rcb vs csk twitter
T20

CSK VS RCB| போட்டியைக் காண டிக்கெட் புக்கிங்.. ரூ.3 லட்சத்தை இழந்த இளைஞர்.. போலீஸ் விசாரணை!

Prakash J

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் கடைசி லீக் போட்டியே பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. போட்டி நடைபெறும் நாளன்று 80 சதவிகித மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதுதான் அதற்குக் காரணம். மழை குறுக்கிட்டால் என்னவாகும் என ரசிகர்கள் ஏங்கித் தவிக்கின்றனர்.

இந்த நிலையில், சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியைக் காண்பதற்காக ரசிகர் ஒருவர் 3 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த 28 வயது இளைஞரான விஜய்குமார், 'ipl_2024_tickets_24' என்ற இன்ஸ்டாகிராம் கணக்கைப் பார்த்து, டிக்கெட்டுகளை வாங்க முன்வந்துள்ளார். அப்போது பத்மா சின்ஹா என்பவர் விஜயகுமாரிடம், “தாம், ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்க நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ நபர்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் அவரிடம் டிக்கெட் குறித்த விவரங்களையும் கேட்டுள்ளார்.

இதையும் படிக்க: CSK Vs RCB | மே18 80% மழைக்கு வாய்ப்பு இருக்கு.. ஒருவேளை மழை குறுக்கிட்டால் என்னவெல்லாம் நடக்கலாம்!

இதில் உற்சாகமான விஜயகுமார், ரூ.2,300 கட்டணத்தில் 3 டிக்கெட்கள் கேட்டுள்ளார். அத்துடன், அதற்கான மொத்தத் தொகையான ரூ.6,900 பணத்தை அவருக்கு அனுப்பியுள்ளார். ஆனால், அவருக்கு இ-டிக்கெட்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, விஜயகுமார் மீண்டும் பத்மா சின்ஹாவைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதற்கு சின்ஹா, “ஏதாவது தொழில்நுட்பக் கோளாறாக இருக்கும்” என்று சொன்னதுடன், அதைச் சரிசெய்வதற்கு ரூ.67,000 அனுப்புமாறு கூறியுள்ளார். அதைக் கேட்டு அவரும் அந்தத் தொகையை அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து சின்ஹாவும் விஜயகுமாரை ஏமாற்றிப் பணம் பறிப்பதிலேயே குறியாக இருந்துள்ளார். இப்படியாக, விஜயகுமார் ரூ.3 லட்சத்தை இழந்துள்ளார். ஒருகட்டத்தில் பணத்தைத் திருப்பிக் கேட்க முடிவுசெய்த விஜயகுமாரிடம் இருந்து, சின்ஹா நைசாக நழுவியுள்ளார். இதனால், தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை நன்றாகப் புரிந்துகொண்ட விஜயகுமார், அதற்குப் பிறகு காவல் துறையினரின் உதவியை நாடியுள்ளார்.

இதையடுத்து பெங்களூரு போலீசார், ஐபிசி பிரிவு 420ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். அதேநேரத்தில், ரசிகர்கள் நம்பகமான ஆதார நிறுவனங்களிடமிருந்து டிக்கெட்டுகளைப் பெற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: ”நீங்க அத செஞ்சா தான் என் காதல சொல்லுவேன்” - பெண் ரசிகை வைத்த கோரிக்கை.. நிறைவேற்றிய காம்பீர்!