ஐ.பி.எல் 2023 தொடரின் இரண்டாவது போட்டியாக பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மொகாலியில் `டங்'கென மோதிக்கொண்டன. கடந்த சீசனில் பஞ்சாப் அணியானது மயங்க் அகர்வால் கேப்டன்ஸியில் மயங்கி விழுந்ததால், ஷிகர் தவனை புது கேப்டனாக அறிவித்தது பஞ்சாப் நிர்வாகம். இந்த சீசனில் ரமேஷ் அப்பாவையும் சுரேஷ் அப்பாவையும் தவிர எக்கசக்க வீரர்கள் காயம்பட்டு ஓய்வில் கிடக்கிறார்கள். அதில் கொல்கத்தாவின் கேப்டன் ஸ்ரேயஸும் ஒருவர் என்பதால், நிதீஷ் ராணாவை புது கேப்டனாக அறிவித்தது கொல்கத்தா நிர்வாகம். இரண்டு புதிய கேப்டன்களும் புத்துணர்வோடு வந்து டாஸ் போட, கொல்கத்தா அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. தன் அணியில் ஆடவிருக்கும் நான்கு வெளிநாட்டு வீரர்களின் பெயரை மனப்பாடம் செய்துகொண்டு தவன், அம்பயரிடம் ஒப்பிக்கும்போது நான்காவது பெயரை மறந்துப்போனார். ஆக, பஞ்சாப் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான பலபரீட்சையில், பஞ்சாப் முதல் மதிப்பெண்ணை இழந்துவிட்டது.
கொல்கத்தா அணியில் ஆப்கானிஸ்தானின் குர்பாஸ், நமிபியாவின் டேவிட் வீஸ், பஞ்சாப் அணியில் ஜிம்பாப்வேயின் ரஸா ஆகியோர் அணியில் இடம்பிடித்திருந்தது அந்தந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் கண்களில் கண்ணீரை சுரந்திருக்கும். அதேநேரம், மொகாலியின் மேகங்களும் எந்நேரத்திலும் அழதுவிடலாம் எனும் நிலையிலேயே அமைதியாக ஊர்ந்துகொண்டிருந்தது. ப்ரப்சிம்ரனும் தவனும் பஞ்சாப்பின் இன்னிங்ஸை துவக்கி வைக்க, முதல் ஒவரை வீசவந்தார் உமேஷ். ஓவரின் நான்காவது பந்தை, டீப் பேக்வார்ட் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ப்ரப்சிம்ரன்.
அடுத்த ஓவரை வீசவந்தார் சௌத்தி. முதல் இரண்டு பந்துகளையும் டீப் ஃபைன் லெக் திசை, மிட் ஆஃப் திசை என பவுண்டரிக்கு பறக்கவிட்டார் ப்ரப்சிம்ரன். ஐந்தாவது பந்து மீண்டும் சிக்ஸருக்கு பறந்தது. பஞ்சாப் அணிக்கு பலே துவக்கத்தைக் கொடுத்த ப்ரப்சிம்ரன், அடுத்த பந்திலேயே கீப்பர் குர்பாஸிடம் கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார். `என்ன சிம்ரன் இதெல்லாம்' என பஞ்சாப் ரசிகர்கள் சோர்வானார்கள்.
உமேஷ் வீசிய மூன்றாவது ஓவரில்தான் முதன்முறையாக தவனுக்கு ஸ்ட்ரைக்கே கிடைத்தது. ஆசைதீர நான்கு பந்துகளையும் பாகூறு குண்டுவைப் போல் தின்று செரித்தவர், ஒரே ஒரு சிங்கிளை மட்டும் தட்டினார். இதற்கு சேர்த்துவைத்து, சௌத்தி வைத்த நான்காவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் கேப்டன் தவன்.
நான்காவது ஓவரை வீசவந்தார் பழம்பெரும் பவுலர் நரைன். பேட்ஸ்மேன் பானுகாவிடம் ஏனோ நரைனின் விரல் வித்தைகள் வேலை செய்யவில்லை. மூன்று மட்டும் நான்காவது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பானுகா, கடைசி பந்தை தலுக்கா சிக்ஸருக்கு தூக்கினார். பவர்ப்ளேயின் கடைசி ஓவரை வீசிய சக்கரவர்த்தி, ஒரே பவுண்டரியுடன் சேர்த்து ஆறு ரன்கள் மட்டுமே கொடுத்து ஓவரை முடித்தார். பவர்ப்ளேயின் முடிவில், 56/1 என சிறப்பான அஸ்திவாரத்தைப் போட்டது பஞ்சாப்.
ஏலத்தில் புதிதாக வாங்கிப்போட்ட ஷ்ரதுலை பந்துபோட அழைத்தார் ராணா. `ஹலோ ராணா, இந்த சீன்லாம் இங்கே வேணாம்' என அந்த ஓவரிலும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் பானுகா. நரைன் வீசிய 8வது ஓவரில், வருண் சக்கரவர்த்தி எசகுபிசகாய் டைவ் அடித்து பந்தை கோட்டை விட்டதில் அது எல்லை கோட்டைத் தாண்டியது. பானுகாவின் பெயரில் மற்றுமொரு பவுண்டரி.
மீண்டும் கிளம்பிவந்த தாகூருக்கு, மீண்டும் ஒரு பவுண்டரியை பரிசளித்தார் பானுகா. ஓவரின் நான்காவது பந்தை தவனின் கழுத்துக்கு குறிவைத்து எறிய, அதை எப்படியோ பவுண்டரிக்கு கடாசினார் தவன். அதற்கு ஃப்ரீ ஹிட் கிடைத்தும், அதை பவுண்டரியாக மாற்ற முடியவில்லை. 10வது ஓவர் வீசவந்த வருணிடம் ஒரு பவுண்டரியை பரிசளித்த பாசமாக வரவேற்றார் தவன். பத்து ஓவர் முடிவில், 100/1 என தவன் ஸ்டைலில் தொடையைத் தட்டியது பஞ்சாப் அணி.
உமேஷ் வீசிய 11வது ஒவரின் முதல் பந்தில் பேக்வார்டு திசையில் பவுண்டரிக்கு விளாசினார் பானுகா. அதே ஓவரின் நான்காவது பந்தில் இரண்டு ரன்கள் ஓடி, தனது அரைசதத்தை எட்டிப்பிடித்தார் . பஞ்சாப் ரசிகர்கள் சந்தோஷத்தில் சிரித்து வாயை மூடுவதற்குள், ஓவரின் கடைசி பந்தை கொடியேற்றினார் பானுகா. பந்தானது மேலே ஓசோன் மண்டலத்தை தொட்டுவிட்டு ரிங்கு சிங்கின் கைகளுக்குள் வந்து விழுந்தது. அற்புதமான இன்னிங்ஸும் முடிவுக்கு வந்தது.
அடுத்து, ஜித்தேஷ் சர்மா களமிறங்கினார். நரைன் வீசிய 12 ஓவரின் கடைசிப்பந்தில் 97 மீட்டருக்கு ஒரு சிக்ஸரை நொறுக்கினார் ஜித்தேஷ். 13 ஓவரில், உமேஷ் வீசிய பந்தை பேக்வேர்ட் ஸ்கொயர் லெக் திசையில் பவுண்டரிக்கும் விரட்டினார். சௌத்தியும் தன் பங்கு வந்து, 14வது ஓவரில் ஒரு சிக்ஸரை வாரி வழங்கினார். `ஜித்தேஷ் ஒரு ஜித்து ஜில்லாடி' என பஞ்சாப் ரசிகர்கள் மீண்டும் குதூகலமானார்கள். மீண்டும் அவர்கள் சிரித்து வாயை மூடுவதற்குள், உமேஷிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார் ஜித்தேஷ். அடுத்து, சிக்கந்தர் ரஸா களமிறங்கினார். வந்ததும் வராததுமாக, முதல் பந்திலேயே ஒரு பவுண்டரி.
15வது ஓவரை வீசிய வருண், தவனின் விக்கெட்டை வீழ்த்தினார். இதுவரை ஐ.பி.எல் தொடர்களில் 47 அரைசதங்களை அடித்திருக்கும் தவன், கேப்டனாக ஒரு அரைசதம் கூட அடித்ததில்லை. இப்போதும் அப்படியே 40 ரன்களில் வீழ்ந்தார். 15வது ஓவரின் முடிவில், 143/4 என பஞ்சாப் திடகாத்திரமாகவே நின்றது. களத்தில் இப்போது 18.50 கோடி பெருமான சுட்டிக்குழந்தை சாம் கரணும் இருந்தார்.
ஷ்ரதுல் வீசிய 16வது ஓவரில், ரஸா ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். 17வது ஓவரில் ஒரு சிக்ஸருடன் சேர்த்து 11 ரன்கள் கொடுத்தபோதிலும், மொத்தம் நான்கு ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார் வருண் சக்கரவர்த்தி. அதில் தவனின் விக்கெட்டும் அடக்கம். 18வது ஓவரை வீசிய நரைன், 4 ரன்கள் மட்டுமே கொடுத்து ரஸாவின் விக்கெட்டையும் கழற்றினார். `என்னடா இது லேசா தொண்டையைக் கவ்வுது' என பஞ்சாப் ரசிகர்கள் பரிதாப நிலைக்குச் சென்றார்கள். ஷாரூக்கான் உள்ளே வந்தார். ஷ்ரதூல் வீசிய 19வது ஓவரில் ஒரு பவுண்டரியையும் மின்னல் வேகத்தில் சொடுக்கிவிட்டார். இன்னிங்ஸின் கடைசி ஓவரை வீசவந்த சௌத்திக்கு, ஷாரூக்கான் ஒரு பவுண்டரியும், சாம் கரண் ஒரு சிக்ஸரும் அடித்து ஆறுதல் பரிசு கூட கிடைக்காமல் செய்தார்கள். 20 ஓவரின் முடிவில் 191/5 என சிறப்பான இலக்கை நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
ஐம்பது அடித்து அலுப்பாக இருந்த, இலங்கை நாட்டின் பானுகாவை பெவிலியனில் அமரவைத்துவிட்டு, ரிஷி தவனை இம்பாக்ட் வீரராக உள்ளே அழைத்தார் ஷிகர் தவன். ரஹ்மானுல்லாஹ் குர்பாஸும் மந்தீப் சிங்கும் துவக்க வீரர்களாக களமிறங்க, சாம் கரண் துறுதுறுவென ஓடிவந்து முதல் ஒவரை வீசினார். முதல் நான்கு பந்துகளுக்கு மரியாதை கொடுத்து ஆடிய கொல்கத்தா அணி, கடைசி இரண்டு பந்தில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என அடித்து ஓடவிட்டது. ரஹ்மானுல்லாஹ் அடித்த 101 மீட்டர் சிக்ஸரைப் பார்த்து மீட்பர் வந்துவிட்டாரென குஷியானாரகள் கொல்கத்தா ரசிகர்கள்.
இரண்டாவது ஓவரை வீசவந்தார் அர்ஷ்தீப் சிங். ஹர்பர்ஜன் சிங்கிற்கு ஒன்னுவிட்ட அக்கா பையன் போலிருக்கும் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் பந்திலேயே மந்தீப் சிங் மந்தமான ஒரு ஷாட்டை ஓடி அவுட்டாகினார். அடுத்து, அனுகுல் ராய் பேட்டைத் தூக்கிக்கொண்டு வந்தார். ஓவரின் மூன்றாவது பந்தை மிட் ஆன் திசையில் பவுண்டரிக்கு தூக்கி கடாசினார். அவ்வளவுதான்! ஓவரின் கடைசி பந்தில் அனுகுலின் விக்கெட்டையும் தூக்கி, `உங்களுக்கு அனுகூலமான திசை வடக்கு பக்கம்' என காட்டி பெவிலியனுக்கு அனுப்பிவைத்தார் அர்ஷ்தீப். பஞ்சாப் ரசிகர்கள் லஸ்ஸியைக் கிண்டத் துவங்கினார்கள்.
`ஹூஹும். இது சரிபட்டு வராது' என வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக வெங்கடேஷ் ஐயரை இம்பேக்ட் ப்ளேயராக களமிறக்கியது கொல்கத்தா. 3வது ஒவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் குர்பாஸ். கரண் கலங்கிப்போனார். அடுத்த ஓவரிலேயே, இன்னொரு பவுன்டரி. அர்ஷ்தீப் அரண்டுபோனார்.
எல்லீஸை இறக்கினார் தவன். 5வது ஓவரின் இரண்டாவது பந்து, ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்டார் எல்லீஸ். `குர்பாஸ், என்ன பாஸ்? அட போங்க பாஸ்!' என கொல்கத்தாவினர் கவலையடைந்தார்கள். கேப்டன் ராணா உள்ளே வந்தார். லாங் லெக் திசையில் ஒரு பவுண்டரியை அடித்துவிட்டு அமைதியாக நின்றார். ரஸா வீசிய பவர்ப்ளேயின் கடைசி ஓவரின், கடைசி இரண்டு பந்துகளை ஸ்கொயர் லெக் மற்றும் எக்ஸ்ட்ரா கவர் திசையில் பவுண்டரிக்கு விரட்டினார் வெங்கி.
எல்லீஸ் வீசிய 7வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ரஸா வீசிய 8வது ஓவரின் ஐந்தாவது பந்தை, ஷார்ட் தேர்டு திசையில் ஸ்விட்ச் ஹிட் ஆடி பவுண்டரிக்கு பறக்கவிட்டார் ராணா. அடுத்து இம்பாக்ட் வீரர் ரிஷி தவன் பந்துவீச வந்தார். ராணா பேட்டை சுழற்றியதில் முதல் பந்து பவுண்டரி, இரண்டாவது பந்து சிக்ஸர். ஐந்தாவது பந்து லாங் ஆன் திசையில் இன்னொரு பவுண்டரி. இம்பாக்ட் வீரர் என்றால் எதிரணிக்கு சாதகமாக ஆடுவது என தவறாக புரிந்துவிட்டார்கள் போலும்.
மீண்டும் 10வது ஓவரை வீசவந்தார் ரஸா. ஓவரின் இரண்டாவது பந்தை ராகுல் சாஹரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் கேப்டன் ராணா. ரிங்கு சிங் அடுத்து பிட்ச்க்கு வந்தார். அந்த ஓவரில் 1 விக்கெட்டையும் இழந்து ஐந்து ரன்களை மட்டுமே எடுத்தது கொல்கத்தா. பத்து ஓவர் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ். அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ரிங்குவுக்கு 4 ரன்கள் மட்டும் பங்கு பிரித்து பெவிலியனுக்கு அனுப்பிவைத்தார் ராகுல் சஹார். இத்தனை போராட்டங்களுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது என்பதுபோல, ரஸல் களமிறங்கியதும் கொல்கத்தா ரசிகர்களின் முகத்தில் புன்னகை பூத்தது. 12 ஓவரின் 3 பந்தை, பந்து வீசிய ஹர்ப்ரீத் ப்ராரின் தலைக்கு மேல் தடாரென ஒரு அடி அடித்தார் ரஸல். பந்து பவுண்டரிக்கு சென்று படுத்துக்கொன்டது.
ரஸல் வீடியோ கேம் மோடுக்கு போனால் மட்டுமே, இந்த கேம் நமது கையில் என காத்திருந்தார்கள் கொல்கத்தா நைட்ரைடர்ஸ். ராகுல் பாம்பு வீசிய 13வது ஓவரின் இரண்டாவது பந்து, ரஸல் அடித்த அடியில் ஆறு ரன்களை அள்ளிக்கொண்டு வந்தது. இப்போது எல்லீஸ் பந்து வீச வந்தார். 2வது பந்த மிட் ஆப் திசையில் பவுண்டரிக்கு விரட்டினார் ரஸல். 4வது பந்தை சிக்ஸருக்கு விளாசினார் வெங்கி. பேட்ஸ்மேனின் தலைக்கு மேல் பந்து தாவி வந்ததால் அம்பயர் அதற்கு `நோ பால்' வேறு கொடுக்க, ஃப்ரீ ஹிட் கிடைத்தது கொல்கத்தாவுக்கு. ஆனால், அதில் பவுண்டரிகள்தான் எதுவும் கிடைக்கவில்லை. கொல்கத்தா ரசிகர்கள் கண்ணீர் சிந்தினார்கள். மொஹாலியின் தூரல் விழுந்தது.
DLS விதிப்படி பத்து ரன்கள் பின் தங்கியிருந்தார்கள் கொல்கத்தா நைட்ரைடர்ஸ். பெய்து கொண்டிருந்த மழைக்கு மத்தியில் சாம் கரண் வீசிய 14வது ஓவரில், மின்னலும் இடியிலும் தரையிலிருந்து வானத்துக்குச் சென்றது. லாங் ஆனில் ஒரு சிக்ஸரும், ஷார்ட் தேர்டில் ஒரு பவுண்டரியும் இடித்தார் ரஸல். `நீ இடின்னா, நான் இடிதாங்கி' என அடுத்த பந்திலேயே ரஸலின் விக்கெட்டைத் தூக்கினார் சாம் கரண். `அவ்ளோதான் டிவியை ஆஃப் பண்ணுங்க' என கொல்கத்தா ரசிகர்கள் ரிமோட்டை தேடுகிற கேப்பில், ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு சாந்தப்படுத்தினார் ஷர்தூல் தாக்கூர்.
வெங்கியும், ஷர்தூலும் களத்தில் இருக்கிறார்கள். வெல்ல வாய்ப்புண்டு என சொல்லி முடிப்பதற்குள், வெங்கியின் விக்கெட்டைத் தூக்கினார் அர்ஷ்தீப். அடுத்து, நரைன் உள்ளே வந்தார். ஓவரின் கடைசி பந்தில் லாங் ஆன் திசையில் ஒரு சிக்ஸரை விளாசினார். `ஆட்டம் இன்னும் முடியல குழந்தை' என சிறுவன் சிங்கைப் பார்த்து கொல்கத்தா ரசிகர்கள் சிரிக்க, மழை சடசடவென கொட்டியது. டி.எல்.எஸ் முறைப்படி ஏழு ரன்கள் பின்தங்கி இருந்தது கொல்கத்தா. நரைனும் ஷர்தூலும் ஆளுக்கொரு சிக்ஸரை அடித்துவிட்டு களத்தில் நிற்கிறார்கள். ஜெயிப்பதற்கும் வாய்ப்புண்டு. `கருணை காட்டு வருணபகவானே' என கொல்கத்தா ரசிகர்கள் பலர் வேண்டத் துவங்கினார்கள். இறுதியில், DLS விதிப்படி ஏழு ரன்கள் வித்தியாசத்தின் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக அறிவித்து கொல்கத்தா ரசிகர்கள் நெஞ்சில் இடியை இறக்கினார்கள் நடுவர்கள்.