நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையைத் தட்டிச் சென்றது. கடந்த மார்ச் 31-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் லீக் சுற்றின் முதல் போட்டியிலேயே தோனி கலந்துகொள்வாரா என்று சந்தேகங்கள் கிளம்பின. ஏனெனில், ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்னதாக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஈடுபட்ட பயிற்சியின்போது இடது மூட்டுப் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக தோனி அவதிப்பட்டதாகவும், அதனால் நரேந்திர மோடி மைதானத்தில் முதல் லீக் சுற்றுக்கு முன்னதான வலைப் பயிற்சியில் அவர் பங்கேற்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.
இருப்பினும், அந்தப் போட்டி முதல் இறுதிப் போட்டி வரை தோனி இந்த சீசன் முழுவதுமே பங்கேற்றார். எனினும், சிலப் போட்டிகளில் தோனி இயல்பாக ஓட முடியாமல் அவதிப்பட்டதை காண முடிந்தது. குறிப்பாக தன்னை அதிகம் ஓடவைக்க வேண்டாம் என்றும் தோனி ஒரு போட்டிக்கு பின்புக்கூட தெரிவித்திருந்தார். 17-வது லீக் போட்டி முடிந்தப் பின்பு தோனி தாங்கி தாங்கி (நொண்டியவாறு) சென்ற வீடியோவும் வெளியானது.
குவாலிஃபயர் 1 போட்டி உள்பட சிலப் போட்டிகளில் முழங்கால் கேப்புடன் (knee cap) தோனி வலம் வந்தார். இதுதொடர்பாக சென்னை அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃபிளம்மிங், தோனி தனது முழங்கால் காயத்திற்கு சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவரது சில அசைவுகளில் அதனை நீங்கள் காணலாம் என்றும், அந்தக் காயம் அவருக்கு சற்று தடையாகவே இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஐ.பி.எல் தொடரை வென்ற கையோடு, மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் முழங்கால் காயம் தொடர்பான சில பரிசோதனைகளுக்காக இந்த வாரத்தில் தோனி அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பரிசோதனையின் முடிவில் அவரது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சையையும் அங்கேயே உடனடியாக தோனி மேற்கொள்ளவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.