இதுவரையிலான ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி, தன்னகத்தே சில சாதனைகளைக் கொண்டிருந்தாலும், அது ஒருமுறைகூட கோப்பையைக் கைப்பற்றாத அணியாக வலம் வருகிறது. இந்த முறையாவது வெல்லும் முனைப்பில் போராடி வருகிறது. இந்த நிலையில் அவ்வணியில் இடம்பெற்றிருக்கும் தமிழக அணி வீரரான தினேஷ் கார்த்திக், நடப்பு சீசனில் பேட்டிங் மற்றும் கீப்பிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, சில போட்டிகளில் முடித்துக்கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் அவர், திடீரென்று மோசமான ஷாட்டை அடித்து ஆட்டமிழந்து விடுகிறார்.
அவர், இந்த சீசனில் 8 போட்டிகளில் பங்கேற்று இதுவரை மொத்தமாக (0, 9, 1, 0, 28, 7, 16, 22) 83 ரன்களையே எடுத்துள்ளார். விக்கெட் கீப்பர் பணிக்காகத்தான் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவதாக் கூறப்படும் நிலையில், ஐபில் சீசனிலேயே அதிக வீரர்களை ரன் அவுட்டாக்கிய பட்டியலிலும் முதலிடம் பிடித்து மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறார்.
பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு இடையில் நேற்று (ஏப்ரல் 26) 36வது லீக் போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பெங்களூரு 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
முன்னதாக பெங்களூரு அணி 14 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை எடுத்திருந்தபோது, தினேஷ் கார்திக்குடன் பிரபு தேசாய் இணைந்து பொறுப்புணர்ந்து விளையாடி வந்தார். ஆனால், தினேஷ் கார்த்திக் 15வது ஓவரில் தேவையின்றி இல்லாத சிங்கிளை எடுக்க அழைப்பு விடுத்ததை நம்பி, எதிர்முனையில் இருந்த பிரபுதேசாய் ரன் அவுட்டானார். இதனால், அதிரடியாகவும், வெற்றிக்காகவும் போராடிய பிரபுதேசாய் மன அழுத்தத்துடனேயே சென்றார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில், எதிர்முனை பேட்டர்களை அதிக அளவில் ரன் அவுட்டாக்கிய வரிசையில் தினேஷ் கார்த்திக் முதலிடம் பிடித்தார்.
அவர் இதுவரை 39 வீரர்களை ரன் அவுட்டாக்கி உள்ளார் (அதாவது ரன் அவுட் நடக்கும் போது மற்றொரு இணை வீரராக அவர் இருந்துள்ளார்) . அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா (37), தோனி (35), ராபின் உத்தப்பா (30), சுரேஷ் ரெய்னா (30) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். பிரபுதேசாய்க்குப் பிறகு பொறுப்புணர்ந்து ஆடவேண்டிய தினேஷ் கார்த்திக்கும் உடனே நடையைக் கட்டினார். ஏற்கெனவே, அவர் கடந்த போட்டிகளில் பேட்டிங்கில் தடுமாறி வரும் நிலையில், நேற்றும் தடுமாறினார். குறிப்பாக பேட்டிங்கில் பெங்களூரு அணியில், டாப் ஆர்டரில் இருக்கும் 3 பேட்டர்களைத் தவிர, அவர்களைத் தொடர்ந்து வரும் தினேஷ் கார்த்திக் சொதப்பி வருகிறார். இதனால் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
தினேஷ் கார்த்திக் களமிறங்கும் 5 அல்லது 6வது இடத்திற்குப் பதில் அதிரடியான வீரர்களை வாங்கியிருக்கலாம்.மைகேல் வாகன்
இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், ”தினேஷ் கார்த்திக் களமிறங்கும் 5 அல்லது 6வது இடத்திற்குப் பதில் அதிரடியான வீரர்களை வாங்கியிருக்கலாம். டி20 கிரிக்கெட்டில் 5, 6, 7 ஆகிய இடங்கள், பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான இடங்களாகும். டி20 கிரிக்கெட்டில் 1, 2, 3 ஆகிய இடங்களில் வெற்றிகரமாகச் செயல்படுபவர்களைவிட 5, 6, 7 ஆகிய இடங்களில் வெற்றிகரமாகச் செயல்படுபவர்கள் மிகவும் குறைவு. எனவே பெங்களூரு அணிக்கு ஜிதேஷ் சர்மா, சிம்ரோன் ஹெட்மயர், பூரான் போன்ற அதிரடி பேட்டர்கள் கண்டிப்பாக தேவை” எனத் தெரிவித்துள்ளார்.
தோனிக்கு முன்பே இந்திய அணிக்குள் நுழைந்த தினேஷ் கார்த்திக், தோனி அளவுக்கு பெரிய அளவில் செயல்படாததாலேயே இந்திய அணிக்குள் நிலையான வாய்ப்புகளைப் பெற முடியவில்லை. தொடர்ந்து 2019 உலகக் கோப்பைக்குப் பின் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறிய தினேஷ், அவ்வப்போது வர்ணனையாளராகவும் உருவெடுத்தார். அதேநேரத்தில் கடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாண்ட அவர், பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்குச் செல்வதற்கும் முக்கியப் பங்காற்றினார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தின்போது, பெங்களூரு அணியால் ரூ.5.50 கோடிக்கும் தக்கவைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.