Prithvi shaw Twitter
T20

”நெனச்சதொன்று நடந்ததொன்று ஏன் ராசா” - இம்பேக்ட் பிளேயராக இறங்கிய பிரித்வி ஷா! முதல் ஓவரிலேயே ஷாக்!

Rishan Vengai

ஜோஸ் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வாலின் அதிரடியால் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 199 ரன்கள் குவித்துள்ளது. பட்லர் ஒரு சிக்ஸர் 11 பவுண்டரிகள் உட்பட 51 பந்துகளில் 79 ரன்களும், ஜெய்ஸ்வால் 31 பந்துகளில் 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உட்பட 60 ரன்களும் எடுத்து டெல்லி பந்துவீச்சாளர்களை சோதித்தனர். முதல் ஓவரில் இருந்தே தங்களுடைய அதிரடியால் ரன்களை குவித்து அசத்திய இந்த ஜோடி, ராஜஸ்தான் அணியை 199 ரன்களுக்கு எடுத்து சென்றது.

200 ரன்கள் இலக்கு என்பது கடினமானதாக இருக்கும் என்பதால் இம்பேக்ட் பிளேயராக பிரித்வி ஷாவை கலீல் அஹமதுவிற்கு பதிலாக களமிறக்கினார் கேப்டன் வார்னர். பிரித்வி ஷா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடுவதில் வல்லவர். அத்துடன் முதல் ஓவரிலேயே 6 பவுண்டரிகளை விளாசி அந்த சாதனையை இன்றுவரை தக்க வைத்திருப்பவர். ஆனால், வார்னர் போட்ட கணக்கிற்கு நேர்மாறாக களத்தில் நடந்தது.

பிரித்வி ஷா

ராஜஸ்தான் அணியில் முதல் ஓவரை வீச வந்தார் ட்ரெண்ட் போல்ட். முதல் இரண்டு பந்துகளில் ரன்கள் எதுவும் எடுக்காத நிலையில் மூன்றாவது பந்தினை அடித்து விளையாட முற்பட்டார் பிரித்வி ஷா. ஆனால், பந்து எட்ஜ் ஆகி கீப்பருக்கும் முதல் சிலிப்பருக்கும் இடையே பந்து சென்றது. சஞ்சு சாம்சன் அற்புதமாக டைவ் அடித்து பந்தை கச்சிதமாக பிடித்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

முதல் ஓவரில் RR vs DC :

முதல் ஓவரை பொறுத்தவரை ராஜஸ்தான் அணி பேட்டிங்கின் போது 5 பவுண்டரிகளை பதிவு செய்தது. ஜெய்ஷ்வால் அதிரடியால் அசத்தி இருந்தார். ஆனால், டெல்லி அணி முதல் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

DC vs RR

பிரித்ஷா ஷா அவுட் ஆன அடுத்த பந்திலேயே மணிஷ் பாண்டே முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்த இரண்டு பந்துகளிலும் ரன்கள் எடுக்கப்படவில்லை. ட்ரெண்ட் போல்ட் முதல் ஓவரிலேயே ரன் எதுவும் கொடுக்காமல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெல்லி அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி தான் கிடைத்தது.

டக் அவுட்டில் வெளியேறிய முதல் இம்பேக்ட் பிளேயர்:

டெல்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதுவிற்கு பதிலாக இம்பேக்ட் வீரராக களமிறங்கினார் பிரித்வி ஷா. 3 பந்துகளை எதிர்கொண்ட அவர், டக் அவுட்டாகி வெளியேறினார். இந்நிலையில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய ஒரு வீரர் டக் அவுட்டில் வெளியேறியது இதுவே முதல்முறையாகும். 0 ரன்னில் வெளியேறிய முதல் இம்பேக்ட் வீரராக மாறியுள்ள பிரித்வி ஷா, கடந்த 3 போட்டிகளிலும் சோபிக்க தவறிவிட்டார்.