dhoni pt web
T20

HBD DHONI | முடிசூடா மன்னன்.. என்றும் ராஜாதிராஜா... தோனியின் முறியடிக்கப்படாத சாதனைகள்!

தோனி பெற்றுள்ள கோப்பைகளைப் போலவே அவரது சாதனைகளுக் மலைபோல் குவிந்துள்ளன. கிரிக்கெட் உலகைப் புரட்டிப் பார்த்தால் இன்னும் சில சாதனைகள் கண்ணில் படலாம். அவருக்கே தெரியாமல் ஏதேனும் சாதனை படைத்திருக்கவும் கூடும்.

Angeshwar G

ராஜாதி ராஜா தோனி

கிரிக்கெட் உலகில் என்ன நடந்தாலும் அனுதினமும் ரசிகர்களால் உச்சரிக்கப்படும் பெயர் தோனி. 43 வயது நிறைவடைந்து 44 ஆவது வயதில் அடிஎடுத்து வைக்க இருக்கும் ஒருவருக்கு இருக்கும் ரசிகர்கள், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் ஒட்டுமொத்த ரசிகர்களை விடவும் அதிகம் என்பதை அடித்துக் கூறலாம்.

அத்தகைய ஒருவருக்கு பிறந்தநாள் என்றால் ரசிகர்கள் சும்மாவா இருப்பார்கள். இணையமே அதிர்கிறது. அவரது சாதனைகள், அவர் பெற்ற கோப்பைகள், போட்டிகளில் அவர் செய்த சம்பவங்கள் என சும்மா பிரிச்சு, பிரிச்சு காட்டுகின்றனர் ரசிகர்கள். நம் பங்கிற்கு நாமும் ஒன்றை பிரித்தோம்.

ஒருவரால், இத்தனை ஆண்டுகாலம் கிரிக்கெட் உலகில் ரசிகர்களை தன்பக்கம் கட்டிபோட்டு வைத்திருக்க முடிகிறது என்றால் அது சும்மா நடக்குமா? ஒவ்வொரு போட்டியிலும் தன் ஆட்டத்தையும், ஒவ்வொரு தொடரிலும் தன் தலைமையையும் நிரூபித்தே வந்துள்ளார். அவருக்குப் பின் ஏகப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் ஆள வந்துவிட்டார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரைப் பற்றிய பேச்சு இருக்கிறது. ஆனால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்று இத்தனை ஆண்டுகள் ஆனபோதும் அவரது சாதனைகள் பல இன்னும் முறியடிக்கப்படாமல்தான் இருக்கின்றன.

ஜெய்ப்பூரில் தோனி காட்டிய கெத்து

முதலில் ஒருநாள் போட்டியில் விக்கெட் கீப்பராக அவர் அடித்த ரன்கள் இதுவரை எந்த ஒரு விக்கெட் கீப்பராலும் முறியடிக்கப்படவில்லை. 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி ஜெய்ப்பூரில் இலங்கை உடனான ஒருநாள் போட்டி நடந்தது. முதல் ஓவரிலேயே சச்சின் அவுட்டாக, முதல் ஓவரின் இறுதிப் பந்திலேயே களத்திற்குவந்தார் தோனி. அதிரடியும் ஆரம்பித்தது. ஓவருக்கு ஓவர் பவுண்டரிகளும், சில சமயங்களில் சிக்சர்களும் பறந்துகொண்டே இருந்தன. அந்த போட்டியில் அவர் 145 பந்தில் 183 ரன்களை எடுத்திருந்தார். ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆட ஆரம்பித்த தோனி எந்த ஒரு பந்துவீச்சாளரையும் விட்டுவைக்கவில்லை. அந்த போட்டியில் மட்டும் அவர் 10 சிக்சர்கள், 15 பவுண்டரிகளை அடித்திருந்தார்.

ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக அதிகபட்சமாக அடிக்கப்பட்ட ரன்கள் என்பது இதுதான். ஒருநாள் போட்டி ஒன்றில் விக்கெட் கீப்பராக 172 ரன்களை அடித்து, கில்கிறிஸ்ட் தன்னிடம் வைத்திருந்த சாதனையை அன்று முறியடித்திருந்தார் தோனி. அதன்பின் எந்த ஒரு விக்கெட் கீப்பராலும் அதை முறியடிக்க முடியவில்லை.

போட்டி முடிந்து பேசிய அவரோ, “மூன்றாவது இடத்தில் விளையாடுவது மகிழ்ச்சி, இருந்தாலும் அணி நிர்வாகம் எந்த இடத்தில் களமிறங்க வேண்டும் என விரும்பினாலும், அங்கும் விளையாடுவதில் மகிழ்ச்சியே” என தெரிவித்திருந்தார்.

என்றும் தலைவன்

அடுத்து விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக அவரது சாதனை என்பது இமாலயம். ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக அதிக போட்டிகளில் செயல்பட்டது தோனி மட்டும்தான். 60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள தோனி, 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். அவரது வெற்றி சதவீதம் என்பது 45%.

ஒருநாள் போட்டிகளிலும் 200 போட்டிகளில் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக செயல்பட்டுள்ளார் தோனி. அதில் 110 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை நாட் அவுட் பேட்ஸ்மேனும் தோனிதான். 342 போட்டிகளில் 83 முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். டி20 போட்டிகளில் 72 போட்டிகளில் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளார் தோனி. அதில் 41 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார்.

கோட்டைத் தாண்டினால் காலி

ஸ்டெம்பிங் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்தது. பேட்ஸ்மேன் கோட்டுக்கு வெளியே போய்விட்டார் என்றால் முடிந்தது கதை. அதிலும் தன்னுடைய சாதனையை பதிவு செய்து வைத்துள்ளார் தோனி. ஒருநாள் போட்டிகளில் அதிக முறை ஸ்டெம்பிங் செய்த விக்கெட் கீப்பர். இதுவரை 123 ஸ்டெம்பிங்களை செய்துள்ளார். சங்ககரா 99 ஸ்டெம்பிங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். டி20 போட்டிகளில் தோனி 34 ஸ்டெம்பிங்களை செய்துள்ளார். பாகிஸ்தானின் கம்ரான் அக்மல் 32 ஸ்டெம்பிங்களை செய்து இரண்டாவது இடத்தில் உள்ளார். அதுமட்டுமின்றி அதிவேகமாக ஸ்டெம்பிங் செய்த வீரரும் அவர்தான். 0.08 விநாடிகளில் அவர் செய்த ஸ்டெம்பிங் தான் தற்போதுவரை உலக சாதனை.

நம்பர் 1

அதுமட்டுமின்றி ஒருநாள் போட்டிகளில் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு வேகமாக முன்னேறிய ஒரே வீரர் தோனி மட்டும்தான். கிட்டத்தட்ட 38 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி ஒருநாள் போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியவர். தற்போதுவரை அதிவேகமாக முதலிடத்திற்கு முன்னேறிய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.

தோனி பெற்றுள்ள கோப்பைகளைப் போலவே அவரது சாதனைகளுக் மலைபோல் குவிந்துள்ளன. கிரிக்கெட் உலகைப் புரட்டிப் பார்த்தால் இன்னும் சில சாதனைகள் கண்ணில் படலாம். அவருக்கே தெரியாமல் ஏதேனும் சாதனை படைத்திருக்கவும் கூடும்.

(நாளை ஜூலை 7 ஆம் தேதி தோனிக்கு 43 ஆவது பிறந்தநாள்)