Rahul Dravid ட்விட்டர்
T20

“சக ஊழியர்களுக்கு தரும் பரிசுத்தொகையே எனக்கும் கொடுங்கள்; அதிகமாக வேண்டாம்” - ராகுல் ட்ராவிட்!

ஜெ.நிவேதா

நடப்பு டி20 உலகக்கோப்பையை வென்று நாடு திரும்பிய இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு மட்டுமன்றி பிசிசிஐ சார்பில் ரூ.125 கோடி பரிசுத் தொகையும் அளிக்கப்பட்டது.

முன்னதாக போட்டி முடிவில் இந்தியா வென்றவுடன் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டை, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியுடன் இதர வீரர்களும் தூக்கிக் கொண்டாடி மகிழ்ந்தனர். அவரும், ஓர் உலகக்கோப்பையை வென்றுகொடுத்த உற்சாகத்தில் இந்திய அணியிலிருந்து விடைபெற்றார். இந்நிலையில் ராகுல் டிராவிட்டுக்கு, உலகக் கோப்பை வென்றதற்காக ரூ 5 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

ஆனால் ட்ராவிட், அதை வாங்க மறுத்து “என்னுடைய சக கோச்-களுக்கு வழங்கபட்ட ரூ 2.5 கோடியையே எனக்கும் கொடுங்கள். கூடுதலாக வேண்டாம்” என்று கூறியிருக்கிறார். ஹிந்துஸ்தான் டைம்ஸில் பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், இதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

ராகுல் டிராவிட்டை கொண்டாடிய இந்திய கிரக்கெட் அணி

அந்த அதிகாரி, “ராகுல் தனது மற்ற உதவி ஊழியர்களுக்கு (பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மம்ப்ரே, பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர்) வழங்கப்பட்ட ரூ. 2.5 கோடி என்ற அதே போனஸ் பணத்தை பெற விரும்பினார். அவரது உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

ஏற்கெனவே 2018-ல் 19 வயதுக்கு கீழானவர்களுக்கான U19 உலகக்கோப்பை வெற்றியின்போதும், ராகுல் ட்ராவிட் இதேபோன்றொரு முடிவை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது ராகுலுக்கு ரூ 50 லட்சமும், அவரது சக பணியாளர்களுக்கு ரூ 20 லட்சமும் வழங்கப்பட்டது. விளையாடிவர்களுக்கு ரூ 30 லட்சம் வழங்கப்பட்டது. இதை எதிர்த்த ராகுல் ட்ராவிட், பிசிசிஐ தன் முடிவிலிருந்து மாறும்படி அறிவுறுத்தி, அனைவருக்கும் சமமாக தொகையை வழங்க வலியுறுத்தினார்.

அதன்பேரில் பிசிசிஐ அனைவருக்கும் ரூ 25 லட்சம் வழங்கியது. தற்போதும் தனக்கே உரிய பாணியில் மீண்டுமொரு முறை அதை செய்திருக்கிறார் ட்ராவிட். ‘அணியின் தலைமை பொறுப்பில் இருந்து ஓய்வுபெறும் நேரத்திலும், தன் அணிக்காக எப்போதும் நிற்கிறார் ட்ராவிட்’ என அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன!