shan masood notout web
T20

இப்படி ஒரு விதியா? ’ஹிட் விக்கெட் + ரன்அவுட்’ 2 முறை அவுட்டாகியும் NOTOUT கொடுக்கப்பட்ட பேட்ஸ்மேன்!

Rishan Vengai

என்ன நடந்தது?

பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத் வைட்டாலிட்டி பிளாஸ்ட் லீக் போட்டியில் யார்க்ஷயர் அணிக்கு விளையாடும் போது, ஒரே பந்தில் ஹிட் விக்கெட் மற்றும் ரன் அவுட் இரண்டிலும் சிக்கிக்கொண்டார். ஆனால் MCC கிரிக்கெட் விதிப்புத்தகத்தில் உள்ள ஒரு சுவாரஸ்யமான விதிமுறையின் காரணமாக, அவர் ஹிட் விக்கெட் மற்றும் ரன் அவுட் இரண்டிலிருந்தும் தப்பித்து நாட் அவுட் வழங்கப்பட்டார். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

லங்காஷயர் மற்றும் யார்க்ஷயர் அணிகளுக்கு இடையேயான வைட்டலிட்டி பிளாஸ்ட் லீக் போட்டியின் போது, யார்க்ஷயர் பேட்ஸ்மேனான ஷான் மசூத் 15வது ஓவரின் போது ஸ்கூப் ஷாட் அடிக்க முயன்ற போது தன்னுடைய விக்கெட்டுகளை பறிகொடுத்தார். அதாவது இரண்டுமுறை தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.

பந்தை அடிக்க முயன்றபோது அவருடைய கால் ஸ்டம்பின் மீது பட்டு ஹிட் விக்கெட் ஆனது, உடன் எதிர்முனையில் இருந்த வீரர் ஜோ ரூட் ரன்னுக்கு வந்ததால் பந்தை பார்த்துக்கொண்டிருந்த ஷான் மசூத் ரன்னை ஓடிமுடிப்பதற்குள் ரன் அவுட்டும் செய்யப்பட்டார். ஆனால் MCC-ன் 31.7 கிரிக்கெட் விதிமுறையின் படி இரண்டு காரணங்களுக்காக ஷான் மசூத் நாட் அவுட் கொடுக்கப்பட்டார்.

எதனால் நாட் அவுட் கொடுக்கப்பட்டார்? அது என்ன விதிமுறை 31.7?

இரண்டு காரணங்களுக்காக நடுவர் ஷான் மசூத் ஆட்டமிழக்கவில்லை என்று தீர்ப்பளித்தார்.

முதலில் பந்து வீச்சாளர் அந்த பந்தை நோபாலாக வீசியதால் ஹிட் விக்கெட் நாட் அவுட்டாக கொடுக்கப்பட்டது. நோபாலில் ஹிட் விக்கெட் அவுட் இல்லை என்றாலும் ரன் அவுட் வழங்கப்பட வேண்டும் என பவுலிங் சைடு கூறினாலும், கிரிக்கெட் விதிமுறை 31.7-ன் படி அவருக்கு நாட் அவுட் வழங்கப்பட்டது.

ரன் அவுட் ஏன் வழங்கப்படவில்லை என்றால், முதலில் பேட்ஸ்மேன் ஹிட் விக்கெட் ஆனதால் அவர் தன்னை அவுட் என நினைத்துக்கொண்டு வெளியேறும் எண்ணத்தில் இருந்தார். பின்னர் அவர் ஒரு ரன்னை எடுக்கும் எண்ணத்தில் இல்லை என்பதை அம்பயர் நம்பியதால் அவருக்கு 31.7 விதிமுறையின் படி நாட் அவுட் வழங்கப்பட்டது.

MCC 31.7 விதிமுறை என்ன சொல்கிறது?

MCC 31.7 விதிமுறையின் படி, அம்பயரால் அவுட் கொடுக்கப்படாத ஒரு பேட்டர், தான் அவுட் ஆகிவிட்டதாக நம்பி தவறாக விக்கெட்டை விட்டு வெளியேறியதாக நடுவர் நம்பினால், அதில் நடுவர் தலையிட்டு அந்த பந்தை "டெட் பால்" ஆக அறிவிக்க முடியும்.

நோ-பால், ஹிட் விக்கெட் மற்றும் ரன் அவுட் என மூன்று சம்பவம் ஒரே சமயத்தில் நடந்த இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.