முகம்மது ஷமி, சானியா மிர்சா எக்ஸ் தளம்
T20

சானியா மிர்சாவை திருமணம் செய்யப் போகிறேனா? முதல்முறையாக மவுனம் கலைத்த முகம்மது ஷமி!

முகம்மது ஷமி மற்றும் சானியா மிர்சாவின் திருமண வதந்தி குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதற்கு முகம்மது ஷமியே பதில் அளித்துள்ளார்.

Prakash J

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரராக இருப்பவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது ஷமி. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை கொண்டு சென்றவர். இந்தத் தொடரில் இவருடைய பங்களிப்பும் பேசப்பட்டது. தற்போது காயம் காரணமாக கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலகியுள்ளார். அதுபோல், இந்தியாவின் மிகப் பிரபலமான டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா. இந்த நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக இணையத்தில் செய்திகள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.

சமீபத்தில்கூட, இவர்கள் இருவரின் புகைப்படங்களையும் இணைத்து திருமண நிச்சயத்தார்த்த புகைப்படங்கள் என்ற பெயரில் இணையத்தில் வைரலாகின. ஆனால், அது போலியானது எனக் கண்டறியப்பட்டது. மேலும் அவர்களது திருமணம் பற்றிய வதந்திகளும் பொய்யானவை என உறுதிப்படுத்தப்பட்டது.

சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரின் தரப்பிலிருந்தும் இதுபோன்ற செய்திகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே சோயிப் மாலிக்குடன் சானியா மிர்சாவுக்கு நடைபெற்ற திருமண புகைப்படத்தை முகமது ஷமி புகைப்படத்துடன் மார்பிங் செய்து இணையத்தில் வைரலாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சானியா மிர்சாவின் தந்தை இம்ரானும், “இதில், உண்மை இல்லை. இது ஒரு குப்பையான செய்தி. சானியாவை முகம்மது ஷமி இதுவரை சந்தித்ததுகூட இல்லை” எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முகம்மது ஷமி மற்றும் சானியா மிர்சாவின் திருமண வதந்தி குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிக்க: தொடர்ந்து தடுமாற்றம்| மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க சென்ற ஜோ பைடன்!

இதுகுறித்து முகம்மது ஷமி, “சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தும் அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற விஷயங்களைப் பரப்பக்கூடாது. இந்தச் செய்தி மிகவும் விஷமத்தனமானது. யாரோ வேண்டுமென்றே விளையாட்டுக்காக இதைப் பரப்பியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இப்படி பொய்யான செய்தியை பரப்பினால், நான் என்ன செய்வது? என்னுடைய மொபைல் போனை ஓபன் செய்தாலே சானியா மிர்சாவை நான் திருமணம் செய்துகொள்ளப் போவதாக பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். மீம்ஸ் என்பது அனைவரும் சந்தோஷமாக இருப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அதுவே ஒருவர் வாழ்க்கையைக் கெடுக்கும் என்றால் நிச்சயம் அதைப்பற்றி யோசியுங்கள். கண்டவிஷயங்களை சமூக வலைதளத்தில் பரப்பாதீர்கள்.

மேலும் அதிகாரப்பூர்வமற்ற பக்கங்களில் இருந்துதான் இதுபோன்ற செய்திகள் பரப்பப்படுகிறது. இந்த செய்தியைப் பதிவிடும் நபர்கள், வதந்தியிலிருந்து தப்பித்து விடுகிறார்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்களுடைய அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து செய்தியைப் போடுங்கள். அப்படிச் செய்தால் நிச்சயம் அதற்கு நான் பதில் அளிப்பேன். அதை விட்டுவிட்டு இந்த விஷயம் எல்லாம் செய்யாதீர்கள்” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்ட சானியா மிர்சா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் விவாகரத்து பெற்றார். இதைத்தொடர்ந்து சோயிப் மாலிக் மூன்றாவது திருமணமும் செய்துள்ளார். ஆனால், சானியா மிர்சா திருமணம் செய்துகொள்ளவில்லை. அதுபோல் கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியும் அவரது மனைவி ஹசின் ஜஹானிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார். அவருக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இலங்கை டூர்| ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்படாதது ஏன்? பின்னணியில் இருந்தது யார்?