RCB vs GT x
T20

இதான் ரியல் RCB.. இவ்வளவு நாளா எங்கப்பா இருந்திங்க? ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜாக்ஸ்! அசத்தல் வெற்றி!

குஜராத் டைட்டன்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

Rishan Vengai

17 வருட ஐபிஎல்லில் இல்லாத வகையில், நடப்பு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் 7-ல் தோல்வியடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வெற்றியை எடுத்துவர முடியாமல் திக்குமுக்காடியது. வர-போற அணிக்கிட்டலாம் மரண அடி வாங்கிய ஆர்சிபி அணிக்கு எதிராக, ”பயிற்சியாளர், கேப்டன் என முழு அணியையும் கலைச்சிட்டு வேறு வீரர்களை வாங்குங்கள்’ என்றும், ’ஆர்சிபி அணியை வேற ஓனருக்கு வித்துடுங்க’ என்றும் பல்வேறு கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

ஒரு படுமோசமான தோல்விகளுக்கு பிறகு பேசிய ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர், “இனி எங்களுக்கு ஒவ்வொரு போட்டியும் செமிபைனல் போட்டிதான், கடைசிவரை போராட போகிறோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார். அதற்கேற்றார்போல் மற்ற அணிகளால் தோற்கடிக்க முடியாத சன்ரைசர்ஸ் அணியை, அவர்களின் சொந்த மண்ணில் வைத்து சாய்த்த ஆர்சிபி அணி வெற்றிப்பாதைக்கு திரும்பியது.

RCB

மீதமிருக்கும் அனைத்து போட்டிகளையும் வெல்லவேண்டும் என்ற வேகத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியை அவர்களின் சொந்த மண்ணில் எதிர்த்து விளையாடியது ஆர்சிபி அணி.

மிரட்டிய சாருக் கான் - சாய் சுதர்சன்!

அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, ஆர்சிபி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவாகவே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சாஹா 4 ரன்னிலும், சுப்மன் கில் 16 ரன்னிலும் வெளியேற, மூன்றாவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த தமிழக வீரர்கள் சாய்சுதர்சன் மற்றும் சாருக் கான் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சாருக் கான் - சாய் சுதர்சன்

ஒருபுறம் சாய்சுதர்சன் விக்கெட் விழாமல் பார்த்துக்கொள்ள, மறுமுனையில் இறங்கியதிலிருந்தே சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்ட சாருக் கான் பேட்டிங்கில் ஒரு புயலையே கிளப்பினார். 3 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய சாருக்கான் 30 பந்தில் 58 ரன்கள் அடித்து, டைட்டன்ஸ் அணியை ஒரு வலுவான நிலைக்கு எடுத்துசென்று வெளியேறினார்.

சாய் சுதர்சன்

அவர் சென்ற பிறகு ”நானும் களத்துல இருக்கன்” என சீறிப்பாய்ந்த சாய்சுதர்சன், 8 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என துவம்சம் செய்ய, டேவிட் மில்லர் அவருடைய பங்கிற்கு 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்டார். சாய் சுதர்சனின் கிளாசிக் ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 200 ரன்கள் என்ற நல்ல டோட்டலை எட்டியது குஜராத் அணி.

நிலைத்து நின்ற கோலி.. ருத்ரதாண்டவம் ஆடிய ஜாக்ஸ்..

201 ரன்கள் என்ற நல்ல டோட்டல், உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் என எல்லாவற்றையும் தாண்டி ஆர்சிபி பேட்டர்கள் எப்படி சேஸ் செய்யப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. ஆனால் ஆர்சிபி கேப்டன் டூபிளெசிஸ் ஒரு முடிவுடன் தான் களத்திற்கு வந்தார். கோலி ஒருபுறம் நிதானமாக தொடங்க, 3 சிக்சர்களை பறக்கவிட்ட டூபிளெசி ஒரு பெரிய பவர்பிளேவுக்கு எடுத்துச்செல்ல ஆயத்தமானார். ஆனால் அதிகநேரம் அவரை நிலைக்கவிடாத சாய் கிஷோர், 24 ரன்களில் வெளியேற்றி விக்கெட்டை எடுத்துவந்தார்.

விராட் கோலி

4 ஓவர் முடிவில் 40 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்த ஆர்சிபி அணி, வில் ஜாக்ஸ் களத்திற்கு வந்த பிறகு திரும்பி பார்க்கவே இல்லை. முதலில் அதிரடிக்கு திரும்பியது விராட் கோலி தான். முதல் கியரில் இருந்த விராட் கோலி, படிப்படியாக 6 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்சம் செய்து 4-வது கியருக்கு செல்ல, மறுமுனையில் பேட்டிங்கில் ஒரு சூறாவளியையே கிளப்பிய வில் ஜாக்ஸ், எதிரணியை மட்டுமில்லாமல் விராட் கோலிக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

வில் ஜாக்ஸ்

கிரவுண்டின் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்து சிக்சர்மழை பொழிந்த வில் ஜாக்ஸ், ரசீத் கானுக்கு எதிராக மட்டும் ஒரே ஓவரில் 4 சிக்சர்களை பறக்கவிட்டு மரண அடி கொடுத்தார். ரசீத் கான், மோஹித் சர்மா வீசிய இரண்டே ஓவரில் 58 ரன்களை அடித்த வில் ஜாக்ஸ், 4 பவுண்டரிகள் 10 சிக்சர்களுடன் 41 பந்தில் சதமடித்து மிரட்டிவிட்டார்.

புது வரலாறு படைத்த ஆர்சிபி!

கோலி 70 ரன்கள், வில் ஜாக்ஸ் 100 ரன்கள் என கடைசிவரை ருத்ரதாண்டவம் ஆட, 16வது ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவுசெய்தது ஆர்சிபி அணி. சதமடித்த வில் ஜாக்ஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படார்.

விராட் கோலி - வில் ஜாக்ஸ்

இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக பந்துகளை வெளியில் வைத்து 200 ரன்களை சேஸ் செய்த முதல் அணி என்ற சாதனையை படைத்தது ஆர்சிபி அணி. அதேபோல நடப்பு ஐபிஎல் தொடரில் 500 ரன்களை பதிவுசெய்த முதல் வீரராக மாறினார் விராட் கோலி. சரியான பிளேயிங் லெவனை தேர்வுசெய்யாமல் மோசமாக விளையாடிய ஆர்சிபி அணி, ’இவ்வளவு நாளா எங்கப்பா இருந்திங்க’ எனுமளவு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. இன்னும் யாரெல்லாம் பலிகடா ஆகப்போறாங்கனு பொறுத்துதான் பார்க்கனும்.