indian team x page
T20

INDvZIM|பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் அபாரம்; 3வது டி20 போட்டியில் புதிய சாதனையுடன் இந்தியா வெற்றி

Prakash J

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி, ஜூலை 6ஆம் தொடங்கிய முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியும், 2வது போட்டியில் (ஜூலை 7) இந்திய அணியும் வெற்றி பெற்றிருந்தன. இவ்விரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில், 3வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும், கேப்டன் சுப்மன் கில்லும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். 27 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 36 ரன்கள் எடுத்த ஜெய்ஸ்வால் சிக்கர்ந்தர் ராஜாவின் பந்தில் வீழ்ந்தார். இதையடுத்து கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய அபிஷேக் சர்மா 10 ரன்களில் ஏமாற்றினார்.

என்றாலும் ருதுராஜ் கெய்க்வாட் கில்லுடன் இணைந்து இருவரும் பட்டையைக் கிளப்பினர். சுப்மன் கில் தன் பங்குக்கு 49 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் இந்தப் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய கெய்க்வாட் 1 ரன்னில் அரைசதத்தைத் தவறவிட்ட நிலையில் அவுட்டானார். அவர் 28 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிகஸ்ருடன் 49 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.

இதையும் படிக்க: கடைசிப்போட்டி.. ஓய்வுபெறும் ஜேம்ஸ் ஆண்டர்சனை கௌரவித்த இங்கிலாந்து அணி! விண்ணை பிளந்த கரகோஷம்!

பின்னர் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, தொடக்க வீரர்கள் சோபித்தனர். ஆனாலும், டியான் மியர்ஸ் மற்றும் கிளைவ் மண்டேனா வெற்றிக்காகப் போராடினர். ஆயினும், அவர்களின் தோல்வி உறுதியானது. 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புதிய சாதனை ஒன்று படைத்தது.

டி20 போட்டிகளில் 150 வெற்றிகளை ஈட்டிய முதல் அணி என்ற சிறப்பை இந்தியா பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டியான் மியர்ஸ் 65 ரன்கள் எடுத்தார். கிளைவ் மண்டேனா 37 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். மேலும் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கான 4வது டி20 போட்டி ஜூலை 13ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதையும் படிக்க: பெரு|மலையேறிய அமெரிக்க வீரர் பனியில் சிக்கி மாயம்; மம்மி ஆக உறைந்த உடல் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு