டி20 ரசிகர்களை சீட் நுனியில் அமரவைத்து பார்க்க வைப்பதிலும், விரல் நகங்களை கடிக்கவைக்கும் சுவாரசியத்தை கூட்டுவதிலும் ஐபிஎல் தொடரை அடித்துக்கொள்ள வேறு எந்த டி20 தொடர்களும் இல்லை. அதனால் தான் ஐபிஎல் தொடரானது உலகளவில் நம்பர் 1 டி20 லீக் தொடராக இன்றளவும் இருந்துவருகிறது. அதற்கு மிகப்பெரிய காரணம் என்றால், ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்படும் புதியபுதிய அப்டேட்கள் மற்றும் விதிமுறை மாற்றங்கள் தான் ஐபிஎல்லை தொடர்ந்து நம்பர் 1 லீக்காகவே வைத்துள்ளது.
கடந்த 2023 ஐபிஎல் தொடரில் அறிமுகமான ”இம்பேக்ட் விதி” பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் ”பவுன்சர்கள் வீசுவதில் மாற்றம், SRS சிஸ்டம்” முதலிய பல விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது ஐபிஎல் நிர்வாகம். என்னென்ன விதிமுறைகள் 2024 ஐபிஎல் தொடரில் பின்பற்றப் படவிருக்கின்றன என்பதை பார்க்கலாம்..
கடந்த 2023 ஐபிஎல் தொடரில் பவுலர்கள் ஒரு பவுன்சர் வீச மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இரண்டாவது பவுன்சர் வீசினால், ஒயிட் வழங்கப்படும். ஆனால் தற்போது பேட்ஸ்மேன்கள் கேம் என்று அழைக்கப்படும் டி20 போட்டிகளில், சமநிலையை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்கள் வீசும் விதிமுறை 2024 ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்களை பவுலர்கள் வீசுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. இரண்டு பவுன்சர்களுக்கு மேல் வீசப்பட்டால் நோ-பால் வழங்கப்படும்.
ஐபிஎல் தொடரின் தனிச்சிறப்பாக இருந்துவரும் விதிமுறையானது, ஸ்டம்பிங்களுக்கு ரிவ்யூ கேட்கப்படும் போது கேட்சும் சரிபார்க்கப்படுவது. இது சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளில் இருந்து வேறுபட்டாலும், இந்த நடைமுறையானது ஃபீல்டிங் பக்கத்திற்கு நியாயம் மற்றும் நன்மையை உறுதிசெய்யவும், விளையாட்டின் ஒருமைப்பாட்டைப் பின்பற்றும் வகையிலும் ஐபிஎல்லில் பின்பற்றப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரிலும் இது பின்பற்றப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு டூ-ரிவியூக்கள் கைவசம் இருக்கும் முறை 2024 ஐபிஎல் தொடரிலும் தொடர்கிறது. அதன்படி ஒவ்வொரு அணியும் ஒய்டுகள் மற்றும் நோ பால்களுக்கு எதிராகவும் ரிவ்யூ கேட்க முடியும்.
சர்வதேச கிரிக்கெட்டில் சமீபத்தில் பவுலர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச வேண்டும் என்ற ஸ்டாப் க்ளாக் விதிமுறையை அறிமுகப்படுத்தியது. ஐபிஎல் தொடரில் அந்த விதிமுறை பயன்படுத்தப்படுமோ என்ற கேள்வி இருந்த நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் ஸ்டாப் க்ளாக் விதிமுறைக்கு நோ சொல்லப்பட்டுள்ளது. இந்த விதிமுறை டி20 உலகக்கோப்பையில் பின்பற்றப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.
'ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்' என்பது நவீன கேமராக்கள் மூலம் துல்லியமான முடிவுகளை எடுப்பதற்கு பயன்படும் நவீன தொழில்நுட்ப அணுகலாகும். இது புதிய அதிவேக கேமராக்கள் அமைப்பின் உதவியுடன் செயலபடும், அதாவாது மைதானத்தைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் 9 அதிவேக ஹாக்-ஐ கேமராக்கள் நிலைநிறுத்தப்படும்.
இது தவிர இரண்டு ஹாக்-ஐ கேமராக்கள் 3வது நடுவர்களுடன் ஒரே அறையில் வைக்கப்பட்டு, நிகழ்நேர படங்கள் மற்றும் தரவுகளை விரைவாக வரிசைபடுத்தி முடிவெடுப்பதற்கு பயன்படுத்தப்படும். அதற்கும் மேல், 'பார்வையாளர்கள் டிவி நடுவருக்கும் ஹாக்-ஐ ஆபரேட்டர்களுக்கும் இடையிலான உரையாடல்களைக் கேட்கும் வாய்ப்பை” இந்த அம்சத்தில் பெறுவார்கள்.