pollard - Shepherd - hardik web
T20

4,6,6,6,4,6! ஒரே ஓவரில் 32 ரன் விளாசிய ஷெப்பர்ட்! Pollard-க்கான மாற்று வீரரா? 234 ரன்கள் குவித்த MI!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் 234 ரன்கள் குவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடரானது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மோசமான ஒரு தொடக்கமாக அமைந்துள்ளது. விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி, ஒரு வெற்றியை கூட பதிவுசெய்யாத ஒரே அணியாக இருந்துவருகிறது.

இந்நிலையில், வெற்றிபெற்றே ஆகவேண்டிய 4வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்துவிளையாடியது மும்பை இந்தியன்ஸ் அணி. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

suryakumar yadav

ஒரு முழுமையான அணியை கட்டமைப்பதில் கோட்டைவிட்ட மும்பை இந்தியன்ஸ் அணி, 4வது போட்டியில் “சூர்யகுமார் யாதவ், மொஹமது நபி மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட்” முதலிய 3 வீரர்களின் வருகையால் வலுவான ஒரு அணியாக மாறியது.

வலுவான தொடக்கம் கொடுத்த ரோகித் சர்மா!

பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு வலுவான தொடக்கம் தேவைப்பட்டது. அந்த பொறுப்பை தன் தோள்களில் ஏற்றுக்கொண்ட ரோகித் சர்மா, இஷான் கிஷனை ஒருமுனையில் நிற்கவைத்துவிட்டு 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டினார். 27 பந்துகளில் 49 ரன்கள் அடித்த ரோகித்தை அக்சர் பட்டேல் வெளியேற்ற, அவரைத்தொடர்ந்து இஷான் கிஷான் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

காயத்திலிருந்து மீண்டுவந்து முதல் போட்டியில் பங்கேற்ற சூர்யகுமார் யாதவ் 0 ரன்னில் வெளியேற, 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விரட்டிய இஷான் கிஷன் ரன்ரெட்டை குறையாமல் பார்த்துக்கொண்டார். முக்கியமான நேரத்தில் இஷான் கிஷனை 42 ரன்னில் அக்சர் பட்டேல் வெளியேற்ற, திலக்வர்மாவை 6 ரன்னில் கலீல் அகமது வெளியேற்றினார்.

ishan kishan

அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் விழ 5வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட் இருவரும் நிதனாமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருபுறம் ஹர்திக் பாண்டியா விக்கெட் விழாமல் பார்த்துக்கொள்ள, மறுமுனையில் 2 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய டிம் டேவிட் கலக்கிப்போட்டார். ஹர்திக் பாண்டியா 39 ரன்னில் வெளியேற 19ஓவர் முடிவில் 202 ரன்களை எட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஒரே ஓவரில் 32 ரன்கள் விரட்டிய ஷெப்பர்ட்!

20வது ஓவரில் பேட்டிங் செய்த ரொமாரியோ ஷெப்பர்ட் அன்ரிச் நோர்க்கியாவை எதிர்கொண்டார். முதல் பந்தையே சிக்சராக பறக்கவிட்ட ஷெப்பர்ட், அடுத்தடுத்த 4 பந்துகளில் கண்ணைமூடி திறப்பதற்குள் 4, 6, 6, 6 என 3 சிக்சர்களை பறக்க விட்டு 26 ரன்களை எடுத்துவந்தார். கடைசிபந்தில் என்னசெய்யப்போகிறார் என்று பார்க்கும் பொது, கடைசிபந்தையும் சிக்சராக பறக்கவிட்ட ஷெப்பர்ட் 32 ரன்கள் குவித்து மிரட்டிவிட்டார்.

10 பந்துகளில் 39 ரன்கள் குவித்த ரொமாரியோ ஷெப்பர்டின் அபாரமான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 234 ரன்கள் குவித்துள்ளது. 235 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிவரும் டெல்லி கேபிடல்ஸ் அணி, டேவிட் வார்னரின் விக்கெட்டை இழந்து 8 ஓவரில் 69 ரன்களுடன் விளையாடிவருகிறது.

ஷெப்பர்ட் பொல்லார்டுக்கு மாற்று வீரரா?

பவுலிங் ஆல்ரவுண்டரான ரொமாரியோ ஷெப்பர்ட் மும்பை அணியின் ஜாம்பவான் ஆல்ரவுண்டரான கிரன் பொல்லார்டுக்கு மாற்றுவீரராக மாறுவாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். பேட்டிங்கில் செம்ம ஹிட்டிங் டேலண்டை வைத்திருக்கும் ஷெப்பர்ட், பொல்லார்டை போன்றே ஸ்லோ வேரியேசன் பந்துவீச்சையும் வைத்துள்ளார். ஒருவேளை அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில் ரொமாரியோ ஷெப்பர் கிரன் பொல்லார்டுக்கான பதிலாக மாறும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

pollard

2016ஆம் விளையாடிய தன்னுடைய டொமஸ்டிக் 50 ஓவர் முதல் போட்டியிலேயே 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்றார். அதன்பிறகு 2019ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஒருநாள் அறிமுகத்தை பெற்றார், அதிலும் 2 விக்கெட்டுகளை பதிவுசெய்தார். அதனைத்தொடர்ந்து 2020-ல் டி20 போட்டியில் அறிமுகமானார்.

shepherd

ஐபிஎல்லை பொறுத்தவரையில் 2022 ஐபிஎல் தொடரில் 7.75 கோடி விலைக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார். அதற்கு பிறகு லக்னோ அணிக்கு சென்ற ஷெப்பர்ட், தற்போது மும்பை அணிக்காக விளையாடிவருகிறார்.

235 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் டெல்லி அணி 15 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் வார்னர் 10 ரன்களில் ஏமாற்றிய போதும் பிரித்வி ஷா 40 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அபிஷேக் போரல் 31 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். டெல்லி அணிக்கு 30 பந்துகளில் 91 ரன்கள் தேவையாக உள்ளது.