2024 டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா அணிக்கு எதிராக சூப்பர் ஓவர் வரை சென்று படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி, இந்தியாவுடன் கையிலிருந்து போட்டியை கோட்டைவிட்டு தொடரிலிருந்தே வெளியேறியது. பந்துவீச்சில் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தினாலும், பேட்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தான் அணி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டுவருகிறது.
பாகிஸ்தான் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், ஷாகித் அஃப்ரிடி, கம்ரான் அக்மல் முதலிய வீரர்கள் 2024 டி20 உலகக்கோப்பையில் பாபர் அசாமின் கேப்டன்சி மோசமாக இருந்ததை ஒப்புக்கொண்டனர். அதேநேரம், அணிக்குள் ஒற்றுமை இல்லை என்றும், அணியில் மூன்று குழுக்கள் பிரிந்து இருப்பதாகவும், அதனால் அணித்தேர்வில் மாற்றங்கள் தேவையென்றும், புதிய அணியை உருவாக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டன.
போதாக்குறைக்கு அந்த அணியின் பயிற்சியாளரான கேரி கிர்ஸ்டன், பாகிஸ்தான் ஒரு அணியே இல்லை என விமர்சித்திருப்பது பேசுபொருளாக இருந்துவருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராஃப் ரசிகர் ஒருவருடன் பொதுவெளியில் சண்டைக்கு செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2024 டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிவரை செல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, லீக் சுற்றோடு வெளியேறி இருக்கும் நிலையில், அந்த அணியின் ”பாபர் அசாம், இமான் வாசிம், அசாம் கான், சதாப் கான் மற்றும் ஹரிஸ் ராஃப்” முதலிய 5 வீரர்கள் நாடு திரும்பாமல் அமெரிக்காவிலேயே தங்கும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியானது.
நாட்டிற்கு சென்றால் கடுமையான விமர்சனங்களை சந்திக்கநேரிடும் என்பதால் அமெரிக்காவிலேயே தங்கிவிட்டார்கள் என குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில், அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரில் ரசிகர் ஒருவருடன் பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராஃப் சண்டையிடும் வீடியோ வெளியாகியுள்ளது.
வைரலாகி வரும் வீடியோவில், ஹரிஸ் ராஃப் தன் மனைவியுடன் ஃப்ளோரிடா நகரை சுற்றிப்பார்க்கும் போது ரசிகர் ஒருவர் அவரை விமர்சிக்கும் வகையில் ஏதோ பேசியுள்ளார். அப்போது தன்னுடைய பொறுமையை இழந்த ஹரிஸ் ராஃப், “அவர் இந்தியராக தான் இருப்பார்” என்று தன் மனைவியிடம் கூற, பதிலுக்கு அந்த ரசிகர் “இல்லை நான் பாகிஸ்தான் தான்” என்று நக்கலாக கூறியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த ஹரிஸ் ராஃப் தடுக்கமுயன்ற மனைவியின் கையை தட்டிவிட்டு, அந்த ரசிகரை அடிக்க ஓடினார். பின்னர் சுற்றியிருந்த மக்கள் அனைவரும் சேர்ந்து ஹரிஸ் ராஃபை தடுத்து நிறுத்தி எந்த விபரீதமும் நடக்காமல் பார்த்துக்கொண்டனர்.
இதனை பார்த்த ரசிகர்கள், “வீரர்கள் பொதுவெளியில் குடும்பத்துடன் இருக்கும் போது, ரசிகர்கள் அநாகரீகமாக நடந்துகொள்ள கூடாது” என்றும், |
“பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களுடன் இணக்கமாக இருந்தாலும் ஒரு மூன்றாவது நபர் ட்ரோல் செய்யும் போது உடனே இந்தியர் தான் என நினைப்பதை எப்படி எடுத்துக்கொள்வது என தெரியவில்லை” என்றும் விமர்சித்து வருகின்றனர்.