இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் டி20 தொடரானது, இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே பல சுவாரசியமான போட்டிகளை விருந்தாக படைத்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 200க்கும் மேற்பட்ட ரன்களை கொண்ட அதிகமான போட்டிகள், 5 பந்துகளில் 5 சிக்சர்கள், இறுதிபந்துவரை எகிறும் இதயத்துடிப்பு, கடைசிக்கட்ட விறுவிறுப்பு என ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் கட்டிப்போட்டுள்ளது, 2023 ஐபிஎல் தொடர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது, மற்றுமொரு மறக்கமுடியாத போட்டியாக ஐபிஎல்லில் அமைந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துகளை எல்லாம் பவுண்டரி, சிக்சர்களாக மாற்றிய லக்னோ அணி வானவேடிக்கை காட்டியது.
முதல் பந்திலிருந்து தொடங்கிய அதிரடி கடைசி பந்துவரை நிற்கவேயில்லை. என்ன செய்வதென்று கூட பஞ்சாப் பவுலர்களை யோசிக்க விடாத கைல் மேயர்ஸ், ஆயுஸ் பதோனி, ஸ்டோய்னிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் நான்குபேரும், 257 என்ற இமாலய ரன்களை குவித்து அசத்தினர். அதைத்தொடர்ந்து பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் கலக்கிய லக்னோ, பஞ்சாப் கிங்ஸை போட்டியில் எழவே விடாமல், 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
போட்டிமுடிந்து பேசிய பஞ்சாப் பயிற்சியாளர் வாசிம் ஜாஃபர், "மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிராக, எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். ஆனால் இன்றைய நாள் எங்களுக்கு ஒரு அரைநாளாகவே இருந்தது. லக்னோ பேட்டர்கள் கடைசிவரை அதிரடியை நிறுத்தவே இல்லை.
எதிரணிக்கு எல்லாமே க்ளிக் ஆனது, ஆனால் எங்களுக்கு அப்படியே தலைகீழாக மாறியது. இருப்பினும் அதிகப்படியான ஸ்லோவர் பந்துகள், அதிக இடைவெளி இருக்கும் பக்கங்களுக்கு ஏற்பவும் நாங்கள் பந்துவீசியிருக்கலாம். ஆனால் விரைவாக இந்த மோசமான தோல்வியிலிருந்து எங்கள் பந்துவீச்சாளர்கள் மீண்டு வருவார்கள்" என்று கூறினார்.
இந்நிலையில், போட்டிக்கு முன்னதாக, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ப்ரீ-ஷோ உரையாடலில் பேசியிருந்த பஞ்சாப் அணி உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா, முந்தைய காலகட்டங்களில் பஞ்சாப் அணியோடு ஏற்பட்ட கலகலப்பான சம்பவம் பற்றி பகிர்ந்துகொண்டார்.
முதலில் தொகுப்பாளர், "ப்ரீத்தி ஜிந்தா தனது அணிக்காக ஆலு பரோட்டாவை செய்வார் என்று யார் நினைத்திருப்பார்கள்? அதற்குப் பிறகு அவர்கள் பரோட்டாவை சாப்பிடுவதையே நிறுத்தியிருப்பார்கள்" என்று கூற, அதற்கு ப்ரீத்தியின் அருகில் நின்றிருந்த ஹர்பஜன் சிங், குலுங்கி சிரிக்க ஆரம்பித்தார்.
அந்த கேள்விக்கு கலகலப்பாக பேசிய ப்ரீத்தி, அதை ஏன் கேட்குறீங்க என்பது போல், “அதுவரை வீரர்கள் எவ்வளவு சாப்பிடுவார்கள் என்று எனக்கு தெரியாது. நாங்கள் அப்போது சவுத் ஆப்பிரிக்கா ஐபிஎல் தொடரில் இருந்தோம், வீரர்களுக்கு பகிரப்பட்ட பரோட்டா அவ்வளவு சிறப்பாக இல்லை. அதனால் பரோட்டா எப்படி செய்வதென்று உங்களுக்கு சொல்கிறேன் என்று, பரிமாறியவர்களிடம் கூறினேன். அதை கேட்டுக்கொண்டிருந்த வீரர்கள், எங்களுக்கு செய்து தருவீர்களா என கேட்டனர். அடுத்த போட்டியில் நீங்கள் வெற்றிபெற்றால் செய்து தருகிறேன் என கூறி மாட்டிக்கொண்டேன்” என சிரித்தபடியே கூறினார்.
ஆனால் அடுத்த போட்டியை பஞ்சாப் வென்ற பிறகு தான் தெரிந்தது, இவர்கள் இவ்வளவு சாப்பிடுவார்களா? என்று. ஒன்று பத்தல்ல, மொத்தமாக 120 ஆலு பரோட்டாவை செய்து கொடுத்தேன் என ப்ரீத்தி கூற, இடையில் குறுக்கிட்ட ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான் மட்டும் 20 சாப்பிட்டார் என சிரித்தபடியே கூறினார். அதற்கு பிறகு நான் பரோட்டா செய்வதையே விட்டுவிட்டேன் என கலகலப்பாக தெரிவித்தார் ப்ரீத்தி ஜிந்தா.