தோனி, ராஜ்குமார் சர்மா ட்விட்டர்
T20

India Head Coach| “தோனி வந்தால் சிறப்பாக இருக்கும்..” - குறிவைக்கும் விராட் கோலியின் குரு!

“இந்திய அணிக்கு தோனி தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும்” என விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளரான ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

Prakash J

நடப்பு ஐபிஎல்லின் சாம்பியனுக்குப் பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக வரப் போகிறவர் யார் என்ற பேச்சுகளே உலா வருகின்றன. தற்போது அந்தப் பதவியில் இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் எதிர்வரும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது.

இதையடுத்து அந்தப் பதவிக்கு விண்ணப்பங்களை அனுப்ப பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக அந்தப் பதவிக்கு நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெம்மிங், ஆஸ்திரேலிய வீரர்கள் ரிக்கி பாண்டிங் மற்றும் ஜஸ்டின் லாங்கர், இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் வி.வி.எஸ்.லட்சுமணன், கெளதம் கம்பீர் ஆகியோரின் பெயர்கள் பேசப்பட்டு வருகின்றன. இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கும், தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவித்திருந்தார்.

பிசிசிஐ

இதற்கிடையே, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை நிராகரித்ததாக, ஆஸ்திரேலிய அணி வீரர்களான ஜஸ்டின் லாங்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தது இந்திய கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதை மறுத்திருந்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “நானோ, பிசிசிஐயோ எந்தவொரு ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரிடமும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிங்கள் அனுப்பக்கோரி அணுகவில்லை. சில ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டு வருகின்றன” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: பாலியல் புகார் | ”பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” - வீடியோ வெளியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா!

இந்த நிலையில், மீண்டும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி குறித்த பேச்சுகள் அடிபடுகின்றன. அதில் 90 சதவிகிதம் இந்தியர் ஒருவரே பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் தற்போது கொல்கத்தா அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று தந்துள்ள அதன் ஆலோசகரான கவுதம் கம்பீரே நியமிக்கப்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், “இந்திய அணிக்கு தோனி தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும்” என விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளரான ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

தோனி

இதுகுறித்து அவர், “நிச்சயம் இந்தப் பதவிக்கு வருபவர் ஓர் இந்தியராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்துவிட்டால் அவர் இந்த பதவிக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருப்பார். அவர் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, மிகப்பெரிய தொடர்களை வென்று கொடுத்துள்ளார்.

தோனி இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் இந்திய வீரர்கள் மத்தியில் அவருக்கு அதிக மரியாதை கிடைக்கும். அவர், இந்த விளையாட்டை நீண்டகாலமாக ஆடி வருகிறார். அணியை சரியாக திட்டமிட்டு, முறையாக கையாள்வார். இதைச் செய்ய தோனிதான் சரியான நபர். ஏனெனில், தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டபோது அணியில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ராகுல் டிராவிட், ஹர்பஜன் சிங், கவுதம் கம்பீர் மற்றும் யுவராஜ் சிங் போன்ற பெரிய வீரர்கள் இருந்தனர். அப்படி இருந்தும் தோனி அணியை சிறப்பாக வழிநடத்தினார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: நியூயார்க் சென்றடைந்த இந்திய அணி.. வேறு நாட்டில் தனிமையில் விடுமுறையை கழிக்கும் ஹர்திக்.. பின்னணி?