rahul Dravid  x
T20

ஏன் கோப்பை வெல்ல முடியவில்லை? கடைசி வாய்ப்பில் வெல்வீர்களா? - டிராவிட் கூறிய சுவாரசிய பதில்கள்!

Viyan

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்குத் தான் மீண்டும் விண்ணப்பிக்கப்போவதில்லை என்று கூறியிருக்கிறார் ராகுல் டிராவிட். 2021 நவம்பர் மாதம் முதல் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் அவர்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் இந்திய தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கச் சொல்லி பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது. அதனால் டிராவிட் தொடர்ந்து பயிற்சியாளராகத் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு மத்தியில் கம்பீர், பான்டிங் போன்றவர்கள் இந்திய அணியின் பயிற்சியாளர்கள் ஆவார்களா என்றும் கேள்விகள் எழுந்தன.

நான் என்னுடைய வேலையை விரும்பி செய்தேன்!

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் டிராவிட் இதுபற்றிப் பேசினார்.

rahul Dravid | Ashwin

"ஒவ்வொரு தொடருமே ஒரு அணிக்கு முக்கியம். என்னைப் பொறுத்தவரை நான் இந்திய அணிக்குப் பயிற்சி கொடுத்த ஒவ்வொரு போட்டியுமே எனக்கு முக்கியமாகத்தான் இருந்திருக்கிறது. நான் பயிற்சி கொடுக்கப்போகும் கடைசி தொடர் என்பதால் எந்த வகையிலும் இது வித்தியாசமானதாக இருக்கப்போவதில்லை.

இந்த வேலையை நான் மிகவும் ரசித்து செய்தேன். இந்திய அணிக்குப் பயிற்சி கொடுப்பதை நான் ரசித்து செய்தேன். ஏனெனில் இது மிகவும் ஸ்பெஷலான வேலை. இந்த அணியோடும், இந்த சிறப்பான வீரர்களோடும் பணியாற்றியதை நான் மிகவும் ரசித்தேன்" என்று தன் முடிவைப் பற்றிக் கூறினார் டிராவிட்.

ஏன் கோப்பை வெல்ல முடியவில்லை!

இந்திய அணி இந்தக் காலகட்டத்தில் ஒரு ஐசிசி கோப்பையாவது வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களால் முடியவில்லை. இதுபற்றி டிராவிட்டிடம் கேட்டதற்கு, "துருதிருஷ்டவசமாக சர்வதேச கிரிக்கெட் அட்டவணை மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இப்போது என் வாழ்க்கையில் நான் இருக்கும் சூழ்நிலையில், மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் நான் விண்ணப்பிக்கப் போவதில்லை என்றே நினைக்கிறேன். நான் வெளிப்படையாக பேசுகிறேன். இந்த முடிவில் இருப்பதால், இந்தத் தொடரில் எந்த வகையிலும் எனக்கு மாறுதலாக இருக்கப்போவதில்லை. நான் பதவியேற்ற முதல் நாளில் இருந்தே எனக்கு ஒவ்வொரு போட்டியுமே முக்கியமானதாக இருந்திருக்கிறது. அது மாறப்போவதில்லை.

Rahul Dravid

உண்மையைச் சொல்லவேண்டுமானால் நாங்கள் உலகக் கோப்பை தொடர்களில் சிறப்பாகவே விளையாடியிருக்கிறோம். தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறோம். ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறினோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இல்லை தான். இருந்தாலும், அது ஒரு முழு சைக்கிள். அந்த மொத்த காலகட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு இறுதி வரை முன்னேறினோம். 2023 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அட்டகாசமாக செயல்பட்டு ஃபைனல் வரை முன்னேறினோம். எங்கள் கன்சிஸ்டென்ஸியை தொடர்ந்து காட்டியிருக்கிறோம். மிகவும் அட்டகாசமான கிரிக்கெட் ஆடியிருக்கிறோம். இந்தப் பெரிய தொடர்களில் மிகச் சிறந்த அணிகளுக்கு இணையாக நாங்களும் செயல்பட்டிருக்கிறோம்.

rahul dravid

இந்தத் தொடர்களில் நாங்கள் சிறப்பாக விளையாடிடவில்லை என்று சொல்லிட முடியாது. நாக் அவுட் சுற்றுகளில் அந்த ஒரு முக்கியமான போட்டியை எங்களால் கடக்க முடியவில்லை. அஹமதாபாத்தில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை ஃபைனலிலோ, ஓவலில் நடந்த WTC ஃபைனலிலோ, அடிலெய்டில் நடந்த டி20 உலகக் கோப்பை அரையிறுதியிலோ... இந்தப் போட்டிகளில் எங்களால் எங்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை" என்று கூறினார்.

கடைசி வாய்ப்பில் கோப்பை வெல்வீர்களா?

இது டிராவிட்டின் கடைசி உலகக் கோப்பையாக அமையப்போவதால், இந்தத் தொடருக்கான எதிர்பார்ப்பு பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.

Rahul Dravid - Rohit Sharma

"நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடி முன்பு போல் மீண்டும் ஒரு நல்ல நிலைக்கு வருவோம் என்று எதிர்பார்ப்போம். அதன்பிறகு இன்னும் நல்ல கிரிக்கெட் விளையாடி அந்தக் கடைசி தடையைத் தாண்டினால் சிறப்பாக இருக்கும். ஆனால் இப்படியான தொடர்களைத் தொடங்கும்போது அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் இருப்பது தான் முக்கியம். அந்த கடைசி கட்டத்துக்குப் போகவேண்டும் என்ற எண்ணம் இருக்கவேண்டும் தான். ஒரு அணியாக நீங்கள் நன்கு போராடி அந்த இடத்துக்குப் போக முயற்சிக்கவேண்டும். எங்கள் இலக்கு அந்த இடத்தை மீண்டும் அடையவேண்டும் என்பதுதான். அப்படியிருக்கும்போது இந்தத் தொடரை வெல்ல எங்களுக்கு ஒரு வாய்ப்பு உருவாகும்" என்று கூறினார் அவர்.