Rishabh Pant | Ricky Ponting Delhi Capitals
T20

"ரிஷப் பண்ட்டை ஜாலியான வீரர் என்று மட்டும் நினைத்துவிடக்கூடாது" - ரிக்கி பான்டிங்

நாம் எல்லோருமே அவர் ஆடுவதைப் பார்த்திருக்கிறோம். ஸ்டம்ப் மைக்கில் அவர் பேசுவதையும் கேட்டிருக்கிறோம். அவர் மிகவும் அருமையான கேரக்டர். உங்கள் குரூப்பில் அப்படியொரு ஆள் இருக்கவேண்டும் என்று தோன்றும்.

Viyan

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் டெஸ்ட் அரங்கில் மிகச் சிறந்த வீரராக தன்னை நிரூபித்திருக்கிறார் என்றும், அவரை யாரும் வெறும் ஜாலியான வீரராக மட்டும் கருதிவிடக்கூடாது என்றும் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங். அதுமட்டுமல்லாமல் தன் காயத்திலிருந்து ரிஷப் பண்ட் கொடுத்திருக்கும் கம்பேக் மறக்க முடியாத ஒன்று என்றும் கூறியிருக்கிறார் அவர்.


"இது ஒரு மறக்க முடியாத கம்பேக். அவர் காலைப் பார்த்தால், அதுபற்றி அவர் கூறும் கதைகளைக் கேட்டால், அவை அவ்வளவு கடினமானதாக இருக்கும். அந்த கார் விபத்துக்குப் பிறகு அவர் கடந்து வந்த விஷயங்கள் நினைத்துப் பார்க்க முடியாதவை. உளவியல் ரீதியாக அவர் சந்தித்த சவால்கள் ஏராளம். அதேசமயம் உடல் ரீதியாக சந்தித்தவையும் நினைத்துப் பார்க்க முடியாதவை. அவ்வளவு கடினமான ரீஹாபை கடந்து வந்தார். சொல்லப்போனால் அவர் கடந்த (2024) ஐபிஎல் தொடரில் நிச்சயம் விளையாடமாட்டார் என்று தான் நினைத்தேன்.

12 மாதங்களுக்கு முன் நாங்கள் பேசியபோது 'என்னைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். ஐபிஎல் தொடரின்போது நான் நிச்சயம் அங்கே இருப்பேன்' என்று உறுதியாக சொன்னார் பண்ட். அப்படி வந்தாலும் அவரால் அதிகபட்சம் பேட்டிங் செய்ய முடியும். எப்படியும் அவரை இம்பேக்ட் வீரராகவே பயன்படுத்தவேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால், அவர் ஒவ்வொரு போட்டியிலுமே விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டார். அதுமட்டுமல்லாமல் எங்கள் அணியின் டாப் ரன் ஸ்கோரர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். அதுமட்டுமல்லாமல் டி20 உலகக் கோப்பையில் நம்பர் 3 பொசிஷனில் விளையாடியவர், இந்திய அணியோடு கோப்பையும் வென்றார். இப்போது டெஸ்ட் ஸ்குவாடிலும் இடம்பெற்றிருக்கிறார்" என்று ரிஷப் பண்ட்டின் கம்பேக் பற்றி கூறினார் பான்டிங். 2024 ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடிய பண்ட், 446 ரன்கள் குவித்து அந்த அணியின் டாப் ஸ்கோரராகத் திகழ்ந்தார். 3 அரைசதங்கள் அடித்து விளாசிய அவர் 25 சிக்ஸர்கள் விளாசினார்.

பண்ட்ட்டின் கம்பேக் பற்றிப் பேசிய பான்டிங், அவருடைய ஆட்டத் திறன் பற்றியும் வெகுவாகப் பாராட்டினார். அவர் என்னதான் ஜாலியாக ஆளாக வெளியே தெரிந்தாலும், அவர் மிகவும் சீரியஸான கிரிக்கெட்டர் என்று குறிப்பிட்டார் பான்டிங். "நாம் எல்லோருமே அவர் ஆடுவதைப் பார்த்திருக்கிறோம். ஸ்டம்ப் மைக்கில் அவர் பேசுவதையும் கேட்டிருக்கிறோம். அவர் மிகவும் அருமையான கேரக்டர். உங்கள் குரூப்பில் அப்படியொரு ஆள் இருக்கவேண்டும் என்று தோன்றும். அவர் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கும் ஒருவர். ஒரு வின்னர். வெறும் ஒருசில ரன்கள் எடுப்பதற்கோ, ஜாலியாக இருப்பதற்கோ மட்டும் அவர் விளையாடுவதில்லை. ஏற்கெனவே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்கு அல்லது ஐந்து சதங்கள் அடித்துவிட்டார். அதுபோக 9 முறை தொன்னூறுகளைப் பதிவு செய்திருக்கிறார். சுமார் 120 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் மஹேந்திர சிங் தோனி கூட வெறும் மூன்றோ நான்கோ சதங்களோ தான் அடித்திருக்கிறார். ரிஷப் பண்ட் அவ்வளவு சிறப்பான ஒரு வீரர். அவர் ஒரு மிகவும் சீரியஸான கிரிக்கெட்டர்".

பான்டிங் கூறிய எண்களில் சில தவறுகள் இருக்கின்றன. தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் அடித்திருக்கிறார். பண்ட் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார். எண்களில் தவறுகள் இருந்தாலும், பான்டிங் சொல்லவந்த விஷயத்தில் தவறு இல்லை. அவர் நிச்சயம் டெஸ்ட் அரங்கில் மிகவும் சீரியஸான கிரிக்கெட்டர்.