மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் தோனிக்கு இடது முழங்கால் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் கசிந்த நிலையில், தற்போது இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் இறுதிப் போட்டி முடிந்ததும் அகமதாபாத்தில் இருந்து நேரடியாக மும்பைக்கு சென்ற தோனி, அங்கு நேற்று பரிசோதனை மேற்கொண்டதாக தெரிகிறது.
இதையடுத்து அவருக்கு இன்று, விளையாட்டு எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணரான டாக்டர் தின்ஷா பார்திவாலா தலைமையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சிஎஸ்கே நிர்வாகத்தின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தோனிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் தின்ஷா பார்திவாலா, பிசிசிஐயின் மருத்துவ நிபுணர் குழுவில் உள்ளார். அவர், இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த் உள்பட முன்னணி வீரர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள நிலையில் தோனிக்கும் இன்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
தற்போது அறுவை சிகிச்சை முடிந்து, தோனி நலமுடன் இருப்பதாகவும், அவரிடம் சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் தெரிகிறது. தோனிக்கு Laparoscopy அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. உடல்நிலை தேறியதும் நாளையோ அல்லது அதற்கு மறுதினமோ மருத்துவமனையில் இருந்து தோனி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, சிறிது காலம் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் மறுவாழ்வு (rehabilitation) பயிற்சியை தொடங்குவார் என்றும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தோனிக்கு போதுமான நேரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிஎஸ்கேவை சேர்ந்த அதிகாரி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.