“இந்தியாவை வீழ்த்துவது அவ்வளவு பெரிய விசயமில்லை என நினைத்தேன், ஆனால் இந்திய அணியை வீழ்த்திய பிறகு தான் அது எந்தளவு முக்கியமானது என்பதை உணர்ந்தேன்” - பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான்
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது என்றாலே அது கிரிக்கெட் திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது. அதனால் தான் அனைத்து உலகநாடுகளும் இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு அதிகமான கவனம் செலுத்துகின்றன.
கடந்த 2022 டி20 உலகக்கோப்பையின் போது கூட இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியம் 90,293 எண்ணிக்கையிலான ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் போது கிட்டத்தட்ட 1 லட்சம் மக்கள் அரங்கத்தை அதிரச்செய்தனர்.
2021 டி20 உலகக்கோப்பைக்கு முன்புவரை இந்திய அணியை தோற்கடித்ததே இல்லை என்ற மோசமான சாதனையுடன், 2021 டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடியது பாகிஸ்தான் அணி. “பச்சை சட்டையை போட்டாவே அடிப்போம்” என்ற இந்திய ரசிகர்களின் அதீத கொண்டாட்டத்திற்கு எல்லாம், சாட்டையை கொண்டு அடித்தது போல மிகப்பெரிய அடியை அடித்தது பாகிஸ்தான் அணி.
பந்துவீச்சில் மிரட்டிய ஷாகீன் அப்ரிடி ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி என்ற மாபெரும் வீரர்களின் ஸ்டம்பை தகர்ந்தெறிந்து, இந்திய அணியை 151 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினார். தொடர்ந்து 152 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி, ஒரு விக்கெட்டை கூட விட்டுக்கொடுக்காமல் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது ஒரு தோல்வியை இந்திய அணிக்கு வழங்கியது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 52 பந்தில் 68 ரன்களும், ரிஸ்வான் 55 பந்துகளில் 79 ரன்களும் என இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஜொலித்தனர்.
2021 உலகக்கோப்பையில் வாங்கிய மிகப்பெரிய அடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2022 டி20 உலகக்கோப்பையில் விராட் கோலியின் 82 ரன்கள் ஆட்டத்தால் பாகிஸ்தானை வீழ்த்தி பழிதீர்த்தது இந்திய அணி.
2021 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு, டிரெஸ்ஸிங் ரூம் மற்றும் பாகிஸ்தான் அணியில் என்ன நடந்தது என்பது பற்றி பேசியிருக்கும் முகமது ரிஸ்வான், இந்தியாவுக்கு எதிரான வெற்றி தங்களுக்கு எந்தளவு தேவையானதாக இருந்தது என்பது குறித்து பேசியுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் முகமது ரிஸ்வான், “இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது என்றாலே அதில் எப்போதுமே அழுத்தம் அதிகமாகவே இருக்கும். மக்கள் உலகக்கோப்பையில் அனைத்து போட்டிகளையும் பார்க்க மாட்டார்கள், ஆனால் இந்தியா-பாகிஸ்தான் மோதுகிறது என்றால் இருநாட்டின் ரசிகர்களை தாண்டி அனைத்து நாட்டைச்சேர்ந்த ரசிகர்களும் உட்கார்ந்து பார்க்கும் விளையாட்டாகவே எப்போதும் இரு அணிகளின் மோதல் இருந்துள்ளது.
2021 டி20 உலகக்கோப்பை போட்டிவரை உலகக் கோப்பையில் நாங்கள் இந்தியாவை வென்றதே இல்லை. அந்த போட்டிக்கு முன்னதாக பிசிபி தலைவராக இருந்த ரமீஸ் ராஜா எங்களைச் சந்தித்து, நீங்கள் இந்தியாவை வெல்ல வேண்டும் என்று கூறினார். அவர் அந்த வெற்றியை எப்படி எதிர்ப்பார்த்தார் என்றால், “நீங்கள் உலகக்கோப்பையை வெல்கிறீர்களோ இல்லையோ, ஆனால் இந்தியாவிடம் தோற்காதீர்கள்” என்று அழுத்தமாக சொன்னார்.
அந்த நேரத்தில் போட்டிக்கு முன் எங்களுடன் மேத்யூ ஹைடன் இருந்தார். அவர் என் மீதும் கேப்டன் மீதும் கைகளை போட்டுக்கொண்டு, நீங்கள் தற்போது எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டார். நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம், இப்போது எதையும் மண்டைக்குள் ஏற்றிக்கொள்ளாமல் அனைத்தையும் கடவுளின் கைகளில் விட்டுவிடுகிறோம் என்று கேப்டன் கூறினார்” என முகமது ரிஸ்வான் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
அதுவரை எந்த பெரிய போட்டியில் விளையாடாமல் இந்தியாவுடன் வெற்றது எப்படி இருந்தது என்று பேசியிருக்கும் ரிஸ்வான், “நான் அப்போதுவரை உலகக்கோப்பையிலும் சரி, அவ்வளவு பெரிய போட்டியிலும் சரி விளையாடியதே இல்லை, எனக்கு அதுதான் முதல் முறை. அதனால் நான் அந்த போட்டியை மிகவும் சாதாரணமாக உணர்ந்தேன், இதில் என்ன பெரியதாக இருந்துவிடப்போகிறது என்று நினைத்தேன்.
ஆனால் நாங்கள் வென்றதற்குபிறகு, பாகிஸ்தான் சென்றபோது உண்மையில் நாங்கள் என்ன சாதித்தோம் என்பதை நான் நன்றாகவே உணர்ந்தேன். அதற்குபிறகு நான் எங்காவது ஷாப்பிங்கிற்கு சென்றால் கூட, மக்கள் எங்களிடம் பணம் வாங்க மறுத்தார்கள். எங்களை அவ்வளவு பாரட்டி பேசினார்கள்” என்று ரிஸ்வான் பேசியுள்ளார். இதற்கு முன்பும் கூட ரிஸ்வான் மக்கள் பணம் வாங்கதது குறித்து பேசியுள்ளார்.