சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டி முடிந்தப் பின்பு சிஎஸ்கே வெற்றி குறித்தும், 200-க்கு மேலான ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்தது பற்றி தோனியிடம் கேட்கப்பட்டபோது, "இதுதான் எனது வேலை. இதைத்தான் நான் செய்ய வேண்டும் என்று அவர்களிடம் சொல்லியிருக்கிறேன், என்னை நிறைய ஓட வைக்காதீர்கள் என்று. அது வேலை செய்து வருகிறது. இதுதான் நான் செய்ய வேண்டியதும் (வேகமாக ரன் அடிப்பது). மேலும், அணிக்கு பங்களிப்பதில் மகிழ்ச்சி.
போட்டியின் கடைசி கட்டத்தை நெருங்க நெருங்க, ஒவ்வொருவரும் சில டெலிவரிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. எங்களது பேட்டிங்கில் நாங்கள் திருப்திகரமாக இருக்க வேண்டும். நான் மிட்செல் சான்ட்னரை அணிக்கு கொண்டு வர விரும்பினேன். அவர் புதிய பந்தில் பிளாட் விக்கெட்டுகளில் சிறப்பாகச் செயல்பட்டார். அவர் நல்ல வேகத்தில் பந்து வீசுகிறார். ருதுராஜ் கெய்க்வாட் நன்றாக பேட்டிங் செய்கிறார்.
அவருக்கு விளையாட்டு குறித்த விழிப்புணர்வு உள்ளது. அவர் தன்னை மாற்றியமைத்துக்கொள்ள தயாராக இருக்கிறார். உங்களுக்கு அப்படிப்பட்ட வீரர்கள் கிடைப்பது அரிது. விளையாட்டை நன்கு அறிந்த நபர்களுக்கும், அணியில் இதுபோன்ற வீரர்கள் தேவை என்பது தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.