நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணி, தொடரிலிருந்து வெளியேறியது. இதனால், அவ்வணி மீது நிறைய விமர்சனம் கிளம்பியுள்ளது. குறிப்பாக, அவ்வணியின் பயிற்சியாளரான கேரி கிறிஸ்டனே அணியை கடுமையாக சாடியிருந்தது கிரிக்கெட் உலகில் பேசுபொருளானது. இதையடுத்து, டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படாத வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முனைப்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்ளது.
இதனால், கேப்டன் பாபர் அசாம், இமான் வாசிம், அசாம் கான், சதாப் கான் மற்றும் ஹரிஷ் ரவுப் ஆகிய ஐந்து வீரர்கள் மட்டும் பாகிஸ்தானுக்கு செல்லாமல் லண்டன் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஏதேனும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பார்களோ என்ற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
உலகக்கோப்பையில் பங்கேற்றிருந்த பாகிஸ்தான் அணியின் பெரும்பாலான போட்டிகள் அமெரிக்காவிலேயே நடைபெற்றது. இந்தப் போட்டியைக் காண்பதற்கு அந்த அணி வீரர்களுடன் அவர்களுடைய மனைவி, குழ்ந்தைகள் தவிர இதர உறவினர்களும் அழைத்துச் செல்லப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. பாகிஸ்தான் அணியில் 15 வீரர்கள், கூடுதலாக 4 ரிசர்வ் வீரர்கள், அணி பயிற்சியாளர், மருத்துவர் என மொத்தமே 34 பேர்கள்தான் இருக்கிறார்கள். இதில் ஓர் அறைக்கு இரண்டு பேர் என்றாலே மொத்தமாகவே 17 ரூம்கள்தான் தேவைப்படும். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சார்பாக ஒவ்வொரு ஹோட்டலிலும் 60 ரூம்கள் புக் செய்யப்பட்டு இருந்ததுதான் தற்போது சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது.
இது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்த விசாரணையில், தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு களமிறங்கியுள்ளது. அதன்படி, ’வீரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சுற்றுலா அழைத்துச் செல்ல அனுமதி வழங்கியதன் பின்னணியில் வாரியத்தில் உள்ள சில மூத்த அதிகாரிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் வழங்கிய இந்தச் சலுகைதான் பாகிஸ்தான் தோல்விக்கு வழிவகுத்திருப்பாக பாகிஸ்தான் வட்டாரம் கண்டுபிடித்துள்ளது. மேலும், தலைவர் மொஹ்சின் நக்வி சில மூத்த அதிகாரிகளின் செயல்பாடுகளால் கோபமடைந்துள்ளதாகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் நிலவும் ஒழுக்கமின்மைக்கு அவர்களே பொறுப்பு என்றும் உறுதி செய்துள்ளது.
இதையும் படிக்க: FactCheck|முகமது ஷமி - சானியா மிர்சா திருமணம்? வைரலாகும் புகைப்படங்கள்.. உண்மை என்ன?
முன்னதாக, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வைத்து எம்.பிக்கள் கிண்டல் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.
பாகிஸ்தான் எம்பி அப்துல் காதர் படேல், “நமது பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு என்னவானது? அமெரிக்காவிடம் தோல்வியடைகிறோம். இந்திய அணியிடம் தோல்வியடைகிறோம். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், அவரின் சீனியர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றவர், பாபர் அசாமை முன்னாள் கேப்டன் இம்ரான் கானுடன் ஒப்பிட்டுப் பேசி, சில பேப்பர்களையும் கிழித்து வீசியிருந்தார்.