் ரோகித் சர்மாவிடம், “விராட் கோலி ஸ்டிரைக் ரேட் சரியில்லை, அவரை டீம்ல ஆடவைப்பிங்களா” என்ற கேள்வி கேட்கப்பட, அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

Rohit Sharma

இந்நிலையில் எப்போதும் சவால்களை விரும்பி ஏற்றுக்கொள்ளும் கிங் கோலி, தன்மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையிலான ஒரு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி எல்லோரையும் நேற்று வாயடைக்க வைத்துவிட்டார்.

கேட்ச்களை கோட்டைவிட்ட பஞ்சாப்!

நேற்றைய போட்டியில் தோல்விபெறும் அணி, தொடரிலிருந்தே வெளியேறும் என்பதால், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பெரிய வெற்றிக்கான தேடலில் பலப்பரீட்சை நடத்தின. சொந்த மண்ணில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எல்லாமே சரியாகவே சென்றது. ஆனால் ஆடும் அணியை அறிவித்த போது ஆர்சிபி அணிக்கு சவால் அளிக்கும் பவுலர்களான ரபாடா மற்றும் ஹர்ப்ரீத் இருவரும் பஞ்சாப் அணியில் இல்லாதது உண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் ‘ரபாடா இல்லனா என்ன நான் இருக்கன், என் பேரு வித்வத் கவேரப்பா’ என கெத்தாக பந்துவீசிய இளம் வீரர் வித்வத், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் முதல் ஓவரிலேயே விராட் கோலியை திணறடித்தார். முதல் ஓவரின் 3வது பந்திலேயே பந்தை காற்றில் அடித்த விராட் கோலி 0 ரன்னில் வெளியேறுவார் என கவேரப்பா பார்த்துக்கொண்டிருக்க, ஃபீல்டிங்கில் கோட்டைவிட்ட பஞ்சாப் அணி விராட் கோலியை வெளியேற்ற தவறவிட்டது. மீண்டும் கவேரப்பா பந்துவீச்சில் விராட் கோலியின் மற்றொமொரு கேட்ச்சை கோட்டைவிட்ட பஞ்சாப் அணி, முதல் 5 ஓவரிலேயே 3 கேட்ச்களை தவறவிட்டு தங்கள் தலைமேல் தாங்களாகவே மண்ணை வாரி போட்டுக்கொண்டது.

92 ரன்கள் குவித்த விராட் கோலி!

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட கிங் கோலி, பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்து டாமினேட் செய்தார்.

விராட் கோலி ஒருபுறம் வெளுத்துவாங்க, மறுபுறம் உள்ள டூபிளெசி, வில் ஜாக்ஸ் இருவரையும் வெளியேற்றிய பஞ்சாப் அணி இழுத்துப்பிடித்தது.

ஆனால் சரியான நேரத்தில் கைக்கோர்த்த ரஜத் பட்டிதார் மற்றும் விராட் கோலி இருவரும் பேட்டிங்கில் ஒரு சூறாவளியையே கிளப்பினர்.

ஸ்பின்னர், வேகப்பந்துவீச்சு என எதையும் பாரபட்சம் இல்லாமல் துவைத்தெடுத்த இந்த ஜோடி 8 ஓவரில் 100 ரன்களை எடுத்துவந்து மிரட்டிவிட்டது. 3 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய பட்டிதார் 21 பந்தில் அரைசதமடித்து வெளியேறினார்.

அவர் வெளியேறினாலும் க்ரீன் உடன் பார்ட்னர்ஷிப் போட்ட விராட் கோலி, அதற்கு பிறகு திரும்பி பார்க்கவே இல்லை. 47 பந்தில் 7 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என பறக்கவிட்டு 195 ஸ்டிரைக்ரேட்டில் விளையாடிய கிங் கோலி, 92 ரன்கள் அடித்து 211 ரன்கள் வரை அணியை எடுத்துவந்து வெளியேறினார். கடைசியாக வந்து காட்டடி அடித்த க்ரீன் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என துவம்சம் செய்ய, 20 ஓவர் முடிவில் 241 ரன்கள் என்ற இமாலய டோட்டலை எட்டியது ஆர்சிபி அணி.

பதிலடி கொடுத்த ரோஸ்ஸோவ் - பேர்ஸ்டோ!

242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய சேஸிங்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி, ஆர்சிபி அணியின் பேட்டிங்கிற்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை நாங்கள் எனுமளவு அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

என்னதான் பிரப்சிம்ரன் விரைவாகவே வெளியேறினாலும், 2வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ரைல் ரோஸ்ஸோ மற்றும் பேர்ஸ்டோ இருவரும் அதிரடியில் மிரட்டினர். 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என துவம்சம் செய்த பேர்ஸ்டோ அடிமேல் அடி கொடுக்க, ரைல் ரோஸ்ஸொவின் பேட்டில் இருந்து 9 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என இடியாக இறங்கியது.

என்ன செய்வதென்று தடுமாறிய போது ஒரு மெதுவான பந்தை வீசி பேர்ஸ்டோவை சிக்கவைத்து வெளியேற்றினார் ஃபெர்குசன். ஆனால் என்னதான் பேர்ஸ்டோ வெளியேறினாலும் அதிரடியை நிறுத்தாத ரோஸ்ஸோவ், பஞ்சாப் அணியை 8 ஓவரில் 100 ரன்களுக்கு அழைத்துச்சென்று ஆர்சிபி அணிக்கு பதிலடி கொடுத்தார். 27 பந்தில் 61 ரன்னுடன் 225 ஸ்டிரைக்ரேட்டில் ஆடிய ரோஸ்ஸோவை ஒருவழியாக அவுட்டாக்கி அனுப்பிய கரன் சர்மா பெருமூச்சு விட வைத்தார்.

அதற்கு பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணி, கொஞ்சம் கொஞ்சமாக சேஸிங்கில் இருந்து விலகிச்சென்றது. போதாக்குறைக்கு லிவிங்ஸ்டன் 0 ரன்னிலும், ஜிதேஷ் சர்மா 5 ரன்னிலும் வெளியேற ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் கைகளே ஓங்கியிருந்தது. ஆனால் களத்திலிருந்த ஷசாங் சிங் தேவையான நேரத்தில் சிக்சர் பவுண்டரிகளாக விரட்டி ஆர்சிபி அணிக்கு தலைவலியை ஏற்படுத்தினார்.

‘ஷசாங் இருக்கும் வரைக்கும் எதையும் உறுதியாக சொல்லமுடியாது’ என்ற பயத்திலேயே ஆடிய ஆர்சிபி அணிக்கு, ஒரு அபாரமான ரன்அவுட் மூலம் ஷசாங்கை வெளியேற்றிய விராட் கோலி நம்பிக்கையை எடுத்துவந்தார். அதற்கு பிறகு பந்துவீச்சில் கம்பேக் கொடுத்த ஆர்சிபி பவுலர்கள் பஞ்சாப் கிங்ஸ் அணியை 181 ரன்னுக்கே ஆல் அவுட்டாக்கி வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். முடிவில் 60 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவுசெய்தது ஆர்சிபி அணி.

10வது வருடமாக பிளே ஆஃப் செல்லாமல் வெளியேறிய PBKS!

ஒரு மோசமான தோல்விக்கு பிறகு இரண்டாவது அணியாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது பஞ்சாப் கிங்ஸ் அணி. அந்த அணி கடைசியாக 2014ம் ஆண்டுதான் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தது, அதற்கு பிறகு 10 வருடங்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் எதற்கு இருக்கிறோம் என தெரியாமலே ஆடிவருகிறது.

தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பதிவுசெய்திருக்கும் ஆர்சிபி அணி, தங்களுடைய பிளே ஆஃப் வாய்ப்பை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.