நடப்பு ஐபிஎல் தொடரை சி.எஸ்.கே. வெல்ல வாய்ப்பில்லை என்பது தெரிந்துபோன விஷயம். காரணம், அது பிளே அப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறிவிட்டது. அதேநேரத்தில், ‘சென்னை அணி இல்லன்னா என்ன, சிங்கமா தமிழர்கள் இருக்காங்க’ என ரசிகர்கள் குரல்கொடுத்து வருகிறார்கள். அவர்கள் சொல்வதிலும் தவறில்லை. ஏன்? பார்க்கலாம்...
பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூரு ஆகிய அணிகள் முன்னேறியிருக்கின்றன. அப்படிப் பார்க்கையில், இதில் ஏதோ ஓர் அணிதான் இந்த வருட கோப்பையைத் தட்டித் தூக்கப் போகிறது. அந்த வகையில், இதில் ஒரு சந்தோஷமான விஷயம் அடங்கியிருக்கிறது. அதிலும் தமிழக வீரர்களைப் பற்றிய ஒரு சுவையான விஷயம் உள்ளது. ஆம், இந்த 4 அணிகளிலுமே தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க: MI தோல்வி | ரோகித், ஹர்திக் உள்ளிட்ட வீரர்களுடன் ஆலோசனை.. உரிமையாளர் சொன்ன சீக்ரெட்!
புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணியில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியும், 2வது இடத்தில் இருக்கும் ஹைதராபாத்தில் அணியில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனும், 3வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வினும், சென்னையை வீழ்த்தி 4வது இடம்பிடித்த பெங்களூரு அணியில் தினேஷ் கார்த்திக்கும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த 4 தமிழர்களுக்கும் அந்தந்த அணிகளில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களைத் தவிர வெங்கடேஷ் ஐயர் என்ற தமிழக வீரர் கொல்கத்தா அணியிலும் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில், இந்த 4 அணிகளில் எந்த அணி கோப்பையை வென்றாலும் அதில் தமிழர் நிச்சயம் இருப்பார் என்ற கருத்து இணையத்தில் வைரலாகி வருவதுடன், தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஓர் ஆறுதல் செய்தியாக அமைந்திருக்கிறது.
இதையும் படிக்க: எக்ஸ் தளம் மீது கோபமா.. இன்ஸ்டாவை அதிகம் விரும்புவது ஏன்? தோனி சொன்ன ருசிகர பதில்!