2024 டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 2ம் தேதி கோலாகலமாக தொடங்கப்படவிருக்கும் நிலையில், கோப்பையை வெல்வதற்காக 20 அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. ஐந்து-ஐந்து அணிகளாக 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதவிருக்கின்றன.
குரூப் A-ல்,
இந்திய அணியுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் கனடா அணிகள் இடம்பெற்றுள்ளன.
குரூப் B-ல்,
நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்துடன் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, நமீபியா மற்றும் ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன.
குரூப் C-ல்,
சொந்த மண்ணில் ஆடும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், உகாண்டா மற்றும் ஜெனிவா முதலிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
குரூப் D-ல்,
தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து மற்றும் நேபாள் முதலிய 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், வரவிருக்கும் 2024 டி20 உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போது இந்தியாவை தேர்ந்தெடுக்காமல் புறக்கணித்தார். இந்தியாவிற்கு பதிலாக அவர் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை தேர்ந்தெடுத்து அதற்கான காரணங்களையும் பகிர்ந்தார்.
டி20 உலகக்கோப்பைக்கான இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா செல்லும் என ஒருபக்கமாக பதில்சொன்னாலும், அவர் பாகிஸ்தானை தேர்ந்தெடுப்பதற்கு காரணங்களை முன்வைத்தார். இதுகுறித்து வீடியோ ஒன்றில் பேசியிருக்கும் நாதன் லயன், “டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா செல்லும் என்பதில் நான் ஒருசார்பாக இருக்கிறேன். அதேநேரத்தில் ஆஸ்திரேலியாவுடன் சேர்த்து நான் பாகிஸ்தானுடன் செல்லப்போகிறேன். விளையாடப்போகும் ஆடுகளத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப, பாகிஸ்தான் அணி தரமான சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளனர். அவர்களுடன் பாபர் அசாம் போன்ற எலக்ட்ரிக் பேட்டர்களும் இருக்கின்றனர். அதனால் பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்" என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய நாதன் லயன், “டி20 உலகக்கோப்பையின் தொடக்கத்திலேயே நாம் பெரிய ஸ்கோர்களை பார்க்கப்போகிறோம் என்று நினைக்கிறேன். சிறப்பாக செயல்பட போகும் ஒரு வீரரை தேர்ந்தெடுத்தால், நான் மிட்செல் மார்ஸுக்கு செல்வேன். அவரின் தற்போதைய பேட்டிங் ஃபார்ம் மற்றும் பவுலிங் இரண்டிலும் அவர் கலக்கப்போகிறார்” என்று கூறியுள்ளார்.