இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த 2025 ஐபிஎல் திருவிழாவிற்கான மெகா வீரர்கள் ஏலமானது இன்றும், நாளையும் ( நவம்பர் 24 - 25) என இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கிறது.
ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ஏலத்தொகை மற்றும் 6 ஆர்டிஎம் கார்டு ஆப்சன்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 10 ஐபிஎல் அணிகளும் அவர்களுக்கான அணியை கட்டமைக்கும் முயற்சியில் இன்று ஏலத்தில் வீரர்களை வாங்கவுள்ளனர்.
367 இந்திய வீரர்கள், 210 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் நிலையில், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் முதலிய 3 இந்திய ஸ்டார் வீரர்கள் மிகப்பெரிய ஏலத்திற்கு செல்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இன்றைய நாள் ஐபிஎல் ஏலமானது 3.30 PM மணி முதல் 10.30 PM வரை தொடங்கியுள்ளது.
பரபரப்பாக தொடங்கிய 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் வீரராக அர்ஷ்தீப் சிங்கின் பெயர் வாசிக்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற பிட்டில் கடைசிவரை சென்ற சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி ரூ.18 கோடிக்கு அதிகபட்ச விலையாக பிக்ஸ் செய்தது. ஆனால் அதனை ஏற்றுக்கொண்ட பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18 கோடிக்கு RTM மூலம் அர்ஷ்தீப் சிங்கை தக்கவைத்துக்கொண்டது.
இரண்டாவது பெயராக முன்னாள் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ககிசோ ரபாடாவின் பெயர் வாசிக்கப்பட்டது, இறுதிவரை அவருக்கு சென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.10.75 கோடிக்கு வாங்கியது. பஞ்சாப் கிங்ஸ் இடம் ஆர்டிஎம் கேட்கபட்ட நிலையில் அவர்கள் எடுக்க விரும்பாததால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சென்றார் ககிஷோ ரபாடா.