தோனி - சாம்சன் x
T20

2010-ல் தோனி.. 2024-ல் சாம்சன்! அதே கர்ஜனை.. அதே எமோசன்! இது WC தேர்வுக்குழுவுக்கு அடித்த அடி!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

Rishan Vengai

ஒரு வீரனுக்கு அனைத்து தகுதிகள் இருந்தும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டாலோ அல்லது அவனுடைய அணியிடம் அனைத்தும் இருந்தும் கோப்பையை வெல்ல முடியாவிட்டாலோ, மனதிற்குள் அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் கோவமானது ஒருநாள் எரிமலை போல் வெடித்து சிதறும்.

அப்படித்தான் இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தனக்காகவும், தன்னுடைய அணிக்காகவும் ஒரு அழுத்தமான இடத்தில் இருந்து அணியை மீட்டு, ஒரு தரமான வெற்றிக்கு பின் மைதானத்தில் கர்ஜித்து ஆர்ப்பரித்தார்.

74 ரன்கள் குவித்த கேஎல் ராகுல்..

முக்கியமான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை அவர்களின் சொந்த மண்ணில் எதிர்த்து விளையாடியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வுசெய்ய, லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. ஒரு பெரிய டோட்டலை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு எதிராக, அபாரமாக பந்துவீசிய டிரெண்ட் போல்ட் தொடக்க வீரர் டி-காக்கை 8 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றினார். உடன் கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய மார்கஸ் ஸ்டொய்னிஸை 0 ரன்னில் போல்டாக்கி அனுப்பிய சந்தீப் சர்மா, லக்னொ அணியின் தலைமேல் இடியை இறக்கினார். 11 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை, 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் தீபக் ஹூடா இருவரும் மீட்டுவர போராடினர்.

கேஎல் ராகுல்

ஒரு ஓவருக்கு இரண்டு இரண்டு பவுண்டரிகளாக விரட்டிய இந்த ஜோடி, ரன்களை வேகமாக எடுத்துவந்தது. உடன் 8 பவுண்டரிகள், 2 சிக்சர்களை பறக்கவிட்ட கேஎல் ராகுல் 30 பந்துகளில் அரைசதமடித்து அசத்த, 7 பவுண்டரிகளை விளாசிய தீபக் ஹூடா 31 பந்துகளில் அரைசதமடித்து மிரட்டிவிட்டார். 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடி 12 ஓவர்களுக்கு 120 ரன்கள் எடுத்துவர, ஒரு மிகப்பெரிய டோட்டலை நோக்கி நகர்ந்த லக்னோ அணி ராஜஸ்தான் அணிக்கு தலைவலியை கொடுத்தது.

தீபக் ஹூடா

விக்கெட்டை தேடிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அஸ்வின் கையில் பந்தை கொடுக்க, ஆபத்தான வீரராக தெரிந்த தீபக் ஹூடாவை வெளியேற்றி விக்கெட்டை எடுத்துவந்தார் அஸ்வின். உடன் கேப்டன் ராகுலும் 76 ரன்களுக்கு வெளியேற, அதற்கு பிறகு களமிறங்கிய வீரர்கள் பெரிய அளவில் அதிரடியை காட்டமுடியாமல் தடுமாறினர். 220 ரன்கள் செல்லவேண்டிய லக்னோ அணியை, தங்களுடைய அபாரமான பந்துவீச்சால் 196 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது ராஜஸ்தான் அணி.

தனியாளாக வென்ற சஞ்சு சாம்சன்..

197 ரன்கள் என்ற நல்ல இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில், தொடக்கவீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என விரட்டிய இந்த ஜோடி, முதல் 6 ஓவரில் 60 ரன்களை எடுத்துவந்து மிரட்டியது. ஆனால் பந்துவீச்சில் ஒரு தரமான கம்பேக் கொடுத்த லக்னோ அணி, இரண்டே பந்தில் ஜெய்ஸ்வால், பட்லர் இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றி கலக்கிப்போட்டது. உடன் இன்ஃபார்ம் பேட்ஸ்மேன் ரியான் பராக்கை 14 ரன்னில் வெளியேற்றிய அமித் மிஸ்ரா, லக்னோ அணியின் பக்கம் போட்டியை திருப்பினார்.

சாம்சன் - ஜுரேல்

இக்கட்டான கட்டத்தில் முக்கியமான விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணியை மீட்டுஎடுத்துவரும் பொறுப்பு கேப்டன் சஞ்சு சாம்சனின் தோள்களில் சேர்ந்தது. 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த சஞ்சு மற்றும் துருவ் ஜுரேல் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சாம்சன்

நன்றாக செட் ஆன பிறகு அதிரடிக்கு திரும்பிய இந்த ஜோடி, அதற்குபிறகு திரும்பி பார்க்கவே இல்லை. ஃபார்மில் இல்லாமல் தடுமாறி வந்த ஜுரேல் 31 பந்துகளுக்கு அரைசதமடித்து அதிரடிக்கு திரும்ப, இறுதிவரை களத்தில் நின்று 33 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என துவம்சம் செய்த கேப்டன் சஞ்சு சாம்சன் ஒரு மேட்ச் வின்னிங் நாக் விளையாடி மிரட்டிவிட்டார். 19 ஓவர் முடிவில் இலக்கை எட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

தோனியை போலவே எமோசனை வெளிப்படுத்திய சாம்சன்..

அழுத்தமான இடத்தில் இருந்து அணியை மீட்டு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப்புக்கு எடுத்துச்சென்ற சஞ்சு சாம்சன், போட்டியின் வெற்றிக்கு பிறகு மைதானத்தில் கர்ஜித்து ஆர்ப்பரித்தார். எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கான அணியில் சஞ்சு சாம்சனின் பெயர் பரிசீலனையில் இருப்பதால், தன்னுடைய இடத்தை உறுதிசெய்யும் விதமாக இந்திய அணியின் தேர்வுக்குழுவுக்கு கேட்கும்படியான ஒரு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் 9 போட்டிகளில் 8 வெற்றிகளை பதிவுசெய்திருக்கும் ராஜஸ்தான் அணி அரையிறுதிக்கு தங்களை சீல்செய்துள்ள நிலையில், சஞ்சு சாம்சன் தன்னுடைய எமோசனை கத்தி வெளிப்படுத்தினார்.

தோனி

கடந்த 2010ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இதேபோலான ஒரு ஆர்ப்பரிக்கும் எமோசனை சிஎஸ்கே அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான மகேந்திர சிங் தோனி வெளிப்படுத்தினார். அரையிறுதியை உறுதிசெய்யும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 16 ரன்களை துரத்திய தோனி, அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டு வெற்றியை உறுதிசெய்தபின் ஹெல்மெட்டில் கையால் குத்திக்கொண்டே கர்ஜித்து எமோசனை வெளிப்படுத்துவார்.

சஞ்சு சாம்சன்

இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் வெளிப்படுத்திய எமோசன், அப்படியே தோனியை நினைவு படுத்தியது. கேப்டன்சி, மிடில் ஆர்டர் பேட்டர், விக்கெட் கீப்பிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்ப்பட்டு வரும் சஞ்சு சாம்சன், உலகக்கோப்பைக்கான சிறந்த தேர்வாக தெரிகிறார். இந்திய தேர்வுக்குழு என்ன செய்யப்போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.