2024 ஆடவர் வளர்ந்துவரும் வீரர்களுக்கான டி20 ஆசியக்கோப்பை தொடரானது, 18-ம் தேதி தொடங்கி அக்டோபர் 27-ம் தேதிவரை மொத்தம் 10 நாட்கள் நடைபெற்றுவருகிறது.
இதுவரை 50 ஓவர்கள் கொண்ட தொடராகவே நடத்தப்பட்ட நிலையில், நடப்பாண்டுக்கான வளர்ந்துவரும் வீரர்களுக்கான ஆசியக்கோப்பை தொடரானது டி20 போட்டிகள் கொண்ட தொடராக முதல்முறையாக நடத்தப்பட்டுள்ளது.
இந்த தொடரில் 8 ஆசிய அணிகளான “இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, இலங்கை ஏ, வங்கதேசம் ஏ, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங் மற்றும் ஆப்கானிஸ்தான்” முதலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கும் பிரிவில், குரூப் ஏ-ல் “ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் மற்றும் இலங்கை” அணிகளும், குரூப் பி-ல் “இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ மற்றும் ஓமன்” முதலிய அணிகளும் இடம்பெற்றன.
ஒவ்வொரு பிரிவில் இருக்கும் 4 அணிகளில் ஒவ்வொரு அணி, மற்ற அணிகளை எதிர்கொண்டு மூன்று குரூப் போட்டிகளில் மோதும். இதில் பட்டியலில் முதலிரண்டு இடம் பிடிக்கும் நான்கு அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்து இறுதிப்போட்டியில் பங்கேற்பார்கள்.
இந்நிலையில் பரபரப்பாக நடந்துவந்த தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் போட்டிப்போட்ட நிலையில், ”இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ” முதலிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.
இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் இலங்கை ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஓமனில் ஆல் அமெரெட்டில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வுசெய்தது.
ஆனால் எதற்கு பேட்டிங் தேர்வுசெய்தோம் என வருத்தப்படும் வகையில், தொடக்க வீரர் ஒமைர் யூசுஃபை தவிர வேறு எந்தவீரரும் சோபிக்கவில்லை. 5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என விளாசிய ஒமைர் 46 பந்துகளில் 68 ரன்கள் அடித்து வெளியேற, பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை லெக் ஸ்பின்னர் துஷன் ஹேமந்தா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதற்குபிறகு 136 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இலங்கை அணி 16.3 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. அதிகபட்சமாக ஆஹன் விக்ரமசிங்கே 52 ரன்கள் அடித்தார்.
இரண்டாவது அரையிறுதிப்போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. திலக் வர்மா தலைமையிலான இந்திய ஏ அணி ஆப்கானிஸ்தான் ஏ அணியை எதிர்கொண்டு விளையாடவிருக்கிறது.