shikhar dhawan PTI
T20

'போர்டெல்லாம் புதுசு புதுசா மாத்தினாலும் டீத்தூள் மாறமாட்டுதே' - Punjab Kings ஒரு பார்வை #IPL

ஐ.பி.எல் வரலாற்றில், ஏன் உலக டி20 வரலாற்றிலேயே ஆறாவது இடத்திற்கு போட்டி போடும் ஒரே அணி இந்த அணிதான்.

Nithish

ஐ.பி.எல்லின் பஞ்சாப் அணியை சிம்பிளாக இப்படி விவரிக்கலாம். 'விக்ரம்' படத்தின் இடைவேளை கல்யாணக் காட்சி ஞாபகம் இருக்கிறதா? 'ஓ.. புகையை போட்டபடி  மாஸாய் மாஸ்க் போட்டபடி வருவாரே கோஸ்ட்.. அதுதான் பஞ்சாப்பா' என்கிறீர்களா? சேச்சே.. இல்லை இல்லை. 'ஓ அப்போது ஓரமாய் நின்று பாக்கெட்டில் போதை வஸ்துவும் கையில் பொருளுமாய் மிரட்டலாய் நிற்பாரே சந்தனம்... அவர்தான் பஞ்சாப் போல' என நினைக்கிறீர்களா? கண்டிப்பாய் இல்லை.

இவர்கள் இரண்டு பேருக்கும் நடுவே ஒரு பெரியவர் சிவப்புக் கலர் துண்டு போட்ட ஷெர்வானியோடு குறுக்கே இடுப்பை ஆட்டியபடி வந்து போய்க்கொண்டிருப்பாரே.. அதுதான் பஞ்சாப். மற்ற அணிகள் எல்லாம் மாய்ந்து மாய்ந்து ப்ளே ஆப்பிற்கு போராடிக்கொண்டிருக்க, இவர்கள் சம்பந்தமே இல்லாமல் குறுக்கே மறுக்கே ஓடிக்கொண்டிருப்பார்கள். ஐ.பி.எல் வரலாற்றில், ஏன் உலக டி20 வரலாற்றிலேயே ஆறாவது இடத்திற்கு போட்டி போடும் ஒரே அணி இந்த அணிதான். கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து ஆறாவது இடம்.

Punjab Kings

பஞ்சாப் அணிக்கென ஒரு பாரம்பரியம் உண்டு. பார்த்துப் பார்த்து ஒட்டிய அபிமான நடிகரின் போஸ்டரை மூன்றாவது நாளே டர்ரெனக் கிழித்துவீசிவிட்டு அடுத்தப் பட போஸ்டரை ஒட்டும் தொழிலாளி போல டீமை சர்ர் சர்ரெனக் கிழித்தெறிந்துவிட்டு அடுத்த ஆண்டு புது டீமை எடுப்பார்கள். இந்த 16 சீசன்களில் பஞ்சாப் அணிக்கு 13 பேர் கேப்டன்களாக இருந்திருக்கிறார்கள். கோச் லிஸ்ட் தனி. பத்து பேர் மாறியிருக்கிறார்கள். சென்னை, மும்பை போன்ற அணிகள் தொடர்ந்து கோப்பை அடிப்பதற்குக் காரணமே அணி நிர்வாகங்கள் அவர்களை பதற்றமின்றி குடும்பம் போல அடைகாத்து வைத்துக்கொள்வதுதான். அதை விட்டுவிட்டு இஷ்டத்துக்கு டீம் எடுத்தால் கோப்பையை தொடும்தூரத்திற்குக் கூட போகமுடியாது என்பதை பஞ்சாப் டீம் ஓனர்களுக்கு யார் சொல்லி புரியவைக்க. இதோ 2023-க்கான ஏலத்திலும் இருக்கும் அணிகளிலேயே அதிக பணம் வைத்திருந்தும் சரியான தேர்வுகளை செய்யாமல்  அதிலும் 12 கோடி ரூபாய் மிச்சம்பிடித்துக்கொண்டு வந்துவிட்டார்கள். 'இந்த வருஷமும் போச்சா?' என சலித்துக்கொள்ளும் லட்சக்கணக்கான பஞ்சாப் அணி ரசிகர்களின் கண்ணீரைத் துடைக்க இந்த காசில் டிஷ்யூ பேப்பர்கள் வாங்குவார்களோ என்னமோ.

வாரணம் ஆயிரம்

பஞ்சாப் அணியின் பெரிய பலம் அதன் மிடில் ஆர்டர் தான். பனுகா ராஜபக்‌ஷ, லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் சர்மா, ஷாருக் கான் என பந்தைத் தொட்டாலே சிக்ஸர்கள் பறந்துவிடக்கூடிய பலசாலிகள் கொண்ட மிடில் ஆர்டர் இது.

Shahrukh Khan

அடுத்த ப்ளஸ் சாம் கரன். நம் வீட்டுச் சுட்டிக்குழந்தை இப்போது வளர்த்த கெடாவாகி நம்மையே முட்டக் காத்திருக்கிறது. ஏல டேபிளில் அத்தனை அணிகளும் கரனை வாங்கப் போட்டி போட்டன என்றால் சும்மாவா? கடந்த உலகக்கோப்பை டி20 தொடரிலிருந்தே பேட்டிங், பவுலிங் இரண்டிலும் செம ஃபார்மில் இருக்கிறார் கரன். சமீபமாய் டெத் ஓவர்களிலும் நன்றாய் பந்துவீசுவதால் அவரும் அர்ஷதீப்பும் இணையும்பட்சத்தில் எதிரணிகள் இறுதி ஓவர்களில் ரன் குவிப்பது இமாலயச் சிரமமாகிவிடும்.

அணிக்கு ஆயிரம் யானைகளின் பலத்தைக் கொடுப்பது இந்த வீரர்கள்தான்.

பலவீனம்

முதல் சிக்கல் 'கேப்டன் ஷிகர் தவன்'. ஐ.பி.எல்லில் அவரின் கேப்டன்ஷிப் ரெக்கார்ட் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதுவரை கேப்டனாய் இருந்த 16 போட்டிகளில் ஏழில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார். அதைவிட கவலை தரக்கூடிய விஷயம் கேப்டனாய் அவரின் பேட்டிங் சராசரி. வெறும் 20 தான். அதனால் இந்த சீசனில் அவர் எப்படி ஒரு பேட்ஸ்மேனாய் செயல்படுகிறார் என்பதைப் பொறுத்தே அணியின் வெற்றி வாய்ப்பு

shikhar dhawan

சென்னை, கொல்கத்தா போன்ற அணிகள் ஹோம் கிரவுண்டில் ஸ்பின் பிட்ச்களை வைத்து ஆடுவது வழக்கம். ஆனால் பஞ்சாப் அணியிலோ ராகுல் சஹாரை விட்டால் சொல்லிக்கொள்ளும்படியான ஸ்பின்னர்கள் இல்லை. இருக்கும் மற்றொரு ஸ்பின்னரான ஹர்ப்ரீத் ப்ராரும் 15 ஆட்டங்களில் 9 விக்கெட்களே வீழ்த்தியிருக்கிறார். இவருக்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைக்காதபட்சத்தில் லிவிங்ஸ்டோனும் ஷாருக்கானும் ஒன்றிரண்டு ஓவர்கள் வீச வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அணியின் தூணான பேர்ஸ்டோ காயம் காரணமாக இந்த ஐ,பி.எல்லிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்கு பேக்கப்பாக ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஷார்ட் எடுக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு ஐ.பி.எல் அனுபவம் துளியுமில்லை என்பதால் எப்படி பெர்ஃபார்ம் செய்வார் என்பதும் சந்தேகமே. பனுகா ராஜபக்‌ஷவின் கவலைக்குரிய ஃபார்ம் காரணமாக சிக்கந்தர் ராஸா ப்ளேயிங் லெவனில் இடம்பெற்றால் பேட்டிங் லைன் அப்பிலும் கொஞ்சம் ஆழமிருக்கும். சிக்கந்தரின் சுழலையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அணியில் இந்திய வீரர்களுக்கு காயம்பட்டால் பேக்கப்பிற்கு பலமான ப்ளேயர்களே இல்லையென்பதும் ஒரு மிகப்பெரிய குறை.

தனி ஒருவன்

இந்தத் தொடரில் பஞ்சாப் அணியின் கவனிக்க வேண்டிய வீரர்கள் இருவர். முதலாமவர் ஜிதேஷ் சர்மா. பன்ட், சாம்சன், ராகுல், இஷான் கிஷன் வரிசையில் நம்பிக்கைக்குரிய கீப்பர்/பேட்ஸ்மேன். கடந்த முறை 163.64 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய இவரை பெருமளவு நம்பியிருக்கிறது பஞ்சாப்பின் மிடில் ஆர்டர்.

jitesh sharma

அடுத்தவர் ப்ரப்சிம்ரன் சிங். சமீப காலமாய் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் கோலோச்சி வரும் பஞ்சாப் மண்ணின் மைந்தன். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால் பேர்ஸ்டோ இல்லாத குறையை நீக்க தவானோடு இவர் ஓபனிங் இறங்க வாய்ப்புகள் அதிகம். ஐ.பி.எல்லில் பெரிதாய் இதுவரை சோபிக்காவிட்டாலும் முரட்டுத்தனமான ஃபார்ம், பழகிய பஞ்சாப் மைதானம் ஆகிய சாதகங்களோடு எல்லாரின் ரேடாரிலும் இருக்கிறார்.

துருவங்கள் பதினொன்று

ஷிகர் தவான், ப்ரப்சிம்ரன் சிங், பனுகா ராஜபக்‌ஷ. லிவிங்ஸ்டோன். ஜிதேஷ் சர்மா, ஷாருக்கான், ரிஷி தவான், சாம் கரன், ரபாடா, அர்ஷதீப், ராகுல் சஹார். 

(பனுகா ராஜபக்‌ஷ இலங்கை அணிக்கான சர்வதேசத் தொடர் முடிந்தபின் தான் வருவாரென்பதால் அதுவரை சிக்கந்தர் ராஸா இறங்க வாய்ப்புகள் அதிகம். இந்திய மைதானங்களில் சிக்கந்தர் பெரிதாய் ஆடியிருக்காததால் அதையும் யோசித்தே தேர்வு செய்வார்கள்.

இம்பேக்ட் ப்ளேயர்கள் :

இந்த ஆண்டிலிருந்து இம்பேக்ட் ப்ளேயர் எனும் முறை ஐ.பி.எல்லில் அறிமுகமாகிறது. அதன்படி ப்ளேயிங் லெவன் தவிர ஐந்து பிளேயர்களை கேப்டன் மாற்றுவீரர்களாக அறிவிக்கலாம். அவர்களுள் ஒருவர் ஆட்டத்தின் தன்மை பொறுத்து பவுலராகவோ, பேட்ஸ்மேனாகவோ களமிறங்குவார். பவுலராய் களமிறங்குபவர் நான்கு ஓவர்களையும் வீசலாம். பேட்ஸ்மேனாய் களமிறங்குபவரும் அவுட்டாகும்வரை/ஓவர் முடியும்வரை விளையாடலாம். அப்படி பேட்ஸ்மேன் களமிறங்கும்பட்சத்தில் டெயில் எண்டில் இருக்கும் பவுலருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்காது. அதே போல இவர்கள் களமிறங்கும்போது வெளியேறும் வீரர் அதன்பின் ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும் திரும்ப பங்குகொள்ளமுடியாது.

இதன்படி பஞ்சாப் கிங்ஸின் இம்பாக்ட் பிளேயர்கள் பட்டியல் பெரும்பாலும் இப்படி இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

சிக்கந்தர் ராஸா (அடுத்தடுத்து விக்கெட்கள் போனாலோ, சுழலுக்கு சாதகமான பிட்ச் என்றாலோ இவரின் தேவை அவசியம்.

ஹர்ப்ரீத் ப்ரார் (அணிக்கு ஒரு எக்ஸ்ட்ரா ஸ்பின்னர் தேவைப்படும்போது)

Harpreet Brar

அதர்வா டெய்ட் (முதல்தர கிரிக்கெட்டில் அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்துக்கொண்டிருக்கும் இவர் எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனாய் பயன்படுவார்.)

பல்தேஜ் சிங் (அணிக்கு ஒரு வேகப்பந்துவீச்சாளர் தேவைப்பட்டால் )

ஹர்ப்ரீத் சிங் பாட்யா (அதர்வாவுக்கு சொன்னதுபோலவே ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனாய்ப் பயன்படுவார்.

harpreet Bhatia

இந்தமுறை தொடரை வென்றேயாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறது பஞ்சாப் அணி. ஷிகர் தவான் தலைமையில் கோப்பையை வாங்க மேடையை நோக்கி வெற்றிநடை போடுவார்களா இல்லை, 'போர்டெல்லாம் புதுசு புதுசா மாத்தினாலும் டீத்தூள் மாறமாட்டுதே' என்கிற அதே பழைய கதையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.