Marcus Stoinis Vijay Verma
T20

PBKSvLSG | ராகுல் அடிக்காட்டி டீமே அடிக்குது... என்ன டிசைன் லக்னோ இது..?

ஐ.பி.எல் கப்பா? இல்லை ஆரஞ்சு கேப்பா? எனக் கேட்டால் ஆரஞ்சு கேப்தான் என உடனே கையை நீட்டும் ராகுலை என்ன செய்வதென்றே அவர்களுக்கு புரியவில்லை.

ப.சூரியராஜ்

கேப்டன் தவன் காயத்திலிருந்து குணமாகி மீண்டும் அணிக்கு திரும்பியதை கோலாகலமாக கொண்டாடினர் பஞ்சாப் ரசிகர்கள். லக்னோ ரசிகர்களோ `ஸ்டிரைக் ரேட் முக்கியம் இல்லை நண்பா' என பேட்டிங் ஆடும்போதெல்லாம் தூங்குகிறது அல்லது தூர் வாருகிற தங்களது கேப்டன் ராகுலை நினைத்து வெறியானார்கள். ஐ.பி.எல் கப்பா? இல்லை ஆரஞ்சு கேப்பா? எனக் கேட்டால் ஆரஞ்சு கேப்தான் என உடனே கையை நீட்டும் ராகுலை என்ன செய்வதென்றே அவர்களுக்கு புரியவில்லை. இப்படி ஒரு நிலைமையில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ள மொகாலி சென்றது சூப்பர் ஜெயன்ட்ஸ். டாஸ் வென்ற பஞ்சாப், பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது!

K L Rahul | Rabada

ராகுலும் மேயர்ஸும் ஓபனிங் இறங்க, முதல் ஓவரை வீசவந்தார் அறிமுக பவுலர் குர்னூர் ப்ரார். முதல் பந்தே, கேட்ச் டிராப். ராகுல் கொடுத்த வாய்ப்பை, பேக்வார்டு பாயின்ட்டில் நின்றுக்கொண்டிருந்த டெய்டே தவறவிட்டார். ராகுலின் கேட்சைப் பிடிக்கவில்லை என்பதால் லக்னோ ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். முதல் ஓவரில் 2 ரன்கள் மட்டுமே. 2வது ஓவரை வீசினார் சிறுவர் சிங். பவுண்டரியுடன் வரவேற்றார் மேயர்ஸ். அதே ஓவரில், இன்னும் மூன்று பவுண்டரிகளை விளாசினார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை! ப்ராரின் 3வது ஓவரில் ஒரு பவுண்டரியை விளாசிவிட்டு ராகுல் சிங்கிள் தட்ட, ஃப்ரீஹிட் பந்தில் ஒரு சிக்ஸரும், ஒரு பவுண்டரியும் வாரி வழங்கினார். ராகுல் மேல் உள்ள கோவத்தைதான் பஞ்சாப் மேல் காட்டுகிறார் மேயர்ஸ் என மைதானத்தில் பேசிக்கொண்டார்கள்.

4வது ஓவர் வீசவந்த ரபாடாவை, ஒரு சிக்ஸர் அடித்தார் ராகுல். லக்னோ ரசிகர்கள் குழப்பமானார்கள். அடுத்த பந்தே, ஷாரூக் கானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் கேப்டன் ராகுல். ராகுலைத் தவிர அத்தனை பேர் முகத்திலும் அவ்வளவு புன்னகை. `நான் களத்தில் இருந்திருந்தால் அணியின் ஸ்கோரை 175 அளவுக்கு உயர்த்தியிருப்பேன்' என புலம்பியபடியே நடந்துசென்றார். அடுத்து களமிறங்கிய பதோனி, அதே ஓவரில் ஒரு பவுண்டரி தட்டினார்.

Kyle Mayers

ரஸாவை அழைத்து 5வது ஓவரைக் கொடுத்தார் தவன். 2வது பந்து சிக்ஸருக்கு பறக்கவிட்டார் மேயர்ஸ். அதே ஓவரில் இன்னும் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் தூக்கி கடாசினார். ரபாடா வீசிய 6வது ஓவரில், நோ பாலில் ஒரு சிக்ஸர் அடித்து 20 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார் மேயர்ஸ். ஃப்ரீஹிட்டில் ஒரு பவுண்டரி. கொஞ்சம் தெளிவாக யோசித்த ரபாடா, 5வது பந்தை உடம்புக்குள் போட, தவனிடம் கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார் மேயர்ஸ். பஞ்சாப் ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். பவர்ப்ளேயின் முடிவில் 74/2 என வேற லெவலில் ஆடிக்கொண்டிருந்தது லக்னோ. அடுத்து களமிறங்கியிருந்த ஸ்டாய்னிஸிடம், `பொறுமையாக ஆடி அணியின் ஸ்கோரை 150-க்காவது கொண்டு வாருங்கள்' என மன்றாடினார் ராகுல். ஆனால், ஸ்டாய்னிஸ் காது கொடுக்கவே இல்லை.

ராகுல் சாஹர் எனப்படும் பாம்பு சாஹர் வீசிய 7வது ஓவரில் ஒரு பவுண்டரியுடன், 9 ரன்கள் கிடைத்தது. 8வது ஓவரை வீசவந்த ப்ராரை பவுண்டரியுடன் வரவேற்றார் பதோனி. அடுத்து ஒரு நோ பால். ஃப்ரீ ஹிட்டில் ஒரு சிக்ஸரும், அடுத்த பந்திலேயே ஒரு பவுண்டரியும் அடித்தார் ஸ்டாய்னிஸ். ஓவரின் கடைசிப்பந்தில் சிக்ஸரைப் பறக்கவிட்டார் பதோனி!

Ayush Badoni

9வது ஓவரை வீசிய சாஹர், 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். லக்னோ பேட்ஸ்மேன்களைப் பாராட்டி கே.எல்.ராகுல் கரகோசம் எழுப்பினார். பாம்பு மட்டும் வேறு பிட்சில் பவுலிங் போடுவது போல் இருந்தது. கரண் வீசிய 10வது ஓவரில், ஸ்டாய்னிஸ் இரண்டு பவுண்டரிகளும், பதோனி ஒரு சிக்ஸரும் விளாசினர். 10 ஓவர் முடிவில் 128/2 என மொகாலியில் சூறாவாளி அடித்தது. ராகுல் சுண்டால் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

Marcus Stoinis

11வது ஒவரை வீசினார் பாம்பு சாஹர். ஸ்டாய்னிஸ் ஒரு பவுண்டரி அடிக்க, 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது. சாம் கரணின் 12வது ஓவரில், ஸ்டாய்னிஸ் ஒரு சிக்ஸர் அடித்தார். சாஹரின் கடைசி ஓவரில், ஸ்டாய்னிஸ் ஒரு கேட்ச் கொடுத்தார். கேட்சையும் பிரமாதமாக பிடித்துவிட்ட லிவிங்ஸ்டோன் பவுண்டரி எல்லைக் கோட்டில் காலை வைத்துவிட்டார். லிவிங்ஸ்டோன் முகத்தில் உற்சாகமே இல்லை. 4-0-29-0 என சிறப்பாக தனது ஸ்பெல்லை முடித்தார் ராகுல் சாஹர்.

லிவிங்ஸ்டோனையே அழைத்து அடுத்த ஓவரை வீச சொன்னார் தவன். பதோனி ரிவர்ஸ் ஸ்வீப் ஆட திரும்பியதைப் பார்த்து, லிவிங்ஸ்டோன் பந்து வீசுவதை நிறுத்த, அடுத்து லிவிங்ஸ்டோன் பந்து வீச வர, பதோனி அவரை நிறுத்த, ஒரே கூத்தாக இருந்தது. கடைசியாக, பந்து வீசப்பட்டு அதில் சிக்ஸரும் அடித்து வெந்து தணிந்தார் பதோனி. அடுத்து பந்திலேயே, பதோனியின் விக்கெட்டை எடுத்து மீண்டும் சூடாக்கினார் லிவிங்ஸ்டோன். 24 பந்துகளில் 43 ரன்கள் எனும் அதிரடியான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. பஞ்சாப் ரசிகர்கள் சில நொடிகள் கூட மகிழ்ச்சி இல்லை, இறங்கியதும் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து இடியை இறக்கினார் பூரன்.

Nicolas Pooran

15வது ஓவரை வீசவந்தார் அர்ஷ்தீப். `ஸ்டெம்ப்பை எல்லாம் உடைக்க வேண்டாம். விக்கெட் மட்டும் எடுங்க போதும்' என பஞ்சாப் ரசிகர்கள் சிறுவர் சிங்கிடம் மன்றாடினார்கள். ஓவரில் ஒரு பவுண்டரிதான் பறந்தது. 15 ஓவர் முடிவில் 184/3 என மொகாலியில் புயல் அடித்தது. ராகுல் பொரி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

16வது ஓவரை வீசவந்தார் ரபாடா. முதல் பந்து பைஸில் ஒரு பவுண்டரி. 2வது பந்தில் சிங்கிளைத் தட்டி தனது அரைசதத்தை நிறைவு செய்த ஸ்டாய்னிஸ், அதே ஓவரில் ஒரு சிக்ஸரும் பறக்கவிட்டார். அர்ஷ்தீப்பின் 17வது ஓவரில், ஸ்டாய்னிஸ் ஒரு பவுண்டரியும், பூரன் இரண்டு பவுண்டரிகளும் விளாசினர். ரபாடாவின் 18வது ஓவரில், ஸ்டாய்னிஸ் ஒரு சிக்ஸரை விளாச, பூரன் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசினார்.

Nicholas Pooran

சாம் கரணின் 19வது ஓவரை பவுண்டரியுடன் தொடங்கினார் ஸ்டாய்னிஸ். அடுத்த பந்தே, கீப்பரிடம் சிம்பிளான கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஹூடா ஒரு பவுண்டரி அடித்தார். திடீரென ஆர்.சி.பி ரசிகர்கள் மேட்சை எட்டிப்பார்த்து அழுதுகொண்டிருந்தார்கள். விசாரிக்கையில், ஐ.பி.எல்லின் அதிகபட்ச ஸ்கோரான 263 எனும் அருமை, பெருமைக்கு ஆப்பு வைத்துவிடுவார்களோ எனும் பயம் என புரிந்தது. அர்ஷ்தீப் கடைசி ஓவரை வீச, ஹூடா மீண்டும் ஒரு பவுண்டரி அடித்தார். அதே ஓவரில், பூரனின் விக்கெட்டை கழட்டினார் அர்ஷ்தீப். மேல் முறையீட்டிற்கு சென்று எல்.பி.டபிள்யு வாங்கினார் தவன். அடுத்து களமிறங்கிய க்ருணாலும் ஒரு பவுண்டரி அடிக்க, 257/5 என படுபயங்கரமான இலக்கை நிர்ணயித்தது லக்னோ அணி.

ஒன்பது பேட்ஸ்மேன்களும் உச்சம் பெற்றால், இந்த இலக்கை எட்டலாம். 258 எனும் இமாலய இலக்கை அடைய களமிறங்கியது ப்ரப்சிம்ரன், தவன் ஜோடி. மார்கஸ் ஸ்டாய்னிஸ் முதல் ஓவரை வீசினார். ஓவரின் 5வது பந்திலேயே தவன் அவுட். தவனை அப்பர் கட் ஆட வைத்து, டீப் பாயின்ட்டில் கேட்ச் எடுத்தார் கேப்டன் ராகுல். மேயர்ஸ் இரண்டாவது ஓவரை வீசவந்தார். ப்ரப்சிம்ரன் ஒரு பவுண்டரி அடித்தார். ஸ்டாய்னிஸ் 3வது ஓவரை, சிக்ஸருடன் தொடங்கினார் டெய்டே. அதே ஓவரில் இன்னும் 2 பவுண்டரிகளையும் விளாசினார். நவீன் உல் ஹக்கின் 4வது ஓவரில், ப்ரப்சிம்ரன் அவுட்!

Prabhsimran Singh

ஆவேஷின் 5வது ஓவரில், மூன்று பவுண்டரிகளை விளாசினார் டெய்டே. நவீனின் 6வது ஓவரில், 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது. பவர்ப்ளேயின் முடிவில் 55/2 என ரன் ரேட்டுக்காக ஆடிக்கொண்டிருந்தது பஞ்சாப்.

மேயர்ஸுக்கு பதிலாக அமித் மிஷ்ராவை இம்பாக்ட் வீரராக களமிறக்கினார் ராகுல். வந்த முதல் ஓவரே, ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி கொடுத்தார் அமித். 8வது ஓவரில் ஒரு பவுண்டரியுடன், 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார் பிஷ்னோய். 9வது ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் கொடுத்தார் மிஸ்ரா. யாஷ் தாகூரின் 10வது ஓவரில், 26 பந்துகளில் அரைசதம் அடித்தார் டெய்டே. அந்த ஓவரிலும் ஒரே ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 10 ஒவர் முடிவில் 93/2 என ஆடிக்கொண்டிருந்தது பஞ்சாப். இன்னும் 60 பந்துகளில் 165 ரன்கள் எடுக்க வேண்டும்!

Atharva Taide

பிஷ்னோயின் 11வது ஓவரில், ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் விளாசினார் ரஸா. தாகூரின் 12வது ஓவரில், அவரும் காலி! 22 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதே ஓவரில், டெய்டே அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விளாசினார். பிஷ்னோயின் 13வது ஓவரில், லிவிங்ஸ்டோன் ஒரு பவுண்டரி அடித்தார். பிஷ்னோய், டெய்டேவின் விக்கெட்டை சாய்த்தார். பந்து வீசிய பிஷ்னோயே கேட்சையும் பிடித்து டெய்டேவுக்கு டாட்டா காட்டினார்.

14வது ஓவரை வீசவந்தார் க்ருணால். லிவிங்ஸ்டோன் ஒரு பவுண்டரியும், சாம் கரண் ஒரு சிக்ஸரும் அடித்தனர். ஆவேஷ் கானின் 15வது ஓவரில் லிவிங்ஸ்டோன் ஒரு சிக்ஸ் அடித்தார். 15 ஓவர் முடிவில் 152/4 என ரன் ரேட்டை எப்படியாவது குறைத்துவிட வேண்டுமென போராடிக்கொண்டிருந்தது பஞ்சாப். இன்னும் 30 பந்துகளில் 106 ரன்கள் தேவை.

16வது ஓவரை வீசிய பிஷ்னோய், லிவிங்ஸ்டோன் விக்கெட்டை கழட்டினார். மேல்முறையீட்டுக்கு சென்றும் தீர்ப்பு பாதகமாக அமைய, பெவிலியனுக்கு திரும்பினார் லிவிங். ஜித்து ஜில்லாடி சர்மா களமிறங்கினார். இறங்கிய முதல் பந்தே சிக்ஸர்! அதே ஓவரில், சாம் கரணும் ஒரு பவுண்டரி விளாசினார். 17வது ஓவரை வீசிய நவீன் சாம் கரணின் விக்கெட்டைக் கழட்டினார். யாஷ் தாகூரின் 18வது ஓவரில், அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்ட ஜித்தேஷ், ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஓவரின் கடைசிப்பந்தில், பாம்பும் காலி. நவீன் வீசிய 19வது ஓவரில் ரபாடா அவுட். 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் மட்டுமே கொடுத்து, 3 விக்கெட்களை தூக்கியிருந்தார் நவீன் உல் ஹக்! கடைசி ஓவரில் ஷாரூக் கானும அவுட்டாக 201 ரன்னுக்கு ஆல் அவுட்டானது பஞ்சாப் கிங்ஸ். 56 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை அடைந்தது லக்னோ அணி. பேட்டிங்கில் 72 ரன்கள், பவுலிங்கில் 1 விக்கெட்டையும் சாய்த்த ஸ்டாய்னிஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

எந்தப் போட்டியில் எல்லாம் கேப்டன் ராகுல் அதிக பந்துகளை சாப்பிடவில்லையோ, அந்தப் போட்டிகளில் எல்லாம் லக்னோ அணி அதிக ரன்களை குவித்திருக்கிறது. இனியாவது ராகுல் விழித்துக்கொள்வாரா..!