virat, dravid, rohit pt web
T20

ராகுல் டிராவிட்டிற்கு மீண்டும் பதவி வழங்கப்படாதது ஏன்?.. பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன?

Prakash J

வெற்றிகளை குவித்த ராகுல் டிராவிட்.. ஏன் மீண்டும் பதவி கொடுக்கவில்லை?

இந்திய அணி மீண்டும் டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றியது குறித்த பேச்சுகள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் அந்தத் தொடருடன் கேட்பன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றிருப்பதும் பேசுபொருளாகி வருகிறது. மேலும், சிறந்த பங்களிப்பைத் தந்த தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் ஓய்வு குறித்த பேச்சும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த காலங்களில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஒருசிலருக்கு, மீண்டும் அந்தப் பதவி வழங்கப்பட்டது. அதேநேரத்தில், கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்திய அணியின் எண்ணற்ற வெற்றிகளுக்கு வித்திட்ட ராகுலுக்கு மீண்டும் அந்தப் பதவி வழங்கப்படவில்லை.

ராகுல் டிராவிட்

பதவி வேண்டாம் என்பதற்கு டிராவிட் சொன்னதாக கூறப்படும் காரணம்!

குறிப்பாக அவர் பதவியேற்றபின், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி மற்றும் நடப்பு டி20 உலகக்கோப்பை சாம்பியன் உள்ளிட்ட பல வெற்றிகளுக்குக் காரணமாக இருந்தவர் ராகுல் டிராவிட். இதுதவிர, இன்னும் பல கோப்பைகளையும் அவருடைய காலத்தில் இந்திய அணி வென்றுள்ளது. அப்படியிருந்தும், ராகுல் டிராவிட்டை திட்டமிட்டே பிசிசிஐ கலட்டிவிடுவதாகக் கூறப்படுகிறது. ’அவர் குடும்பச் சூழ்நிலை காரணமாக மீண்டும் பயிற்சியாளராக விரும்பவில்லை’ என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், உண்மை அதுவல்ல என்கின்றனர் கிரிக்கெட் சார்ந்த வல்லுநர்கள்.

இதையும் படிக்க: தென்னாப்பிரிக்காவிற்கு தொடரும் சோகம்.. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி!

காம்பீரே அடுத்து எல்லாம்!!

கிரிக்கெட்டிலும் மிகப்பெரிய அரசியல் இருப்பதாகவும், அது பிசிசிஐக்குள்ளும் நுழைந்திருக்கிறது என்கின்றனர், அவர்கள். அதனால்தான் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் கெளதம் காம்பீர், மீண்டும் கிரிக்கெட் களத்திற்குள் நுழைந்துள்ளார். இவர், ஏற்கெனவே பாஜகவின் சார்பாக எம்பியாக இருந்தவர். தற்போது மீண்டும் பாஜக ஆட்சியே நடைபெறுகிறது. அதனால், அவர் பாஜக அரசுக்கு சாதகமான செயல்களையும் செய்வதோடு, அவர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளையே எடுப்பார் என்பதாலேயே கெளதம் காம்பீரின் பெயரே, அடுத்த தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு முன்னிலையில் உள்ளது.

கெளதம் காம்பீர் பதவிக்கு வரப்போகிறார் எனத் தெரிந்துதான் விராட், ரோகித், ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். காரணம், இவர்களுக்கும் காம்பீருக்கும் சரிப்பட்டு வராது எனக் கூறப்படுகிறது. ஏனெனில், ராகுல் டிராவிட்டைப் பொறுத்தைவரை எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் கோபத்தை வெளிப்படுத்தாதவர். தவிர, ஒருமுறையோடு ஒரு வீரரை அனுப்பிவிட மாட்டார். அந்த வீரருக்கு மீண்டும்மீண்டும் வாய்ப்புகள் வழங்கி அவரை ஊக்கப்படுத்துவார்.

ஆனால், கவுதம் காம்பீர் அப்படியல்ல. எப்படிப்பட்ட வீரரையும் முகத்திற்கு நேராகக் கேட்டுவிடுவார். அவருக்குப் பதில் அடுத்த வீரருக்கு வாய்ப்பு வழங்குவார். இதை, ஐபிஎல் போட்டிகளில் பார்த்திருக்கலாம். இதைத்தான் பிசிசிஐயும் விரும்புகிறது. அதனால், காம்பீரைத் தேர்வு செய்ய முடிவெடுத்தது. இதன்காரணமாக, டிராவிட்டை மீண்டும் பயிற்சியாளராக்க விரும்பவில்லை. இந்த விஷயம் தெரிந்துதான் டிராவிட்டும் அதிலிருந்து ஒதுங்கிக்கொள்ள தயாராய் இருந்தார். வீரர்களும் பயிற்சியாளர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் வெற்றி கிடைக்கும். அதற்கு பல உதாரணங்களைக் கூறலாம்.

இதையும் படிக்க: கபில், ஸ்ரீசாந்த், SKY.. 3 கேட்ச்களால் வசமான 3 உலகக்கோப்பைகள்.. வைரலாகும் புகைப்படங்கள்!

கேப்டன் - பயிற்சியாளர் மோதல் - வரலாறு சொல்வதென்ன?

ஆனால் கடந்த காலங்களில் கிரேக் சேப்பல் - செளரவ் கங்குலி மற்றும் அனில் கும்ப்ளே - விராட் கோலி ஆகியோர் மோதல்கள் குறிப்பிடத்தக்கவை. இந்தச் சூழலில்தான் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையுடன் ஓய்வுபெற முடிவெடுத்தார் ராகுல் டிராவிட். அப்போது, பிசிசிஐயும் 2024 டி20 உலகக்கோப்பை வரை நீடிக்க வலியுறுத்தியது. ஆனால், அவர் மறுத்துள்ளார். அதன்பிற்கு ரோகித் சர்மா டிராவிட்டுக்கு போன் செய்து பதவியைத் தொடருமாறு வலியுறுத்தியுள்ளார். அவருடைய போனுக்குப் பிறகே டிராவிட்டும் பதவியைத் தொடர்ந்துள்ளார். அதன் பலன், தற்போது உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.

ரோஹித் மற்றும் டிராவிட்

இந்த தருணத்தை அதிகம் கொண்டாடியவர் ராகுல் டிராவிட்தான். அவருடைய உணர்ச்சிப்பூரவமான தருணம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. ஆக, கேப்டனும் வீரர்களும் பயிற்சியாளரும் ஒருமித்த கருத்துடன் இணைந்து பயணித்தால் வெற்றிக்குப் பஞ்சமிருக்காது. இது வருங்காலத்தில் எப்படியிருக்கும் என கணித்தே ரோகித், விராட், ஜடேஜா ஆகியோர் விலகியிருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர். காம்பீர் வந்து அனுப்புவதற்குப் பதில் அவர்களே இந்த முடிவை எடுத்ததற்காக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில், காம்பீர் பதவியேற்பதற்கு முன்பாகவே அவருடைய ஆட்டம் ஆரம்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ’இன்னும் ஒரு வேலை இருக்கிறது..’ ஓய்வுபெற்ற விராட் கோலியிடம் இறுதியாக அறிவுரை கூறிய ராகுல் டிராவிட்!