டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதற்காக முன்னதாகவே தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வுசெய்யும் பணியில் களமிறங்கிய பிசிசிஐ, இந்திய அணியின் முன்னாள் வீரரும் கொல்கத்தா அணியின் ஆலோசகருமாக இருந்த கவுதம் கம்பீரைத் தேர்வு செய்திருந்தது. ஆனாலும், அவர் டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் கம்பீர் பதவியேற்கவில்லை.
கம்பீர் இலங்கைத் தொடரின்போது பயிற்சியாளராகச் செல்ல விருப்பம் தெரிவித்திருந்ததையடுத்து, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடருக்கு இடைக்கால பயிற்சியாளராக மற்றொரு மூத்த வீரர் வி.வி.எஸ்.லட்சுமணன் நியமிக்கப்பட்டார். அவரது அணியும் வெற்றிவாகை சூடி வந்தது. இதற்கிடையே இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக முறைப்படி கம்பீர் பதவியேற்றார். தற்போது அவரது பயிற்சியின்கீழ், இந்திய அணி இலங்கைக்குச் சென்றுள்ளது. அங்கு தீவிர வலைப்பயிற்சியில் இந்திய அணி ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், கம்பீருக்கு தலைமைப் பயிற்சியாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதை பாகிஸ்தான் வீரரான தன்வீர் அகமது கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர், “இந்திய கிரிக்கெட் அணியில் தலைமைப் பயிற்சியாளராக லட்சுமணன்தான் பதவி ஏற்றிருக்க வேண்டும்.
ஏனென்றால், லட்சுமணன் இந்திய பி அணிக்கு பலமுறை பயிற்சியாளராக இருந்து தனது பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தேசிய கிரிக்கெட் அகாடமியில் லட்சுமணன் இருந்து அடுத்த பயிற்சியாளராக தன்னை மெருகேற்றிக் கொண்டிருந்தார். ஆனால் கம்பீர் தமக்கு இருக்கும் அரசியல் தொடர்புகளை வைத்து பயிற்சியாளராக வந்து அமர்ந்துவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.