IPL 2023 Play offs chances File image
T20

பெங்களூருவின் வெற்றியால் மும்பைக்கு பாதிப்பா? - சென்னை, லக்னோவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கா...!

இன்னும் 5 போட்டிகளே எஞ்சியுள்ளது. 93% உடன் 2 அணிகளும், 75 % உடன் இரண்டு அணிகளும், 12% உடன் 3 அணிகளும், பிளே ஆஃப்-க்கு தகுதிபெறும் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், எந்ததெந்த அணிகளுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் உள்ளது என்று பார்க்கலாம்.

சங்கீதா

1. குஜராத் டைட்டன்ஸ்:

16-வது சீசனின் லீக் சுற்றின் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்தது மட்டுமின்றி, முதல் ஆளாக 18 புள்ளிகளுடன் பிளே ஆஃப்-க்கு தகுதிபெற்ற ஒரே அணியாக, ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி வலம் வருகிறது. இதுவரை விளையாடிய 13 போட்டிகளில், 9 வெற்றிகள், 4 தோல்விகள் என அசைக்க முடியாத வெற்றியை பெற்றுள்ள குஜராத் அணி, வரும் ஞாயிற்றுக்கிழமை தனது கடைசி லீக் போட்டியில், பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

Gujarat Titans

நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து, பிளே ஆஃப்-க்கு தகுதிபெறும் வாய்ப்பில் சற்று பலமாக உள்ள பெங்களூரு அணிக்கு, வரும் போட்டியில், குஜராத் அணி கடுமையான நெருக்கடி கொடுக்க வாய்ப்பிருக்கிறது.

2. சென்னை சூப்பர் கிங்ஸ்

கடந்த 3-ம் தேதி லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற வாய்ப்பிருந்தும், அந்தப் போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது சென்னை அணிக்கு புள்ளிப்பட்டியலில் சற்று பாதிப்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம். (லக்னோ மாநகராட்சி தேர்தல் நடைபெறுவதற்காக 4-ம் தேதி நடத்தப்பட இருந்த போட்டி, ஒருநாள் முன்னதாக வைக்கப்பட்டது தான் காரணமோ என்ற கேள்வி எழாமல் இல்லை). இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டதால், இடியாப்ப சிக்கலில் சென்னை அணி சிக்கித் தவிக்கிறது .

Chennai Super Kings

மேலும், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் சனிக்கிழமை அதாவது, நாளை டெல்லி அணியை அதன் சொந்த மண்ணில், சென்னை அணி எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே சென்னை அணி தனது பிளே ஆஃப் வாய்ப்பை 100 சதவிகிதம் தயக்கமின்றி உறுதி செய்ய முடியும். இல்லையெனில், 15 புள்ளிகளுடன் சென்னை அணி 2-வது இடத்தில் இருந்தாலும், லக்னோ, மும்பை, பெங்களூரு ஆகிய மூன்று அணிகளும் தத்தமது கடைசி லீக் போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில், சென்னை அணி லீக் சுற்றோடு வெளியேற வேண்டியதுதான். ஒருவேளை இந்த 3 அணிகளில், ஒரு அணி தோல்வியுற்றாலும், நெட் ரன் ரேட் (தற்போதுள்ள +0.381) அடிப்படையில், 93.8% பிளே ஆஃப் போவதற்கான வாய்ப்பிருக்கும்.

3. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

சென்னை அணியைப் போன்றதுதான் லக்னோ அணியின் நிலைமையும். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, ‘ஆர்.சி.பி. அணியின் தோல்விக்காக லக்னோ, சென்னை அணிகள் வேண்டிக்கொள்கின்றன’ என்று சொன்னது போன்று, தற்போது லக்னோ, சென்னை அணிகள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. நேற்று பெங்களூரு அணி வெற்றிபெற்றுள்ளதால், நாளை நடைபெறும் தனது கடைசி லீக் போட்டியான கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், லக்னோ அணி கட்டாயம் வெற்றிபெற வேண்டும்.

இல்லை எனும் பட்சத்தில், இந்த அணிக்கும் நெட் ரன் ரேட் +0.304 என்ற அடிப்படையில் இருந்தாலும், சென்னை, மும்பை, பெங்களூரு அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்துதான் லக்னோ அணியும் பிளே ஆஃப் வாய்ப்புக்கு காத்திக்க வேண்டியிருக்கும். 93.8% வாய்ப்பிருக்கிறது.

4. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

5-வது இடத்தில் இருந்த பெங்களூரு அணி, நேற்று சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றதை அடுத்து, புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறி பிளே ஆஃப்-க்கு தகுதி பெறும் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், குஜராத் அணிக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கடைசி லீக் போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே அந்த சான்ஸ் உண்டு.

Royal Challengers Bangalore

அந்தப் போட்டியில் தோல்வியுறும் பட்சத்தில், மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப், கொல்கத்தா ஆகிய அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து வாய்ப்பு கிடைக்கும். 14 புள்ளிகளுடன் +0.180 என்ற நெட் ரன் ரேட் இருப்பது கூடுதல் பலம். இன்னும் 75 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது.

5. மும்பை இந்தியன்ஸ்

ஆரம்ப லீக் போட்டிகளில் தோல்வியுற்றாலும், பின்னர் சுதாரித்துக்கொண்ட மும்பை இந்தியன்ஸ் தற்போது அதிரடியாக ஆடி வருகிறது. எனினும், அந்த அணி லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்து பிளே ஆஃப்-க்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை சிக்கலாக்கிக் கொண்டது. அந்த அணியின் ஒரே நம்பிக்கை, வரும் ஞாயிற்றுக்கிமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெறும் தனது கடைசி லீக் போட்டிதான்.

Mumbai Indians

இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு சாத்தியம். 16 புள்ளிகளுடன் இரண்டு அல்லது மூன்றாவது இடத்திற்கு முன்னேறிவிடும். தோல்வியுறும் பட்சத்தில், மும்பையைவிட (-0.128), அதிக நெட் ரன் ரேட் கொண்ட கொண்ட பெங்களூரு அணிக்கு (+0.180) அந்த வாய்ப்பு போய்விடக்கூடும். மேலும், இன்று ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மோதும் போட்டியையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ராஜஸ்தான் வெற்றிபெறும் பட்சத்தில், மும்பையின் வாய்ப்பு சிக்கலானதாகிவிடும். ராஜஸ்தான் தோல்வியுறும் பட்சத்தில், பஞ்சாப் வெற்றிபெற்றாலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் மும்பை காத்திருக்க வேண்டியதிருக்கும். இந்த அணிக்கும் 75 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது.

6. ராஜஸ்தான் ராயல்ஸ்

12 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. மும்பை, கொல்கத்தாவை விட நல்ல நெட் ரன் ரேட் (+0.140) இருந்தாலும், ஆர்.சி.பி. அணியைவிட குறைவாகவே உள்ளது. இதனால் இன்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் அந்த அணி வெற்றிபெற வேண்டும். இல்லையெனில் இன்றுடன் ராஜஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறிவிடும்.

Rajasthan Royals

வெற்றிபெறும் பட்சத்தில், மும்பை, பெங்களூரு அணியின் வெற்றி, தோல்வியே ராஜஸ்தானின் பிளே ஆஃப்-க்கு தகுதிபெறும் வாய்ப்பை உறுதிப்படுத்தும். இந்த அணிக்கு 12.5 சதவிகதம் வாய்ப்புள்ளது.

7. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பிளே ஆஃப்-க்கு தகுதிபெறும் வாய்ப்பிலிருந்து கிட்டத்தட்ட விலகியுள்ள கொல்கத்தா அணி, பஞ்சாப் அணியை காட்டிலும் நெட் ரன் ரேட் -0.256 என்ற அடிப்படையில் கூடுதலாக உள்ளதால், நாளை லக்னோ அணிக்கு எதிரானப் போட்டியில் அதிக நெட் ரன் ரேட்டுடன் வெற்றிபெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றாலும், மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளின் வெற்றி, தோல்வியையும் பார்க்க வேண்டும்.

Kolkata Knight Riders

12 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ள அந்த அணிக்கு, 12.5 சதவிகிதம் வாய்ப்புள்ளது. கொல்கத்தா அணி மும்பை அணியின் வாய்ப்பை தட்டிப் பறிக்க வாய்ப்புண்டு.

8. பஞ்சாப் கிங்ஸ்

பெங்களூரு அணி போன்றே நல்ல வாய்பிருந்தும், நேற்று முன்தினம் டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதை அடுத்து, பஞ்சாப் அணி பிளே ஆஃப் வாய்ப்பை நெருக்கடிக்கு தள்ளிவிட்டுள்ளது. 12 புள்ளிகளுடன், -0.308 நெட் ரன் ரேட்டுகளுடன் 8-வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணிக்கும் 12.5 சதவிகிதம் வாய்ப்புள்ளது. இன்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறும் தனது கடைசி லீக் போட்டியில், கட்டாயம் பஞ்சாப் அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனினும், இந்த அணியும், மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூரு அணிகளின் வெற்றி, தோல்வியை சார்ந்துள்ளது.

Punjab Kings

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு பிளே ஆஃப்-க்கு முன்னேற வாய்ப்பே இல்லை என்றாலும், ஹைதராபாத் அணி மும்பையின் வாய்ப்பையும், டெல்லி அணி, சென்னை அணியும் வாய்ப்பையும் பறிக்க வாய்ப்புண்டு.