rohit sharma - virat kohli cricinfo
T20

“இது ஒன்றும் ஐபிஎல் அல்ல.. இங்கே அதிக ரன்களை குவிக்க தார் சாலைகள் இல்லை” - ரவி சாஸ்திரி அட்வைஸ்!

Rishan Vengai

2023 ஒருநாள் உலகக்கோப்பை முழுவதும் அடித்தால் சிக்சர் பவுண்டரி, இல்லையென்றால் அவுட் என்ற அணுகுமுறையுடன் விளையாடிவந்த ரோகித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் அதிரடியாக விளையாட சென்று தன்னுடைய விக்கெட்டை இழந்து வெளியேறினார். நல்ல டச்சில் இருந்த ரோகித் சர்மா வெளியேறியதும், மற்றவீரர்கள் அனைவரும் ரன்களை எடுத்துவர முடியாமல் தங்களுடைய விக்கெட்டை பறிகொடுத்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்திய அணி.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து கோப்பையை பறிகொடுத்தது. அந்த போட்டியில் விராட் கோலி, கேஎல் ராகுல், சூர்யகுமார் 3 வீரர்களின் ஆட்டத்தையும் வல்லுநர்கள் விமர்சித்தாலும், முக்கியமான நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்த ரோகித் சர்மாவையும் விமர்சித்தனர்.

Rohit Sharma

இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையில் ரோகித் சர்மா அதிரடியான அணுகுமுறைக்கு செல்லாமல் நிதானமாக விளையாட வேண்டும் என ரவிசாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார்.

இது ஒன்றும் ஐபிஎல் அல்ல..

2024 டி20 உலகக்கோப்பையில் 7 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், அனைத்து போட்டிகளிலும் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. ஐபிஎல்லில் 200 ரன்களுக்கு மேலான ஆடுகளத்தை பார்த்துவிட்டு, தற்போது டி20 உலகக்கோப்பையை பார்க்கும் இந்திய ரசிகர்களுக்கு இது ஒருநாள் போட்டியா இல்லை டி20 போட்டியா என்ற குழப்பமே ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல்லை வைத்து பார்த்த போது “இதெல்லாம் ஒரு அணியா” என இந்திய அணியை விமர்சித்த ரசிகர்கள், தற்போது இருக்குற நிலைமைக்கு “இந்திய அணிதான் சிறந்த அணியாக இருக்கிறது” என கருத்திட்டு வருகின்றனர். அந்தளவு ஆடுகளமானது பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்துவருகிறது.

rohit sharma

இந்நிலையில் ரோகித் சர்மா ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப ஆடவேண்டும் என கூறியுள்ளார் ரவிசாஸ்திரி. அதிரடியாக ஆடவேண்டுமா என்ற கேள்விக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பதில் கூறியிருக்கும் அவர், “இல்லை, நீங்கள் நிலைமைகளுக்கு ஏற்ப உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். வெவ்வேறு ஆடுகளங்களுக்கு ஏற்ப வெவ்வேறு ஷாட்களை விளையாட வேண்டும். இது ஐபிஎல் அல்ல, அதிக ரன்களை குவிக்கும் தார் சாலைகள் இங்கே இல்லை. எனவே இங்கே நீங்கள் உங்கள் ஆட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். ஆடுகளத்தில் இருக்கும் வேகம் மற்றும் பவுன்ஸிற்கு தகுந்தார் போல், இயல்பை விட கூடுதலாக 3-4 பந்துகளை பார்த்து விளையாடி பின்னர் உங்கள் வழியில் விளையாட வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.