ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய டி20 போட்டியில் ஒரு விநோதமான சம்பவம் அரங்கேறியிருக்கிறது. ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆகியும், வீரர்கள் அப்பீல் செய்யாததால் நடுவர்கள் அவுட் கொடுக்க மறுத்திருக்கிறார்கள்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை அடுத்து தற்போது டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரின் இரண்டாவது டி20 போட்டி அடிலெய்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய கிளென் மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 120 ரன்கள் விளாசினார். 12 ஃபோர்கள், 8 சிக்ஸர்கள் அடித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. அதனால் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இன்னிங்ஸின் 19வது ஓவரில் ஒரு ருசிகர சம்பவம் நடந்தது. ஸ்பென்சர் ஜான்சன் வீசிய அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்டார் அல்சாரி ஜோசஃப். அந்தப் பந்தை கவர் திசையில் அடித்துவிட்டு ஓடினார் அல்சாரி. அங்கு நின்றிருந்த மிட்செல் மார்ஷ் பந்தைப் பிடித்து பௌலரிடம் வீசினார். ஸ்டம்புகளைத் தகர்த்த ஸ்பென்சன் ஜான்சன், அடுத்த பந்தை வீசச் சென்றார். அப்போது பெரிதாக யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் சில நொடிகளில் மைதானத்தில் இருந்த திரையில் ரீப்ளே காட்டப்பட்டது. அந்த ரீப்ளேவில், ஸ்டம்புகள் தகர்க்கப்பட்டபோது அல்சாரி ஜோசஃப் கிரீஸை அடையவில்லை என்று தெரிந்தது. அதைப் பார்த்ததும் ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட்டை கொண்டாடத் தொடங்கினார்கள். ஆனால், நடுவர் ஜெரார்ட் அபூட் அது அவுட் இல்லை என்று கூறிவிட்டார். ஆஸ்திரேலிய வீரர்கள் யாரும் அப்பீல் செய்யாததால் அது அவுட் இல்லை என்று அறிவித்தார் அவர்.
MCC கிரிக்கெட் விதி 31.1: "ஒரு பேட்ஸ்மேன் கிரிக்கெட் விதிகளின் படி அவுட்டாக இருந்தாலும் ஃபீல்டர்கள் அப்பீல் செய்யாத பட்சத்தில் நடுவர்கள் அவர்களுக்கு அவுட் கொடுக்க முடியாது". இதன்படிதான் நடுவர் அபூட், அல்சாரி ஜோசஃப் அவுட் இல்லை என்று அறிவித்தார். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்களால் அதை சரியாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. 'நான் அப்போதே அப்பீல் செய்தேன்' என்று டிம் டேவிட் கூற, இன்னும் ஒருசில வீரர்கள் சேர்ந்து முறையிடத் தொடங்கினார்கள். ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து நடுவரை முற்றுகையிட, "எல்லோரும் போட்டியில் கவனம் செலுத்துங்கள். இது மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது" என்று அபூட் எச்சரிக்கை செய்தார். மிட்செல் மார்ஷ் வந்து அவர்களை சற்று சமாதானம் செய்ய, அதன்பிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் கலைந்து போனார்கள்.
ஒரு வீரர் அவுட் ஆகியதும் நடுவர் அவுட் கொடுக்காதது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.