நடப்பு ஐபிஎல் தொடரில், பிளேஆப் சுற்றுக்கு நான்காவது அணியாக நுழையப்போவது சென்னையா அல்லது பெங்களூருவா என்பதுதான் ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதைத் தீர்மானிக்கும் போட்டி, இன்று பெங்களூருவில் தொடங்கியது.
முன்னதாக, டாஸ் ஜெயித்த சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இன்றைய போட்டியில் சென்னை அணி டாஸ் ஜெயித்ததால் அதிக சந்தோஷம் அடைந்தது. இதையடுத்து, பெங்களூரு அணி பேட்டிங் செய்ய ஆரம்பித்தது.
அவ்வணியில் தொடக்க வீரர்களாக கிங் விராட் கோலியும் கேப்டன் ஃபாப் டு பிளெசிஸும் களமிறங்கினர். எப்படியும் 200 ரன்களுக்கு மேல் எடுத்து சிஎஸ்கே அணிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என திட்டமிட்டு விளையாடினர். அப்போது 3 ஓவர்கள் முடிவுற்றிருந்த நிலையில், அணியின் ரன் 31 ஆக இருந்தது.
விராட் கோலி 19 ரன்களுடனும் டு பிளெசிஸ் 12 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில், மழை கொட்ட ஆரம்பித்தது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டது. தற்போது மழை நின்றதையடுத்து, நடுவர்களால் மைதானம் ஆய்வுசெய்யப்பட்டு, ஆட்டம் மீண்டும் 8.30 மணிக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது ஆட்டம் மீண்டும் நடைபெற்று வருகிறது.
மழை இல்லாமல் இருந்தால் அதிக ரன்களை எடுத்து சிஎஸ்கே அணிக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்றிருந்த நிலையில், தற்போது பெய்திருக்கும் மழை மேலும் ஆர்சிபி அணிக்கு கவலையைத் தந்துள்ளது.