லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் அணி ஒரு விக்கெட்டை கூட விட்டுக்கொடுக்காமல் 166 ரன்கள் என்ற இலக்கை வெறும் 9.4 ஓவரில் எட்டி மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது. 16 பந்துகளில் அரைசதம், 19 பந்துகளில் அரைசதம் என துவம்சம் செய்த SRH தொடக்கவீரர்களுக்கு எதிராக, லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுலின் எந்த திட்டமும் பலனளிக்கவில்லை.
இந்நிலையில் ஏற்பட்ட மிகப்பெரிய தோவ்லியின் மூலம் படுமோசமான ரன்ரேட்டை அடைந்த லக்னோ அணி, புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு சரிந்து பிளேஆஃப் செல்வதற்கான ரேஸில் கடினமான நிலைக்கு சென்றது. இதனால் விரக்தியடைந்த லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனான கேஎல் ராகுலிடம் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாமல் பல முன்னாள் இந்திய வீரர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
2022 மற்றும் 2023 ஐபிஎல் தொடர்களில் கேப்டன் கேஎல் ராகுல் தலைமையில் சிறப்பாக செயல்பட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி எலிமினேட்டர் வரை முன்னேறி அசத்தியது. அதனைத்தொடர்ந்து நடப்பு 2024 ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய LSG, அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புள்ள 4 அணிகளில் ஒன்றாகவே ஜொலித்தது.
ஆனால் அவர்களின் முக்கிய வீரர்களான மயங்க் யாதவின் காயம், டி-காக்கின் ஃபார்ம் அவுட் முதலிய மோசமான சூழ்நிலையால் சரியான பிளேயிங் லெவனை எடுத்துவர முடியாமல் கடைசி 4 போட்டிகளில் மூன்றில் தோற்று தடுமாறி வருகிறது.
இதனால் SRH உடனான தோல்விக்கு பிறகு மைதானத்தில் வைத்தே கேப்டன் கேஎல் ராகுலிடம் கடுமையான வாக்குவாதம் நடத்திய அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ரசிகர்களை முகம்சுளிக்க செய்தார். கோயங்கா ஆவேசமாக பேசினாலும் அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்ட ராகுல் வாடிய முகத்துடன் திரும்பினார். இதனைப்பார்த்த ரசிகர்கள், “இந்தியாவிற்கு டாப் லெவல் கிரிக்கெட் விளையாடும் ஒரு வீரருக்கு மரியாதை கொடுக்காமல் எல்லை மீறிவிட்டீர்கள்” என்றும், “நீங்க வேறு அணிக்கு செல்லுங்கள் ராகுல்” என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இத்தகைய சூழலில் தான் பல முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதை தொடர்ந்து, இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியும் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கேஎல் ராகுலை அவமரியாதை செய்யும் விதமாக நடந்துகொண்ட லக்னோ உரிமையாளர் குறித்து பேசிய முகமது ஷமி, “ஒவ்வொரு வீரருக்கும் மரியாதை உண்டு, அத்துடன் நீங்களும் ஒரு மரியாதைக்குரிய நபர், ஒரு அணிக்கு உரிமையாளராக இருக்கிறீர்கள். பலர் உங்களைப் பார்த்து உங்களிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் நீங்கள் கேமராக்களுக்கு முன்னால் அப்படி நடந்துகொண்டது வெட்கப்படக்கூடிய ஒரு செயல்” என்று விமர்சனம் செய்தார்.
மேலும் அதை மைதானத்தில் வைத்து பேச என்ன அவசியம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், “ஒருவேளை நீங்கள் கோவத்தை வெளிப்படுத்த வேண்டும், அடுத்து என்ன செய்யவேண்டும் என கூற நினைத்தால், அதற்கு பல வழிகள் உள்ளன. நீங்கள் டிரஸ்ஸிங் ரூம் சென்றிருக்கலாம் அல்லது ஹோட்டலுக்கு சென்று இதைப்போல கூட விவாதம் செய்திருக்கலாம். அதை மைதானத்தில் வைத்து செய்ய வேண்டிய அவசியமில்லை. அவ்வளவு வேகமாக செயல்பட்டு செங்கோட்டையில் கொடியா ஏற்ற போறிங்க” என்று க்றிக்பஸ் உடனான உரையாடலில் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் இது ஒரு குழு விளையாட்டு என்று குறிப்பிட்ட ஷமி, “இது ஒரு குழு விளையாட்டு, உங்களின் திட்டம் வெற்றிபெறவில்லை என்றால், அது பெரிய விஷயம் இல்லை. விளையாட்டில் எதுவும் சாத்தியம். நல்ல நாட்கள் மற்றும் கெட்ட நாட்கள் இரண்டுமே விளையாட்டில் இருக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அவர் உங்கள் கேப்டனாக இருக்கிறார், அதற்கு மரியாதை கொடுங்கள். பேசுவதற்கு ஒரு வழி இருக்கிறது, இது மிகவும் தவறான செய்தியை பரப்புகிறது" என்று ஷமி கூறினார்.