Mumbai Indians IPL
T20

இவன் இப்படிதான் சார்.. தோத்துட்டே வந்து திடீர்னு விஸ்வரூபம் எடுப்பான்! மிரளவைக்கும் MI ஹிஸ்ட்ரி!

தொடர்ச்சியான மூன்று தோல்விகளுக்கு பிறகு ஒரு உலக சாதனை போட்டியின் மூலம் வலுவான அணியாக கம்பேக் கொடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

Rajakannan K

ஹாட்ரிக் தோல்விக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி ஒருவழியாக தன்னுடைய முதல் வெற்றியை நடப்பு ஐபிஎல் தொடரில் பதிவு செய்துள்ளது. டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் 234 ரன்கள் அடித்தும் இறுதிவரை போராடியே 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அந்த அணி. இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பூஸ்ட் ஆக இந்த வெற்றி அமைந்துள்ளது.

Mumbai Indians

தொடர் தோல்விகளை சந்திப்பதும் அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து சில சமயம் சாம்பியன் கூட ஆவதும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிது அல்ல. அதனால், மும்பை இந்தியன்ஸ் அணி இந்த வருடமும் இனி வெற்றிகளை குவிக்கும் என்று பலரும் ஆருடம் கணித்து வருகிறார்கள். இதற்கு முன்பு இதேபோல் நடந்த சுவாரஸ்யங்களை இங்கே காணலாம்.

மும்பை இந்தியன்ஸ்

தோல்விகளுக்கு பின் வெற்றிப்பாதைக்கு திரும்புவது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பலமுறை நடைபெற்றுள்ள போதும் 2015 ஐபிஎல் தொடர் அதில் சிறப்பு வாய்ந்தது. முதல் ஐபிஎல் சீசன் குறித்து பார்த்துவிட்டு அதன்பிறகு 2015 ஐபிஎல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

முதல் ஐபிஎல் தொடரிலேயே முதல் 4 போட்டியில் தோல்வி!

2008 MI

மும்பை அணிக்கு முதல் ஐபிஎல் சீசனே அப்படித்தான் அமைந்தது. சச்சின் டெண்டுல்கர், சனாத் ஜெயசூர்யா, ஹர்பஜன் சிங், ஷான் பொல்லாக், லஷித் மலிங்கா, ராபின் உத்தப்பா உள்ளிட்ட ஸ்டார் வீரர்களுடன் களமிறங்கிய மும்பை அணி மீதுதான் முதல் ஐபிஎல் தொடரில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தொடக்கமே அதற்கு நேர்மாறாக அமைந்தது. முதல் நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியே தழுவியது. அதன் பிறகு தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்று மீண்டு வந்தது மும்பை அணி. இருப்பினும் அதன் பிறகு ஹாட்ரிக் தோல்வி பின் ஒரு வெற்றியை பெற்று நூலிழையில் பிளே ஆஃப் வாய்ப்பை ரன் ரேட்டில் நழுவ விட்டது மும்பை அணி.

திரும்பி பார்க்க வைத்த 2015 ஐபிஎல் தொடர்!

முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ரோகித் சர்மா 65 பந்துகளில் 98 ரன்கள் அடித்த போதும் தோல்வியை சந்திக்க நேரிட்டது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 178 ரன்கள் என்ற இலக்கை அடிக்க முடியாமல் 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி. அந்தப் போட்டியில் வெறும் 164 ரன்கள் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. அந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் உட்பட முன்னணி வீரர்கள் அனைவரும் சொதப்ப பொல்லார்டு 34 பந்துகளில் 70 ரன்களில் விளாசி 164 ரன்கள் என்ற கவுரமான ரன் குவிப்புக்கு உதவினார். ஆனாலும் தோல்வியே கிடைத்தது. அடுத்து சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் மீண்டும் பொல்லார்டின் 64 ரன்கள் குவிப்பால் 183 ரன்கள் குவித்தபோதும் சென்னை அணி 16.4 ஓவரிலேயே அடித்து வெற்றியை பறித்தது.

2015 MI

தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை தழுவியதால் மும்பை அணி அவ்வளவுதான் என்று பலரும் சொன்னார்கள். அடுத்து ஆர்சிபி அணிக்கு எதிரானப் போட்டியில் 209 ரன்கள் குவித்த பிறகுதான் முதல் வெற்றியை பதிவு செய்தது MI. ஆனால், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் தோல்வி அடைய ரசிகர்கள் நொந்தே போனார்கள். முதல் 6 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வி. ஆனால், அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு. ஆம், தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் 157 ரன்கள் மட்டுமே எடுத்து அந்த அணியை 137 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி வெற்றிபெற்று, ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி, சென்னை அணிகளுக்கு எதிராக எளிய வெற்றியை தொடர்ந்து ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வி மீண்டும் கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக அசத்தல் வெற்றியுடன் பிளே ஆஃப்க்குள் நுழைந்தது மும்பை அணி.

MI IPL Tittle

14 போட்டிகளில் 6 தொல்வி, 8 வெற்றிகளுடன் பிளே ஆஃப்க்குள் நுழைந்தது. முதல் தகுதிச் சுற்றில் சென்னை அணியை அசால்ட்டாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு மும்பை சென்றது. மீண்டும் இறுதிப் போட்டியிலும் சென்னை அணியுடன் தான் மோதியது. இறுதிப் போட்டியில் 202 ரன்கள் குவித்தது மும்பை அணி. சென்னை அணியை 161 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி கோப்பையை தட்டிச் சென்றது மும்பை அணி.

2014 போட்டியில் மேஜிக் நிகழ்த்திய MI !

2014 ஐபிஎல் தொடரில் முதல் 5 போட்டிகளில் தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி. பின்னர் அடுத்தடுத்து இரண்டு வெற்றி, பின் ஒரு தோல்வி, ஒரு வெற்றி என மாறி மாறி வந்தது. கடைசி 4 லீக் போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆஃப்க்குள் நுழைந்தது மும்பை.

Best Thrilling Match in IPL History

தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியை தழுவி பின்னர் மீண்டு வந்து பிளே ஆஃப்க்குள் நுழைவது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை. ஆனால் ஒன்றுமே இல்லை என்ற இடத்திலிருந்து வெற்றிபெறமுடியும் என்பதை எல்லாம் மும்பை அணி மட்டுமே சாத்தியப்படுத்தியுள்ளது. அப்படியான மீண்டெழும் குணம் கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி. அதனால் தான் பல்தான்ஸ் அணியை எப்போதும் எந்த அணியும் எளிதில் எடுத்துக்கொள்ளாமல் விளையாடும், அப்படி நடப்பு தொடரிலும் தோல்விப் பாதையில் இருந்த மும்பை அணி தற்போது வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது.

ரோகித் சர்மா

செம்ம பேட்டிங் ரிதமில் இருக்கும் ரோகித் சர்மா, ஐபிஎல்லுக்காக மற்றபோட்டிகளை விட்டுவந்து கலக்கி வரும் இஷான் கிஷன், நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் சூர்யகுமார், மிடில் ஆர்டரில் உலகத்தர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, இம்பேக்ட் வீரராக யங் கன் நமன் திர், ஃபினிசிங் செய்வதற்கு டிம் டேவிட், முகமது நபி, ரொமாரியோ ஷெபர்ட், பந்துவீச்சில் கலக்குவதற்கு ஜஸ்பிரித் பும்ரா” ஒரு கம்ப்ளீட் அணியாக மும்பை அணி உருமாறியுள்ளது. இதன்மூலம் கடந்த தொடர்களில் செய்த அதே மேஜிக்கை நடப்பு தொடரிலும் செய்யுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.